வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

பேல்பூரி

DIN | Published: 28th April 2019 10:09 AM

கண்டது
* (ராஜபாளையத்தில் ஒரு லாரியின் பின்புறத்தில்)
ஓடுறது தங்கம்
ஓட்டுறது சிங்கம்
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

* (மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
ஹோட்டல் மரணவிலாஸ்
- கே.ஆர்.உதயகுமார், சென்னை-1

* (நாகை மாவட்டத்தில் உள்ள ஒர் ஊரின் பெயர்)
வெள்ளிக்கிடங்கு
- கனக.கந்தசாமி, முத்துப்பேட்டை.

* (வேலூர்- வேலப்பாடியிலுள்ள பிள்ளையார்
கோயிலில் உள்ள வாசகம்)
தொலைத் தொடர்பை துண்டித்து வாருங்கள்...
அருகில் இருக்கும் இறைவனிடம் உறவாடி மகிழ.
- வெ.ராம்குமார், சின்ன அல்லாபுரம்.

யோசிக்கிறாங்கப்பா!
சொல்லாத வார்த்தை மட்டும் மவுனமில்லை...
சொல்லக் கூடாத வார்த்தையும் மவுனம்தான்
பர்வதவர்த்தினி, பம்மல்.

கேட்டது
* (திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் பயணியும் ஓட்டுநரும்)
"டிரைவர் சார்... விருதுநகர் வந்ததும் எழுப்பி
விட்டுடுங்க''
"என்கிட்டே சொல்லாதீங்க...
கண்டக்டர்கிட்ட சொல்லுங்க. 
நான் தூங்கினாலும் தூங்கிடுவேன்''
"என்ன சொல்றீங்க?''
"சும்மா சொன்னேன்''
- க.சரவணகுமார், நெல்லை.

* (ஏரலில் நட்டாரம்மன்கோவில் தெருவில் இரு பெண்கள்)
" ஏன்... தாயி பிள்ளைகளுக்கெல்லாம்
ஸ்கூலு லீவு உட்டாச்சு போல
தெரியுது... வீடே கலகலக்குது''
"இதுங்க அட்டகாசம் தாங்க
முடியலை... அடுத்த வருஷம் லீவே உடாத
பள்ளிக்கூடம் ஏதாவது இருந்தா சொல்லு...
அங்கின கொண்டு சேர்த்திட வேண்டியதுதான்''
"ம்... லீவே உடாத பள்ளிக்கூடமா...
அப்படி ஒரு பள்ளிக்கூடம் ஜெயில்லதான் இருக்கும்''
- அ.நந்தகுமார், ஏரல்.

எஸ்எம்எஸ்
என்னதான் படித்தாலும்,
படித்து முடித்து பின்பு
பேஸ்புக்கை எடைக்குப் போட முடியாது.
- பி.சி.ரகு, பள்ளிச்சேரி.

அப்படீங்களா!
வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, தூசி எல்லாம் கலந்து காற்று முற்றிலும் கெட்டுவிட்டது. மாசடைந்த காற்றை நாம் சுவாசித்தால் அது பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது. நுரையீரல், ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வாமை நோய், ஆஸ்துமா, புற்றுநோய் உட்பட பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 
காற்றில் மாசு கலக்காமல் தடுப்பது தனியொருவரால் மட்டுமே இயலாத காரியம். மாசு கலந்த காற்றைச் சுவாசிக்காமல் இருக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவுகிறவிதமாக வந்திருக்கிறது Breaze என்கிற முகமூடி. இது மாசு கலந்த காற்றை 99 சதவீதம் தூய்மையாக்குகிறது என்பதை அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் உள்ள நெல்சன் லெபாரட்டரீஸ் என்ற அதிகாரப்பூர்வமான சோதனை நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. 
இந்த முகமூடியில் சிறிய மின்விசிறி இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால் முகமூடி அணிந்தால் மூச்சுவிட கஷ்டமாக இருக்குமே என்று நினைக்கத் தேவையில்லை. 
இந்த முகமூடியில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். 
இதை அணிந்து கொண்டாலும், பிறரைச் சந்திக்கும்போது உங்கள் புன்னகை முகத்தைப் பிறர் பார்க்க முடியும். 
- என்.ஜே., சென்னை-116.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புழுதி
மைக்ரோ கதை
பேல்பூரி
சிரி... சிரி...
திரைக் கதிர்