திங்கள்கிழமை 22 ஜூலை 2019

ஜிம்மி காட்டிய வழி!

DIN | Published: 21st April 2019 09:39 AM

வாசலில் தெளிக்கும் தண்ணீர் தரையில் விழுகிற சப்தம்... "குப்பையைக் கொண்டு வந்து போடுங்க.....' என்கிற அறிவிப்பின் அடையாளமாக துப்புரவுத் தொழிலாளர் அடித்த மணியின் ஒலி... அடுப்படியில் மகள் கவிதா போடுகிற காபியின் மணம்... இவையெல்லாம் விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டதை வினாயகமூர்த்திக்கு உணர்த்தியது. வினாயகமூர்த்தி இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. "இப்போது எழ வேண்டாம்... இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருக்கலாமே...' உடம்பு அவரைக் கெஞ்சியது.
 கவிதா மணி ஏழாகப் போகிது... ஆபீஸ், கோர்ட்டு,. வக்கீல் வீடுன்னு அலையிற நான் எந்திரிச்சிட்டேன்... காலையில அஞ்சரையில இருந்து ராத்திரி பத்தரை மணி வரைக்கும் ஒழைக்கிற நீ அப்பவே எந்திரிச்சிட்ட... எல்.கே.ஜி. படிக்கிற பிரசாத் எந்திரிச்சுப் பல் தேய்க்கப் போய்ட்டான்... ஒங்கப்பாவுக்கு மட்டும் இன்னும் விடியல... ஒங்கப்பாவ எழுப்பி விடு... வெள்ளிக் கிழமையதுவுமா இன்னும் தூங்கினா வீட்டுல தரித்திரந்தான் தாண்டவமாடும்''
 சமையலறையில் வேலையாய் இருக்கிற கவிதாவிற்குக் கேட்கிறதோ இல்லையோ... படுத்திருக்கிற மாமனார் காதில விழ வேண்டும் என்பதற்காக குரலை உயர்த்தி கோபத்தை வெளிப்படுத்தினான் வாசுதேவன். மருமகனின் கோபக் குரல் வினாயக மூர்த்தியின் காதுகளில் விழவே செய்தது.
 "எல்லாரும் போல ராத்திரி பத்து மணிக்குத்தான் படுக்குறேன்... மத்தவுங்க படுத்த பத்து நிமிசங்கள்ல தூங்கிடுறாங்க... நமக்கு எப்பத் தூக்கம் வருதுன்னே சொல்ல முடியல... பார்வதியோட நெனப்பு வந்து படாதபாடு படுத்தி... ஒறக்கம் வர்ற நேரத்த ஒரு மணி ரெண்டு மணின்னு ஆக்கிப்பிடுது... ரெண்டு மணிக்கித் தூங்கி எப்பிடி அஞ்சுமணி ஆறு மணிக்கு எந்திரிக்கிறது... மருமகன்ங்கிற பந்தாவில அவரு வாய்க்கி வந்ததப் பேசிட்டுப் போறாரு... மருமகன்னா ரெண்டு கொம்பு மொளச்சிருக்கிறதா நெனப்பு... இப்பிடி மரியாத இல்லாமப் பேசுறத கவிதாதான் கண்டிக்கணும்... அவ எதுவும் கண்டுக்கிறதில்ல... பார்வதி இருந்தா இந்த நெலம வந்திருக்குமா...? அவ உயிரோட இருக்கும் போது அவளோட முக்கியத்துவம் தெரியல... இப்பத்தான் அவளோட அருமை புரியிது... என்னய அவ ஆயிரந்தடவ கூட ஏசுவா... பேசுவா.. ஆனா அடுத்தவுங்க என்னயப் பத்தி ஒரு வார்த்த கூட கொறச்சுப் பேச விடமாட்டா... அது மகளா இருந்தாலும் சரி...
 மருமகனா இருந்தாலும் சரி...'
 கவலைகள் தோய்ந்த எண்ணங்கள் மனதைக் கவ்வ படுக்கையைவிட்டு எழுந்தார் வினாயக மூர்த்தி.
 பார்வதி-வினாயக மூர்த்தி தம்பதியர் முப்பது ஆண்டுகள், ஆசிரியப் பணியைப் பூர்த்தி செய்து "ரிடையர்' ஆனவர்கள் "ரிடையர்' வாழ்க்கையை ஓகோவென்று இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு நிறைவுடன் வாழ்ந்து வந்தார்கள். அவ்வப்போது ஆன்மீகச் சுற்றுலா போய் வந்தார்கள். உறவினர், பழகியோர் பத்திரிகை கொடுத்தால் தவறாமல் விசேஷங்களில் கலந்து கொண்டார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கவிதா வீட்டுக்குப் போய் மகள், மருமகன், பேரன் ஆகியோருடன் மகிழ்வாய் பொழுதைப் போக்கினார்கள். இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகள் புரிந்து மன திருப்தி அடைந்தார்கள். அமைதியான நதியிலே ஓடிய வாழ்க்கை ஓடம் அளவில்லா வெள்ளம் வந்தது போல் ஆயிற்று.
 ஆம். சுகர், பிரசர், மூட்டுவலி முதலியன எப்படி இருக்கும் என்றே அறிந்திடாவள்தான் பார்வதி. காய்ச்சல் மண்டையடி என்று கூட ஒரு நாளும் படுத்தவளில்லை. அப்படிப்பட்ட பார்வதி, அன்று இரவு படுத்தவள் காலையில் எழுந்திருக்கவே இல்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்டது. நோய் நொடியில் அழுந்தாமல் போய்விட்டாள்... புண்ணியவதி... பூவோடும் பொட்டோடும் போய் விட்டாள். நல்ல சாவுதான்... அக்கம் பக்கத்தார் அபிப்ராயம் சொன்னார்கள். பார்வதிக்குக் கிடைத்தது நல்ல சாவு... வினாயக மூர்த்திக்கோ அது மோசமான வாழ்வின் தொடக்கமாயிற்று.
 பார்வதியின் இறுதிச் சடங்கு, ஏனைய சம்பிரதாயச் சங்கதிகள் முடித்த கையோடு கவிதா அப்பாவை அழைத்து வந்துவிட்டாள். வினாயக மூர்த்திக்கு வர மனமில்லைதான்... ஆனாலும் மகளின் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. "தனியா இங்க இருந்து சிரமப் பட வேண்டாம்... பேசாம எங்க கூட வந்திடுங்க...'' கவிதா அன்பாய் கூப்பிடும்போது என்ன சொல்லி மறுப்பது..?
 மகள் வீட்டுக்கு வந்த பிறகுதான் இங்கு வந்தது தவறோ என்று நினைக்கத் தோன்றியது. நிகழ்ந்த சம்பவங்கள் அவரை அப்படி நினைக்க வைத்தன. நேரத்திற்குச் சாப்பாடு, வேளைக்கு காபி இவற்றில் எந்தக் குறைகளும் இல்லை. மாப்பிள்ளையின் குத்தல் பேச்சுக்கள், மறைமுகச் சீண்டல்கள் வினாயக மூர்த்தியின் மனதைக் காயப்படுத்தின. மகளிடம் சொல்லிப் பார்த்தார். பிரயோஜனமில்லை.
 "எங்கப்பாவ ஏதாவது சொல்லி மனச நோக வைக்காதிங்கன்னு அவர்கிட்ட பல தடவ சொல்லிட்டேன்... கேக்க மாட்டேங்கிறாரு... என்ன செய்றது...? அவரு சொல்றத எதையும் காதில வாங்கிக்கிடாதிங்க'' என்கிற தினுசான பதிலோடு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள் கவிதா. இந்த விசயத்தை அவள் இதற்குமேல் பெரிதுபடுத்த விரும்பவில்லை.
 வினாயகமூர்த்தியும் அங்கே வெட்டிப் பொழுது போக்கவில்லை. முடிந்த அளவிற்கு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார். ரேசன் கடைக்குப் போவது... மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வருவது... மாதக் கடைசியில் பணத்தட்டுப்பாடு வருகிற போது பென்சன் பணத்தைக் கொடுத்து உதவுவது... போன்ற உதவிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார். ஏன்? ஜிம்மியைக் கூட... அதாவது அவர்களது வளர்ப்பு நாயை காலை மாலை வேளைகளில் வெளியில் இழுத்துப் போய்... அதன் இயற்கை அழைப்பைப் பூர்த்தி செய்து... வாரந்தோறும் அதற்கு மாமிசம் வாங்கிப் போடுவது... என்கிற வகையில் சொன்ன வேலைகள் மட்டுமல்ல... சொல்லாத வேலைகளையும் இழுத்துப் போட்டுத்தான் செய்கிறார்... இருந்த போதிலும் மாப்பிள்ளையின் அதட்டல் உருட்டல் இத்தியாதிகள் குறைந்தபாடில்லை.
 அன்று காலையில் வெளியில் சென்ற வினாயக மூர்த்தி மாலை வரை வீடு திரும்பவில்லை. கவிதாவிற்கு பதட்டம் பற்றியது. வாசுதேவனை அலைபேசியில் அழைத்து விசயத்தை தெரிவித்தாள்.
 "எங்க போயிடப் போறாரு... பக்கத்தில பிள்ளையார்பட்டி, குன்னக்குடின்னு கோயில்களுக்கு போயிருப்பாரு. கொஞ்ச நேரத்தில வந்திருவாரு. தேவையில்லாம மனசப் போட்டு நீயும் குழப்பி என்னயும் குழப்பாத''
 கணவனிடமிருந்து வந்த அலட்சியப் பதில் கேட்டு கண்ணீர் விட முடிந்ததே தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை.
 ஏழு மணி வாக்கில் இல்லம் திரும்பினான் வாசுதேவன். பொங்கி வருகிற அழுகையைக் கட்டுப்படுத்தியவாறு வீட்டில் விளக்கு கூட ஏற்றாமல் இருந்தாள் கவிதா. அவள் முகத்தில் படர்ந்திருந்த சோகம் பற்றிக் கண்டு கொள்ளாமல், ""ஜிம்மிக்கு சோறு வச்சியா?'' என்றான் வாசுதேவன். அப்போதுதான் ஜிம்மி ஞாபகமே கவிதாவிற்கு வந்தது.
 "அப்பாவைக் காணோம்கிற கவலையில் ஜிம்மிக்கு சோறு போட மறந்திட்டேங்க''
 "ஆறறிவு மனுஷன் எங்கயாவது கோயில் குளம்னு சுத்திட்டு வந்திடப் போறாரு... அஞ்சறிவு வாயில்லா ஜீவன எப்பிடி ஒன்னால மறக்க முடிஞ்சது...?''
 ஜிம்மி கட்டிப் போடப் பட்டிருக்கும் இடத்திற்கு ஓடினார்கள். அது வெற்றிடமாகக் காட்சி தந்தது. அதைக் காணவில்லை.
 "ஒனக்கு இரக்கமே கிடையாதிடி'' ஓங்கிக் குரல் கொடுத்ததோடு ஒன்றிரண்டு கடும் சொற்களை வீசிவிட்டு... வீட்டிலிருந்து வெளியேறினான் வாசுதேவன்.
 அங்குமிங்கும் அலைந்து ஜிம்மியைத் தேடினான். கண்டுபிடிக்க முடியவில்லை.
 இரவு ஒன்பது மணி இருக்கலாம். கண்களில் கண்ணீர் வடிந்தோட அவற்றை துடைத்தவாறு ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தனர்.
 கவிதாவிற்கு அப்பா எங்க போனாரோ... எப்பிடி இருக்காரோ என்கிற கவலை... வாசுதேவனுக்கு ஜிம்மியைக் காணவில்லை என்கிற கவலை. அப்போது வாசுதேவனின் அலைபேசி அழைத்தது.
 "நாங்க முதியோர் இல்லத்தில இருந்து பேசுறோம்... வினாயக மூர்த்தி யாரு ஒங்க மாமனாரா? மதியானம் இங்க வந்து சேந்தாரு... அவரோட வந்த நாய் ஒண்ணு அவரவிட்டு போகமாட்டேங்கிது... ஒங்க நாய்தானாமே... வந்து நாயைக் கூட்டிட்டுப் போங்க...''
 ஆட்டோ பிடித்து கவிதாவும் வாசுவும் முதியோர் இல்லம் போய்ச் சேர்ந்தார்கள். நவீன வசதிகள் நிறைந்த அறையில் வினாயக மூர்த்தி இருந்தார். அவரது இருக்கைக்கு கீழே ஜிம்மி படுத்திருந்தது. இவர்களைப் பார்த்ததும் வாலாட்டி வரவேற்றது.
 "என்னப்பா இப்பிடிப் பண்ணீட்டிங்க?'' கவிதா தேம்பினாள்.
 "எப்பிடிப் பண்ணிட்டேன்... சாப்பாடு சரியா தராட்டக் கூட பொறுத்துக்கிடலாம் கவிதா... வாய்க்கு வந்தபடி வயசுக்குச் கூட மரியாத கொடுக்காம பேசிக் காயப்படுத்தினா எவ்வளவு நாளைக்குப் பொறுத்துக்கிட முடியும்... இந்த நாய் அஞ்சறிவு ஜீவன்... நாஞ் செஞ்ச உதவிகளை மறக்காம எப்பிடியோ எடத்தக் கண்டு
 பிடிச்சு இங்க ஓடியாந்திருக்கு... நீங்க எங்கிட்ட வேலயும் வாங்கிக்கிட்டு என்னய விரக்தி அடையவச்சிட்டிங்க... அதுக்கு இருக்கிற நன்றி உணர்வில கால்வாசி கூட ஒங்கள்ட்ட இல்ல''
 கவிதா எதுவும் சொல்லத் தோன்றாமல் கண்கலங்கி நின்றாள். வாசுதேவனுக்கு வந்த அழுகையை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியே நெடுஞ்சாண் கிடையாக மாமனாரின் காலில் விழுந்து விட்டான்.
 "மாமா என்னய மன்னிச்சிடுங்க.... இந்த ஜிம்மி தான் நன்றியின் வடிவம்னு நிரூபிச்சிடுச்சு. எனக்கு பாடம் கத்துக் கொடுத்திருச்சு.... இனிமே இது மாதிரி நடக்காது... வாங்க வீட்டுக்குப் போவோம்''
 "நீங்க தவற உணர்ந்தத நெனச்சு ரெம்ப சந்தோசம்... மாப்பிள்ள... இங்க ஒரு மாசத்துக்குரிய பணம் கட்டியாச்சு... இந்த மாசம் மட்டும் இங்க இருந்திட்டு வர்றேன்''
 "வேண்டாம் இந்த ஹோமுக்கு நாம கொடுத்த நன்கொடையா இருக்கட்டும்... வாங்க போகலாம்''
 மனம் மாறி வற்புறுத்தும் மருமகனின் வார்த்தையை வினாயக மூர்த்தியால் மீற முடியவில்லை.

 செல்வகதிரவன்
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

முயற்சி

அதிகச் சூடு...ஏற்ற உணவு!
 

புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!
மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்!
சிரி... சிரி...