வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

ஐராவதம் மகாதேவன்: தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய கொடைகள்!

By - வீ.அரசு| Published: 02nd December 2018 12:00 AM

 

26.11.2018 அதிகாலை இவ்வுலகத்தை விட்டுச் சென்ற அறிஞர் ஐராவதம் மகாதேவன் (1930-2018) தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய அறிவுக் கொடைகளில் இரண்டை மட்டும் அவருக்கான அஞ்சலியாகப் பதிவு செய்வோம். 

-1924 இல் ஜான் மார்சல் (1876-1934) சிந்துசமவெளி நாகரிகம் என்ற தொல்பழம் நாகரிகத்தை உலகிற்கு அறிவித்தார்.  இந்த நாகரிகம் திராவிடர்கள் என்று அழைக்கப்படும் தேசிய இனத்துக்குரியது என்றும் அறிஞர்கள் உறுதி செய்தனர். இந்த ஆய்வில் அறிஞர் ஐராவதம் அவர்களின் பங்களிப்பு எத்தகையது?

- 1924  இல் கல்வெட்டறிஞர் கே.வி.சுப்பிரமணிய அய்யர் (1875- 1969) காலனிய தொல்லியல் ஆய்வாளர்கள் கோடிட்டுக் காட்டிய எழுத்துரு ஒன்றை ஆய்வு செய்து,

அவ்வெழுத்து பண்டையத் தமிழ் எழுத்து என்பதை உறுதி செய்தார். அவ்வெழுத்துரு "பிராமி' என்று பெயரிடப்பட்டது.  இந்த எழுத்துரு தொடர்பாக 
அறிஞர் ஐராவதம் அவர்கள் செய்த ஆய்வுகள் தமிழ்ச் சமூக வரலாற்றுக்கு எந்தெந்த வகைகளில் உதவுகின்றன?

சிந்து சமவெளி நாகரிகம் குறித்த ஆய்வுகள் 1924 முதல் பலரால் பல கோணங்களில் நிகழ்த்தப்பட்டன. சிந்து சமவெளி தொடர்பான அகழ்வாய்வுகளில்   கிடைத்த இலச்சினைகள் (நஉஅகந)  சுமார் ஐந்நூறுக்கும் மேல் ஆகும். இலச்சினைகளில் உள்ள  உருவங்கள், வரையப்பட்டுள்ள கோடுகள் ஆகியவற்றை ஆய்வுசெய்வதின் மூலமே அந்த நாகரிகம் பற்றி அறிய முடியும். ஆனால் அந்த இலச்சினைகள் தரவாக்கம் (இஞதடமந)செய்யப்படவில்லை. அவ்விதம் செய்தாலே ஆய்வுக்கு விரிவாகப் பயன்படுத்த முடியும். 

அறிஞர் ஐராவதம் அவர்கள்தாம் முதன்முதலில் அதனை முறைப்படுத்தி பதிவு செய்தார். அந்த அடிப்படை ஆவணத்தை 1977-இல் இந்திய தொல்லியல்துறை வெளிக்கொண்டு வந்தது. ""சிந்து சமவெளி எழுத்துகளின்  மூலவடிவம், அவை இடம் பெற்றிருக்கும் முறை, அதற்கான பட்டியல் எனும் பெயரில் 830 பக்கங்கள் கொண்ட  பெருநூலாக  அது அமைந்துள்ளது.  இதன் வருகைக்குப் பின் சிந்துசமவெளி இலச்சினைகளை  வாசித்து அறிவதில்  பெரும் மாற்றம் நிகழ்ந்தது.  ஐராவதம் அவர்களின் வாசிப்பில் சங்க இலக்கியத்தோடு சிந்துசமவெளி இலச்சினைகளுக்கு உள்ள உறவை விரிவாக ஆய்வு செய்துள்ளார்.  அவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதையும் நிறுவியுள்ளார்.  இவ்வகையில் திராவிடர்களின் தொல்பழம் வரலாற்றுக்கு இவரது பங்களிப்பு அளப்பரியது. 

1954 - இல் தமிழின் தொல்லெழுத்துருவான தமிழ் - பிராமி குறித்த ஆய்வை ஐராவதம் நிகழ்த்தி வந்தார். ஒரு மொழியின் தொன்மை என்பது அம்மொழியின் எழுத்துருவின்  தொன்மையோடு  இணைந்தது. கி.மு. 550 முதல் இந்த எழுத்துரு  இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இவர் கி.மு. 250 முதல் கி.பி.600க்கு இடைப்பட்ட காலத்து எழுத்துருக்களை ஆவணப்படுத்தியுள்ளார். 96 இடங்களில் உள்ள கல்வெட்டுகளை  ஒளிப்படமாகப் பதிவு செய்துள்ளார். பலராலும் பலகாலங்களில்  கண்டறிந்த இந்த கல்வெட்டுகளுக்கு ஆவண வடிவம் தந்தவர் இவர்தான். "தமிழின் தொல்பழம் கல்வெட்டுகள்: வரலாற்றுக்கு முன்பிலிருந்து  கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை' என்ற இந்தப் பெருநூல் தமிழ்ச் சமூக வரலாற்றின் முதன்மையான ஆவணம்.

இக்கல்வெட்டுகளில் உள்ள மொழி வரலாறு, சமய வரலாறு, தமிழ்ச் சமூக வரலாறு ஆகியவை தொடர்பான விரிவான  ஆய்வுகளைச் செய்திருக்கிறார். மெளரியன் பிராமி எழுத்துருவிலிருந்து தமிழ்ப்பிராமி எந்தெந்த வகைகளில் வேறுபட்டுள்ளது என்ற ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.  தமிழகத் தொல்லியல் அறிஞர்களிடம் தமிழ் பிராமி  குறித்து வேறுபட்ட  கருத்துநிலைகள் இருந்தாலும், அவற்றை தரவாக்கம் (இஞதடமந)   செய்த  பெருமை ஐராவதம் அவர்களுக்கே சேரும்.  பிராமி எழுத்துருக்களைக் கண்டறிதல், படித்தறிதல், அதிலுள்ள பொருண்மைகளை ஆய்வு செய்தல் என அனைத்து நிலைகளிலும் இவரது ஆய்வு மிகச் சிறந்தவொன்று.

ஓலை வடிவில் இருந்தவற்றை அச்சுவடிவிற்குக் கொண்டு வந்த சி.வை.தாமோதரம்பிள்ளை (1832 - 1901), உ.வே.சாமிநாதையர் (1855 - 1942) ஆகியோரின் பணி தமிழ் மறுமலர்ச்சிக்கு மூலமாக அமைந்தது.  அதில் ஐராவதம் மகாதேவனின் பணி, அறியப்படாத தமிழ்ச்சமூக வரலாற்றை அறியச் செய்ததாகும். தமிழ்ச்சமூகம் இவரை என்றும் கொண்டாடும்.

More from the section

நகைச்சுவையும் ஓவியங்களும்!
இரண்டு சிங்கங்கள்
மிகப்பெரிய  கோயில்  விளக்கு!
தேன்காரிகளின் ரீங்காரங்கள்
சிரி... சிரி... சிரி... சிரி...