காதல் என்பது இரு மனங்களில் மலரும் எண்ணங்களின் சோலை என 54 ஆண்டு கால காதல் திருமணத்தின் வெற்றியாகக் கூறுகிறார் காரைக்குடியில் பிரபலமாக வலம் வரும் சாமி. திராவிடமணி.
துள்ளித்திரிகின்ற வயதில் இனம்புரியாத ஈர்ப்பில் காதல் வலையில் வீழ்கின்ற இளசுகள் மத்தியில், காதலுடன் வாழ்க்கைப் பயணத்தில் பல தடைகளைத் தகர்த்து அதில் வெற்றி காண்பவர்களும் இருக்கிறார்கள். பல சூழ்ச்சிகள், எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் தோல்வி கண்டு காலமெல்லாம் நீங்கா நினைவுகளை சுமந்துகொண்டு வாழ்க்கையை வேண்டா வெறுப்பாக கடத்துபவர்களும் இருக்கிறார்கள். காதல் என்றால் அது மோதல் இல்லாத காதலாக இருக்கவேண்டும். அதிலும் இருவரும் இறுதிக்காலம் வரை சாதல் இல்லாத ஜோடிகளாக வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்.
அந்த வகையில் காதல் எண்பது எண்ணங்களில் சோலை என்கிறார் தனது காதல் இல்லறத்தில் நல்லறம் நடத்திவரும் காரைக்குடியைச் சேர்ந்த சாமி. திராவிடமணி அகவை 74. இவரது இல்லத்தரசி தி. செயலெட்சுமி அகவை 72. சாமி. திராவிடமணி காரைக்குடியில் தொழில் வணிகக்கழகத்தின் தலைவராக தற்போது இருந்துவருகிறார். மேலும் திராவிடர் கழகத்தின் மண்டலத்தலைவராகவும் உள்ளார். இவர் ஒரு பத்திரிகையாளரும், சமூக ஆர்வலரும்கூட. இக்காதல் தம்பதிக்கு இரண்டு மகன்கள். இருவருமே காதல் திருமணம். பேரன், பேத்திகளுடன் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறார்.
காதலர் தினத்தில் தனது காதல் வாழ்க்கையின் வெற்றியை நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:
காதல் திருமணம் என்றாலே சாதியை மறுத்தால் மட்டுமே முன்னிலையில் வரும். ஆண், பெண் இருவரும் மனம் திறந்து பேசிவிட்டு எதிர்கால வாழ்வை நிலை நிறுத்துவதே சிறப்பாகும். இந்நிகழ்வுகளை கடந்த காலம் முதல் இன்றுவரை திரைப்படங்களில் அனைத்துமே காதல்தான் முதலில்தோன்றும். இதற்கு வேறுகண்ணோட்டம் இருக்காது. தமிழகத்தில் எத்தனையே மனித உள்ளங்கள் மணம் ஏற்று சிறப்பான வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் செல்வங்களைப் பெற்று பேரப் பிள்ளைகள் வரை நன்றாக இருக்கின்றனர்.
ஏதோ ஒன்றிரண்டு பேர்கள் கருத்துவேறுபாடுகளால் பிரிந்து விடுவது ஒரு குறையே இல்லை. அப்படி கண்ணோட் டம் பார்த்தால் ஒரே ஜாதியில் முடிவுறும் திருமணங்களே மனமுறிவு பெற்று வருவதை காண முடிகிறது. எனவே, சாதி மறுப்போ, கலப்புத் திருமணங்களை மட்டும் ஏளனத்திற்கு ஆக வாய்ப்பு இல்லை. காதல் மனங்களை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் அவரவர் தனிமனித உரிமைச் சாசனமாகும்.
இதையும் படிக்க | காதலர் தினத்தின் ரத்த சரித்திரம்: யார் இந்த வேலன்டைன்?
என்னுடைய காதல் உயர்நிலைப்பள்ளியில் 1968 இல் தொடங்கி சாதிமறுப்புடன் இணைந்தோம். 54 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதுடன் மகன்கள் இரண்டு பேருக்கும் காதல் திருமணங்களே நடத்தியுள்ளோம். எங்கள் குடும்பத்தில் 8 காதல் மனங்கள், பல்வேறு சாதிகளைக் கொண்டது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என திராவிடக் குடும்பம். அனைவரும் உயர்கல்வி பெற்று வெளிநாடுகளில் வேலையில் சேர்ந்து சிறப்பான வருவாயுடன் வாழ்ந்து வருகிறோம்.
காதல் மணம் புரிந்தோர்களில் ஆன்மீக வழியிலும், நாத்திகத் தத்துவத்திலும் வெற்றிபெற்றவர்கள் இருக்கிறார்கள். சிலர் காதலர் திருமணத்திற்கு ஏற்காத குடும்பங்களும் உண்டு. அப்படியானவர்களை தவிர்த்துவிட்டு பிரிந்து சென்று உறுதியான வாழ்க்கையை அமைத்து நீண்ட காலம் கடந்த பின்பு வெறுப்புக்கு ஆளான பெற்றோர்கள் மனம் மாறியதும் ஏற்கும் நிலை பல ஆயிரம் பேர்களும் உண்டு.
இனி கடந்து செல்லும் எதிர்காலம், அறிவியல் வளர்ச்சியில் தொடரும் கோலங்கள். யார் மறுத்தாலும், தடுத்தாலும் இதுபோன்ற மாற்றங்களைச் சந்திக்கத்தான் வேண்டும். அதுதான் உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்றார்.