இத்தாலி நாட்டின் உம்ப்பிரியா நகரம். அங்கே கி.பி. 276 ஆம் ஆண்டுவாக்கில் கிறிஸ்தவ அருட்தந்தையாக இருந்தார் வேலன்டைன் என்பவர். அந்த நாட்டு மாமன்னன் இரண்டாம் கிளாடியசுக்கு காதல் என்றால் வேப்பங்காய். லவ் ஃபெயிலியரோ என்னவோ தெரியாது, நாட்டு குடிமக்கள் யாரும் கனவில் கூட காதலிக்கக் கூடாது என்று சட்டம் போட்டு விட்டான் அந்த மன்னன்.
காதலர்கள் சும்மா இருப்பார்களா? அல்லது சும்மா இருக்கத்தான் முடியுமா? இலைமறைவு காய் மறைவாக, திரைமறைவில் காதலிக்கத் தொடங்கினார்கள்.
இந்த காதலர்களுக்கு உதவத் தொடங்கினார் வேலன்டைன். காதல் இணைகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
இது மாமன்னனின் காதுகளுக்கு எட்ட, “வாய்யா வா” என்று வேலன்டைனை அழைத்து சிறையில் அடைத்து அவன் மரண தண்டனை அறிவித்தான்.
சிறையில் தலைமை அலுவலராக இருந்தவரின் மகள் பார்வையற்ற ஓர் இளம்பெண். அந்த பெண் வேலன்டைனிடம் பரிவு காட்டத் தொடங்கினாள். சிறையில் இருந்தபடி, ‘Ove Cures All’ என்று கூறி அந்தப் பெண் பார்வை பெறச் செய்தார் வேலன்டைன்.
பார்வை பெற்ற இளம்பெண் வேலன்டைனை காண ஆவலுடன் ஓடிவந்தபோது அவர் உயிருடன் இல்லை. பதிலாக, அந்த இளம்பெண்ணுக்கு அவர் விட்டுச்சென்ற ஒரு பிரியாவிடை குறிப்பு மட்டுமே இருந்தது.
‘உனது வேலன்டைனிடம் இருந்து’ (From Yoru Valentine) என்று மட்டும் அதில் எழுதப்பட்டிருந்தது.
வேலன்டைனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் காதல் கீதல் எதுவும் இருந்த மாதிரி தெரியவில்லை. முழுக்க முழுக்க அன்பின் வெளிப்பாடுதான் அது. அதன்பிறகு வேலன்டைன் புனித வேலன்டைன் ஆனார். காதலர்களின் பாதுகாவல் புனிதராக அவர் கருதப்படுகிறார்.
காதலுக்குத் தோழனான வேலன்டைன் பூவுலகில் இருந்து புறப்பட்டுப் போய்விட்ட நாள் ‘உலக காதலர் நாளாக’ உற்சாகமாக பலராலும், சிலருக்கு விளக்கெண்ணெய் குடிக்கும் குமட்டல் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் இனிய காதல் திருநாள் வாழ்த்துகள். ஆதலினால் காதல் செய்வீர்.
இதையும் படிக்க | காதலர் தினத்தின் ரத்த சரித்திரம்: யார் இந்த வேலன்டைன்?