காதலர் தினம்

காலங்கள் கடந்து வாழும் அம்பிகாபதி - அமராவதி காதல்

கே. பி. அம்பிகாபதி

காதல் என்பது அன்பின் வெளிப்பாடு. உணர்வு, உணர்ச்சி, பரவசம், தவிர்ப்பு இப்படி இனம் புரியாத மனித இயல்புகளின் கூட்டு அடையாளமாகக்கூடக் கருதலாம். அது மெளனமாய் பிறப்பெடுத்து மென்மையாய் பரிணமித்தாலும் சில நேரங்களில் துயரக் கதையாகி விடுவதையும் மறுக்க முடியாது.

ஆனாலும்,உலகில் எண்ணற்ற காதல், காதலர்களின் மறைவுக்குப் பின்னர் காலங்கள் பல கடந்தும் மக்களின் மனங்களில் உயிர் ஓவியமாக நிலைத்து காவியங்களாக வாழ்ந்து வருவது வியப்பை அளிக்கிறது. இதுதான் காதல் எவ்வளவு வல்லமையுடையது என்பதை பறைசாற்றும் அடையாளம்.

உலகில் பல காதல் கதைகள் இருக்கலாம். அவைகளில் சில காதல் கதைகள் மனித குல வாழ்வியல் வரலாறில் உலக அதிசயங்களில் ஒன்றாகவும், படைப்பிலக்கியங்களாகவும் உயிர்பெற்று சிதைக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது.

சலீம் -அனார்கலி, விக்டோரியா - ஆல்பர்ட், ஷாஜஹான் - மும்தாஜ், ட்ரிஸ்டன் - சோல்ட், நெப்போலியன்-ஜோஸ்பின், பாரீஸ் - ஹெலன், கிளியோபட்ரா - மார்க் ஆண்டனி, ரோமியோ - ஜூலியட் என புகழ்பெற்ற பல காதல் கதைகள் வரிசையில் அம்பிகாபதி- அமராவதி காதல் கதையும் அடங்கும்.

தமிழக மண்ணில் சமகாலம் வரையில் காதலுக்கு எதிரான வன்மங்கள், கெளரவ குற்றங்கள் நிகழ்வது வேதனையளிப்பதாகவே உள்ளது. இவை காதல் குறித்த புரிதல் குறைபாடு மற்றும் மதம்,சாதியம், பொருளாதாரம், அரசியல் சார்ந்த பாகுபாட்டின் அடிப்படையில் அரங்கேறுகிறது.

சில நேரங்களில் காதல் என்ற போர்வையில் நிகழும் மாறுபட்ட, வரம்பு மீறிய சம்பவங்கள் காதலுக்கான மரியாதையை கேலிக்கையாக்கி சிதைக்கவும் செய்வதை மறுக்க முடியாது.

ஆனால், இவைகளின் நடுவே, இதே மண்ணில் உருவாகி நூற்றாண்டுகள் பல கடந்தும் மக்களின் மனதில் மதிப்பு மிக்கதாக வாழும் காதல் காவியத்தின் கதையை நாம் அறிந்துக்கொள்வது அவசியமானது.

தமிழ் இலக்கியத்தின் ஊடே நாம்மால் அறியப்படும் கம்பர், தன் அழகுநடை எழுத்தால் இன்றளவும் வியக்க வைக்கும் கம்பராமாயணத்தை எழுதி அளித்தவர். இவரிடையே காணப்பட்ட ஆற்றல், கவித்திறன் காரணமாக கவிச் சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்டுகிறார்.

இவரது மகன்தான் அம்பிகாபதி. 'கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்' என்ற முதுமொழிக்கு ஏற்ப அம்பிகாபதியும் கவி பாடுவதில் ஆற்றல் பெற்றவனாக இருந்தான்.

கம்பர் வாழ்ந்த காலத்தில் ஆட்சிசெய்த சோழ மன்னன் குலோத்துங்கச் சோழனின் மகள் அமராவாதி. இருவருக்கும் மலர்ந்த காதல் கதைதான் இன்றைக்கும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

அந்த காலத்தில் ஆசிரியரின் வீடுகளுக்குச் சென்று கல்வி கற்பது வழக்கமாக இருந்துள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய கம்பரின் வீட்டுக்கு தன் மகள் அமராவதியை கற்றிட அனுப்பி வைத்தான் சோழ மன்னன். அமராவதியும் நாள்தோறும் கல்வி கற்க கம்பர் வீட்டுக்குச் சென்று வருவாள்.

ஒரு நாள் கம்பர் வெளியூர் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இருந்த கம்பரின் மகன் அம்பிகாபதி, அமராவதிக்கு கல்வி கற்றுக்கொடுத்துள்ளார். அப்போது அம்பிகாபதியிடம் காணப்பட்ட திறன் அமராவதியை ஈர்த்திருக்க வேண்டும். அதேபோல அம்பிகாபதிக்கும் அமாராவதி மீது விருப்பம் ஏற்படுகிறது. சமகாலத்தில் எழுதபட்ட ஒரு புதுக்கவிதையில்:

 ”விழிகளும் விழிகளும்
அடித்துக்கொண்டன
விழுந்து நொறுங்கியது
இதயம் ”

என்று சொல்வதைப்போல இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. காதல் இருவரையும் அடிக்கடி வெளியில் சந்திக்க செய்யும் அளவுக்கு மாறுகிறது.

இந்த விஷயம் மன்னனின் கவனத்துக்கு அரைகுறையாக சென்றுவிடுகிறது. இதனால் மன்னனும் அமராவதி மீது ஒருகண் வைத்து கவணிக்கிறான்.

ஒரு நாள் கன்னிமாடத்தில் நின்றிருந்த அமராவதியின் பார்வையில் அந்த வழியாகச் சென்ற அம்பிகாபதி தென்படுகிறான். அமராவதி பார்த்ததை அம்பிகாபதியும் கவனிக்கிறான். காதலர்கள் பார்த்துக்கொண்டால் எப்படி இருக்கும் அப்படியொரு காட்சி.

அம்பிகாபதியும் தன் கவி திறத்தால் அவளை பாடலாகவும் பாடிவிடுகிறான். இவர்களுக்குள் நடக்கும் இந்த ஊடலை மன்னனும் கவனித்துவிட, சந்தேகம் வலுக்கிறது.

பெரிய இடத்து பெண்ணைப் பார்க்கும் இளைஞனுக்கு என்ன நடக்குமோ அதுதான் அம்பிகாபதிக்கும் அன்று நடந்தது. அவனை அழைத்த மன்னன் கண்டிக்கிறான். ஆனால், அம்பிகாபதி எதையோ சொல்லி மடைமாற்றுகிறான். ஆனாலும், மன்னன் திருப்தி அடையவில்லை.

இந்த நிலையில், ஒரு நாள் அரண்மனையில் புலவர்களை அழைத்து சிறப்பித்த மன்னன் அவர்களுக்கு விருந்து படைக்கிறான். இந்த விருந்தில் கம்பருடன் அவரது மகனும் அழைக்கப்பட்டிருந்தான்.

அப்போது, புலவர்களுக்குத் தன் மகளான அமராவதியையும் சில பதார்த்தங்களை பரிமாறி உபசரிக்கச் சொல்கிறான் மன்னன்.

விருந்தின்போது, தன் மனம் கவர்ந்த நாயகி ஒரு கின்னத்தில் வைத்து உணவு பரிமாறும் காட்சி அம்பிகாபதியை வெகுவாக ஈர்த்தது.

தன்னையும் மறந்த அம்பிகாபதி, அமராவதியை மனதில் நினைத்து கவிதை ஒன்றை படைக்க முனைகிறான்.

இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய - என்ற வரியை அம்பிகாபதி பாடினான்.

இதைக் கேட்டதும்,மன்னனுக்கு பொருள்புரிந்தால் என்ன நடக்குமோ என்று துடித்துபோன கம்பர், பாடலின் பொருளை மாற்றி சமாளிக்கும் எண்ணத்தோடு கம்பர் அவசரம் அவசரமாக ஒருபாடலை பாடுகிறார்:

கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோதை வையம் பெறும்’ என்று முடிக்கிறார்.

தெருவில் கொட்டிக்கிழங்கை கூவி விற்றுக்கொண்டு செல்லும் பெண்ணை அம்பிகாபதி கூறியதைபோல பொருள்கொள்ளும்படி சமாளித்து
பாடலில் கூறுகிறான் கம்பன்.ஆனாலும் மன்னனுக்கு சந்தேகம் வலுத்துப்போனது.

கம்பன் வார்த்தைகளை அவன் பொருள்படுத்தவில்லை. பிரச்னைக்குத் தீர்வு காணவும், அம்பிகாபதியை தண்டிக்கவும் துடித்தான் மன்னன்.

அவைக்களப் புலவரான ஒட்டக்கூத்தரிடம் ஆலோசிக்கிறான் மன்னன்.

அந்த காலகட்டத்தில், கம்பனுக்கும் ஒட்டக்கூத்தருக்கும் இணக்கமில்லாத சூழல் இருந்து வந்தது.

ஒரு வழியாக தீர்வு காண்பதற்கான வழிமுறை கையாளப்பட்டது.

ஒருநாள் அரசபையில் புவலர் பெருமக்கள் கூடிய அரங்கில் சிற்றின்பம் தவிர்த்து நூறு பாடல்களை அம்பிகாபதி பாடிவிட்டால் அமராவதியை மணக்கலாம், தவறினால் மரண தண்டனை அளிக்கப்படும் என்று மன்னன் அறிவித்தான்.

இந்த போட்டி அம்பிகாபதிக்கு இப்போது உள்ள இளைஞர்கள் கூறுவதைப் போல 'லட்டு திண்பதைப்போல' என்று எண்ணினான். அதேநேரத்தில் நூறு பாடல்களை பாடி முடித்து மன்னன் விரும்பாத காதல் பாடலையும் கூடுதலாக பாடிவிடுவது என அவா கொண்டான் அம்பிகாபதி.

மகனின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட கம்பனும் போட்டியின் நிபந்தனைகளுக்கு சம்மதித்தான். பாடல்களை பாடிவிடுவது எளிது. ஆனால் அவற்றை எண்ணிக்கொண்டே பாடுவது தடுமாற்றத்தைக் கொடுத்துவிடும் என்ற தயக்கம் அம்பிகாபதிக்கு இருந்தது.

இந்த விஷயத்தில் உதவ முன்வந்த அமராவதி, தன் தோழி மூலம் ரகசியமான திட்டத்தை அம்பிகாபதிக்கு தெரியப்படுத்திவிடுகிறாள்.

ஒரு வழியாக போட்டி தொடங்குகிறது. திரை மறைவில் அமர்ந்திருந்த அமராவதி வைத்திருந்த பூக்களை ஒவ்வொரு பாடலின்போதும் ஒரு மலராக எடுத்து இடம் மாற்றி வைத்து பாடிய பாடல்களின் எண்ணிக்கையை உறுதிபடுத்துகிறாள்.  

அம்பிகாபதி நூறு பாடல்களைம் பாடிவிட்டதாக நினைத்த அமராவதி தன் காதலன் வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியோடு நூறு பாடல்களையும் பாடிவிட்டதற்கான சைகையை அம்பிகாபதிக்கு காட்டினாள்.

இதையறிந்த அம்பிகாபதி, நூறு பாடல்களை பாடிவிட்ட பெருமையில் ஆனந்தமடைந்தான். மேலும்,அவன் நினைத்ததைப்போல தன் காதலியை மனதில் வைத்து காதல் பாடல் ஒன்றையும் பாடி முடிக்கிறான்.

ஆனால், சபையில் இருந்த ஒட்டக்கூத்தர் எழுந்து 99 பாடல்களை மட்டுமே பாடியதால் அம்பிகாபதி தோற்று விட்டதாக அறிவித்தார். அப்போது அரங்கமே அதிர்ந்து போனது. நூறு பாடல்களையும் பாடிய பிறகு எப்படி தவறாகும் என்ற கேள்வி எழுந்தது.

போட்டியின் தொடக்கத்தில் பாடிய முதல் பாடல் கடவுளுக்கானது. அது காப்பு செய்யுள். அவை கணக்கில் வராது. மாறாக கடைசிப் பாடல் இளவரசி அமராவதியின் அழகை வர்ணித்து காதல் பாடலாக பாடியது நிபந்தனையை மீறிய செயல் என ஒட்டக்கூத்தர் விளக்கமளித்தார்.

அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணிய அம்பிகாபதி துடித்துப்போனான். போட்டியின் நிபந்தனை விதிகள் மீது புரிதல் இல்லாமல் அமராவதி அவசரப்பட்டு காப்பு பாடலையும் சேர்த்து நூறு என எண்ணிகையாக்கியதை நினைத்து துடித்துப்போனாள். கம்பன் தன் வாழ்நாளில் அடையாத கலக்கத்தை அடைந்தான். சபையில் இருந்தவர்களில் சிலரைத் தவிர பலர் பரிதாபபட்டனர். ஆனால், எதுவும் அம்பிகாபதியின் தரப்புக்கு ஆதரவாக இல்லை.

ஏற்கனவே திட்டமிட்டதுபோல அம்பிகாபதி கொலை களத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டான். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அரண்மையில் இருந்து ஓடிய அமராவதி, கொல்லப்பட்டுக்கிடந்த தன் காதலன் அம்பிகாபதியின் உடல் மீது விழுந்து கதறி அழுது உயிரை மாயித்துக்கொண்டாள். இவ்வாறாக அம்பிகாபதி- அமராவதியின் காதல் கதை முடிகிறது.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்த காதல் கதையில் வரும் சாயல்கள் யாவும் சம காலத்திலும் வெவ்வேறு பின்பங்களாக தொடர்வதுதான் வேதனையளிக்கிறது.

ஒரு நாட்டை ஆளுகிற மன்னனின் மகளை, அதுவும் ஒரு புலவனின் மகன் காதலிக்க அனுமதிப்பதா என்ற பாகுபாட்டின் கீழ் உருவான வன்மத்தின் அடையாளமாகக்கூட கருதலாம். அம்பிகாபதிக்கு நேர்ந்தது இன்றைக்கும் எங்கோ ஓர் இடத்தில் நேர்ந்திடும் கெளரவக் கொலை போன்றதாகக் கூட இருக்கலாம்.

ஆனால், எது எப்படியோ காலம் பல கடந்தும் மக்களிடம் கதையாக, காப்பியமாக, படைப்புகளாக இன்றைக்கும் அம்பிகாபதி - அமராவதியின் காதல் வாழ்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT