காதலர் தினம்

ஆல்பர்ட் - விக்டோரியா: அரச குடும்பக் காதல் கதை!

சுவாமிநாதன்

காவியங்களில் உள்ள காதல் கதையோ, திரைப்படங்களில் உள்ள காதல் கதையோ, வரலாற்றுப் பக்கங்களில் உள்ள உண்மைக் காதல் கதையோ.. ஏதேனும் ஒரு கதையிலுள்ள தலைவனோ, தலைவியோ நம் மனக் கதவுகளைத் தட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். தங்களது கதைகளால் நம்மைக் கவராமல் இருந்திருக்க மாட்டார்கள். நிஜ வாழ்வில் பொருத்திக்கொள்வதற்கான உதாரணமாகத் திகழாமல் இருக்க மாட்டார்கள்.

இதில் வரலாற்றுப் பக்கங்களில் நிறைந்துள்ள கதைகளில் இயல்பிலேயே ஒரு சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டிருக்கும். 

அப்படிப்பட்ட சுவாரஸ்யம் நிறைந்த காதல் கதையே ஓர் அரசிக்கும், ஓர் இளவரசருக்கும் இடையிலான இந்தக் காதல் கதை. பிரிட்டன் அரச குடும்பக் காதல் கதையாக இருந்தாலும், நம் வட்டார மொழியில் கூறவேண்டுமானால் ஒரு முறைப் பையன் - முறைப் பெண்ணின் காதல் கதைதான் இது.

விக்டோரியாவினுடைய தாயாரின் சகோதரர் மகன்தான் ஆல்பர்ட். இருவருக்கும் இடையே மூன்று மாதங்கள்தான் வயது வித்தியாசம்.

அரச குடும்பம் என்றால் நமக்கு ஆடம்பரம்தான் நினைவுக்கு வரும். ஆனால், ஆல்பர்ட் - விக்டோரியா குழந்தைப் பருவம் அதற்கு நேர்மாறானது. 

விக்டோரியா தனது 8-வது மாதத்திலேயே தந்தையை இழந்தவர். தாயின் வளர்ப்பில் தனிமையில் வளர்ந்தவர் விக்டோரியா. தாயும் சற்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய மனப்பான்மையுடையவராக இருந்தவர்.

இந்தப் பக்கத்தில் ஆல்பர்ட்டுக்குத் தந்தை இருந்தாலும், மகன்களிடம் அரவணைப்பையும் அன்பையும் வெளிக்காட்டிராதவராகவே இருந்துள்ளார். ஆல்பர்ட்டின் தாயை வலுக்கட்டாயமாக நாடு கடத்திய அவர், பெண்களுடனான உறவில் நாட்டம் உடையவராக இருந்திருக்கிறார். இப்படியொரு தந்தையாக இருந்துவிடக் கூடாது என்பதற்கான தவறான முன்னுதாரணமாக இருந்து ஆல்பர்ட்டுக்குப் பாடம் கற்பித்தவர் அவரது தந்தை.

இதன் விளைவுகளே, பின்னாளில் இருவரும் குடும்ப வாழ்க்கைக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

விக்டோரியாவுக்குத் தந்தை இல்லாததால், அவரது உறவினர்களே அடுத்தடுத்து ஆட்சி புரிந்து வந்தனர். அதேசமயம், அவர்களுக்கு வாரிசுகளும் இல்லை. இறுதியில் ஆட்சியிலிருந்த வில்லியம் காலமாக, விக்டோரியா திருமணம் ஆவதற்கு முன்பே ஆட்சிக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதன்பிறகு, அவருக்கு நிறைய வரன்கள் வந்தன. எனினும், ஓர் அரசியை மணப்பவனாக அல்லாமல் அதற்கு அப்பாற்பட்டுள்ள விக்டோரியாவை மணப்பவனையே விக்டோரியா தேடினார். இதனால் நிறைய வரன்களை விக்டோரியா நிராகரித்தார்.

தலைவன் - தலைவி சந்திப்பு:

இதனிடையே, 1836-இல் ஆல்பர்ட் ஜெர்மனியிலிருந்து லண்டன் வருகிறார். இதுவே இருவரது முதல் சந்திப்பு.

இந்த சந்திப்பு விக்டோரியா வாழ்வில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை ஆல்பர்ட் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்த உறவினர் பெல்ஜியம் அரசர் லியோபோல்ட் I-க்கு விக்டோரியா எழுதிய கடிதம் மூலம் உணரலாம். அந்தக் கடிதத்தில் ஆல்பர்ட்டின் அழகையும் வர்ணிக்கிறார். காதலில் விழுகிறார். 

இருவருக்கிடையே கடிதங்கள் பரிமாற, காதலும் பரிமாறுகிறது. இருவரது கடிதங்களும் சமீபத்தில் வெளிஉலகு வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

விக்டோரியாவுக்கு ஆல்பர்ட் எழுதிய கடிதம்:

"கடிதங்கள் அனுப்பி, என் மீதான அரவணைப்பை வெளிப்படுத்தி, நீ என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னை நெகிழ வைத்துள்ளது. இதற்கு எப்படி பதிலளிக்கப்போகிறேன் எனத் தெரியவில்லை. இத்தனை அன்பை நான் எப்படி பெற்றேன்? 

நான் காணும், கேட்கும் நிதர்சனத்துக்கு என்னால் இன்னமும் பழகிக்கொள்ள முடியவில்லை. என் வாழ்வை மேலும் பிரகாசமாக்குவதற்காக வானிலிருந்து வந்த தேவதை என்று மட்டுமே நம்பமுடிகிறது. நீ சந்தோஷமாக இருப்பதற்குத் தகுதியானவள். உன்னை மிகவும் சந்தோஷமாக வைத்திருப்பதில் நான் வெற்றி காண்பேன்.

என் உடலும், உள்ளமும் உள்ளவரை நான் உன் அடிமையே."

பரிமாற்றங்களின் நீட்சி, அக்டோபர் 15, 1839-இல் ஆல்பர்ட்டிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார் விக்டோரியா. 

திருமணத்துக்குப் பிறகு, தேன்நிலவுக்காக இரண்டு வாரங்கள் இடைவெளி கோருகிறார் ஆல்பர்ட். ஆல்பர்டின் விருப்பம் அதுவென்று தெரிந்தே, 'நான் ஒரு அரசி என்பதை நீ மறந்துவிட்டாய்' என தனது அன்புக்குரிய ஆல்பர்ட்டுக்கு விக்டோரியா கடிதம் எழுதுகிறார். அரசுப் பணிகள் இருக்கும் என்பதால், லண்டனைவிட்டு வெளியேற முடியாது என்கிறார் விக்டோரியா.

ஆல்பர்ட் மீது கொண்ட அன்பு ஆழமானதுதான் என்றபோதிலும், தனது பணிமீது கொண்ட பற்றும், பொறுப்பும் அதற்கு நிகரானது என்பதை விக்டோரியா வெளிப்படுத்தினார்.

பிப்ரவரி 10, 1840-இல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண நாள் இரவில் இருவரும் முத்தங்கள் பரிமாறிக்கொண்டதையும், இதுவரை உணர்ந்திராத அன்பை தான் உணர்ந்ததாகவும் விக்டோரியா வர்ணிக்கிறார். வாழ்வில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக விக்டோரியா இதனை தனது நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார்.

காதல் ஒருபுறம் இருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கையில் விக்டோரியாவுக்கு விருப்பமின்மையே அதிகமாக இருந்துள்ளது. குழந்தை வளர்ப்பில் அவருக்குப் பிரச்னை இருந்திருக்கிறது. குறிப்பாக தாய்ப் பால் கொடுப்பதில் விக்டோரியாவுக்குத் துளியளவுகூட விருப்பமில்லை.

எனினும், இவற்றுக்கு மத்தியில் 17 ஆண்டுகள் இடைவெளியில் இருவரும் 9 குழந்தைகளைப் பெற்றனர் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். 

பிரசவம் காரணமாக படிப்படியாக ஆட்சிப் பொறுப்பை ஆல்பர்ட் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

காதல் திருமணமாக இருந்தாலும், விக்டோரியா எரிச்சலடையக் கூடியவர். அவரது சிந்தனை மாறிக்கொண்டே இருக்கும். இதனால், இருவருக்குமிடையே நிறைய வாக்குவாதங்கள் வந்திருக்கின்றன. நீ உன் கட்டுப்பாட்டை இழக்கிறாய் என விக்டோரியாவுக்கு ஆல்பர்ட் ஒருமுறை எழுதிய கடிதம் இதற்கு உதாரணம். காதல் திருமணம் என்றால் அன்பை மட்டுமே பரிமாறிக்கொண்டிருக்கும் தட்டை வாழ்க்கையாக இருக்காது என்பதற்கு இவர்கள் உதாரணம். இவற்றுக்கு மத்தியிலும் இறுதிவரை ஆல்பர்ட் மீது விக்டோரியாவுக்கு இருந்த நல்ல எண்ணத்தில் மாற்றம் வந்ததில்லை என்பதே கவனிக்க வேண்டியது.  

திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒருமுறை திருமண நாள் உடை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தன் கதாநாயகன் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற விக்டோரியாவின் வெளிப்பாடாக இது குறிப்பிடப்படுகிறது. 

இப்படியாக ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், இந்தக் காதல் கதையானது நீண்ட நாள்களுக்கு நீடிக்கவில்லை. 1861-இல் ஆல்பர்ட் டைஃபாய்ட் காய்ச்சல் காரணமாக காலமானார்.

"ஒவ்வொரு அசைவையும் ஆல்பர்ட் அனுமதியுடனே நடத்தி வந்த நான், இனி வரும் நாள்களில் அவர் இல்லாது எப்படி கடக்கப்போகிறேன், கடினமானத் தருணங்களை அவர் இல்லாமல் எப்படி எதிர்கொள்ளப்போகிறேன்" என தன் வேதனையை மூத்த மகளுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் விக்டோரியா வெளிப்படுத்தியிருகிறார்.

இந்த இழப்பிலிருந்து மீளமுடியாத விக்டோரியா மூன்றாண்டுகளுக்கு பொதுவாழ்வில் தலைகாட்டாமல் இருந்தார். துயரத்திலிருந்து நிரந்தரமாக வெளிவர முடியாத விக்டோரியா, வேறொரு திருமணத்துக்குத் தயாராகாமல் ஆல்பர்ட் இறந்து அடுத்த 40 ஆண்டுகளுக்கு கருப்பு நிற உடையையே அணிந்திருக்கிறார்.

ஆல்பர்ட் மீது விக்டோரியா கொண்ட அன்பை இந்த 40 ஆண்டுகாலம் உணர்த்துகிறது. இதுவே, விக்டோரியா மறைந்து 100 ஆண்டுகளான பிறகும் இருவரது காதல் கதை இன்னும் நினைவலைகளாக நம் கால்களைத் தொட்டுச் செல்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT