காதலர் தினம்

அறம் செய்த ஆரணங்கு - கிளாரிந்தா

முனைவர் மணி. மாறன்

உலக வரலாற்றில் தோற்றம் பெற்ற அனைத்து உயிர்களும் அன்பு கொண்டுதான் வாழ்ந்துவருகின்றன. சிறிய உயிரினங்கள் முதல் மனிதர்கள் வரை காதலில்லா வாழ்வு இல்லை என்றே சொல்லலாம்.  காதல் வாழ்வில் ஏற்பட்ட வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி, அதனால் நன்மைகளும் விளைந்துள்ளன. தீமைகளும் ஆங்காங்கே உண்டு.

காதல் இருவர் கருத்தொருமித்து வாழ்வதே இன்பம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இத்தகு காதல் வாழ்வு என்பது சாமானிய மனிதர்களுக்கு மட்டுமல்ல, மன்னாதி மன்னர்களுக்கும் ஏற்பட்ட ஒன்றுதான். ஏன் கடவுளுக்கேகூட ஏற்பட்டதாக நம் புராண இலக்கியங்கள் கூறுகின்றன. கடவுளேகூட காதலுக்காக தூது போனதும் உண்டு. மாபெரும் சாம்ராஜ்யங்கள் எல்லாம் உருவாகி வளர்ச்சி பெற்றதும் காதலால்தான். அப்படி தோற்றம் பெற்ற சாம்ராஜ்யங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாய் சரிந்து போனதும் காதலால்தான். அது ஒரு வகையான ஈர்ப்பு. பலருக்கு ஏற்படாமல் போகும். பலருக்கு அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

அந்த வகையில் தமிழ் மண்ணின் வரலாற்றில் நடைபெற்ற ஒரு காதல் நிகழ்வு இது. தஞ்சையில் மராத்தியர் ஆட்சியும் அதன் மேலாதிக்கமாக ஆங்கில நிர்வாகமும் செயல்பட்ட காலகட்டத்தில் தஞ்சை மராட்டிய மன்னன் பிரதாபசிம்மனின் அவையில், அம்மன்னனுக்கு குரு நிலையில் இருந்த ஒரு மராத்திய பிராமணரின் பேத்தியே கிளாரிந்தாவாக (கி.பி. 1746 – 1806) மாறி மாபெரும் சமூக சேவையில் ஈடுபட்டார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் கேப்டன் ஹாரி லிட்டில்டன் என்ற ஆங்கில அதிகாரி தஞ்சையில் பணிபுரிந்து வந்தார். அன்றைய காலகட்டத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவி தீப்பாய்ந்து உயிரிழக்க வேண்டும் என்ற சமூக நிலைப்பாடு வழக்கத்தில் இருந்தது. சதி என்று அழைக்கப்பட்ட இதனை ஆங்கிலேய ஆட்சியாளர்களே தடைசெய்த வரலாறும் உண்டு. இந்த ராணுவ வீரன் செய்த பெரும் தியாகமும் காதலும்தான் ஒரு சமூக மாற்றத்தைத் தனி ஒரு பெண்ணாக நின்று கிளாரிந்தாவால் செய்ய முடிந்தது. அப்படி என்ன செய்தார் அந்த அம்மையார்?

பாளையங்கோட்டையில் தன் சொந்த செலவில் பொதுக்கிணற்றை மக்கள் பயன்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்தார். அதேபோன்று, தான் வாழ்ந்த ஒரு வீட்டினருகே ஒரு தேவாலயத்தையும் அமைத்துக்கொடுத்தார். இப்பகுதியில் இவர் கட்டிய தேவாலயம் முதல் தேவாலயம். இந்த அம்மையாருக்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்த ஸ்வார்ட்ஸ் பாதிரியார்தான் இந்த தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது ஒரு வரலாற்று முரண். இவர் கட்டிய தேவாலயம் இன்றும் உள்ளது. இவர் வெட்டிய கிணறு இன்று குப்பைக் கிடங்காக மாறிவிட்டது. இருந்தாலும் இவர் வெட்டிய கிணறு பாப்பாத்தி கிணறு என்றே அழைக்கப்படுகிறது.

பாளையங்கோட்டைப் பகுதியில் நம் குழந்தைகள் கல்வி பயில ஒரு பள்ளிக்கூடத்தை எழுப்பி அந்தப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு தன் சொத்துகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்று சம்பளம் வழங்கினார் கிளாரிந்தா. குளம் வெட்டுதல், கல்வி நிலையம் கட்டுதல்,  மருத்துவமனைகளில் தொண்டு புரியச் செய்தல் போன்ற அளப்பரிய பணிகளை செய்து வாழ்ந்து மறைந்தார் இவ்வம்மையார். இன்றும் நெல்லை மற்றும் பாளையங்கோட்டையில் பல இடங்கள் இவர் பெயரில் திகழ்கின்றன.

தஞ்சை அரண்மனையில் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் இறந்துபோக அவருடைய மனைவி சிறிய வயது பெண்ணான கோகிலா உடன்கட்டை ஏறுவதற்கு உரிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன. ஆனால், கோகிலா தீயில் இறங்கி இறந்துபோக விரும்பவில்லை. அவளைச் சிதையில் தள்ள முயற்சிக்கின்ற வேளையில் அவ்வழியே குதிரை மீது வந்து கொண்டிருந்த ஆங்கிலேய ராணுவ வீரன் புயலெனப் புகுந்து சென்று அவளைக் காப்பாற்றினான். தீக்குள் தள்ளப்பட்டு உயிரிழக்க வேண்டிய தருணத்தில் அப்பெண்ணைக் காப்பாற்றி பாளையங்கோட்டை அழைத்துச் சென்ற ஹென்றி லிட்டில்டன் என்ற அந்த ராணுவ வீரன் கோகிலாவைக் கிளாரிந்தாவாக மாற்றித் திருமணம் செய்துகொண்டான்.

மக்களின் அதிக எதிர்ப்புகளுக்கிடையில் அன்பு கலந்த நெஞ்சத்தோடு இருவரும் இணைந்து இல்லற வாழ்வை இனிதே நடத்தினர். அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினர். இருவரும் வாழ்வில் ஈருடல் ஓருயிராய் இணைந்து சில காலமே வாழ்ந்த நிலையில் லிட்டில்டன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான். கணவருடைய இறப்புக்குப் பிறகு தன்னை முழுமையாக சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார் கிளாரிந்தா அம்மையார். அறுபது வயது வரை வாழ்ந்து மறைந்த இப்பெண்மணி பாளையங்கோட்டைப் பகுதியில் அறச்செயல்கள் பல புரிந்து அங்கேயே இறந்துபோனார்.

அவர் பெயரில் நினைவிடம் அமைக்கப்பட்டு இன்றும் ராயல் கிளாரிந்தா நினைவிடம் என்று அழைக்கப்படுகின்றது. வரலாற்றில் சாதி,  இனம்,  மதம்,  மொழி கடந்து இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் சமூகத்தில் நல்ல பல அறச்செயல்களை ஏற்படுத்தியது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.

[கட்டுரையாளர்தமிழ்ப் பண்டிதர், 

சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT