நம்முன் காட்சிகள் பலவிதமாய் பலப் பல விதமாய் விரிகின்றன. ஒருபுறம் அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளும் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை அள்ளித்தெளித்து ஆரவாரத்தோடு, காதலர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன.
மறுபுறம் அமைதியாக, அழகழகான மலர்க் கொத்துகள், கண்களைப் பறிக்கும் அசைவூட்டங்களால் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதில் போட்டி போடுகின்றன சமூக ஊடகங்கள். காதல் கவிதைகள் இயல்பாக முகநூல்கள் மற்றும் பகிரிகளில் முகிழ்த்து உலா வருகின்றன. என் காதல் என் உரிமை எனத் துணிந்தவர்களுக்கு, பொது வெளிக் கொண்டாட்டம் அமளி துமளிப்படுகிறது. பயந்தவர்களுக்கு, ஓரஞ் சாரமாய் ஒதுங்கி நின்று பார்வையால் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
வணிக வியாபாரிகள் தம் வணிக லாபத்தை ஊதிப் பெருக்கும் உபாயமாய் காதலர் தினத்தை வரவேற்கிறார்கள். மற்றொருபுறம் தலையில் காவித் துண்டைக் கட்டிக்கொண்டு, கையில் தாலியுடன், இந்து சனாதன தர்மத்தை எப்பாடு பட்டேனும், என்ன விலை கொடுத்தேனும், பாதுகாத்திட வேண்டும் என அலைந்து திரிகிறார்கள் காவிக் கலாசாரக் காவலர்கள். இதற்கு முற்றிலும் எதிர்ப்புறமாக, 'ஆஹா. காதல் கொண்டாடப்பட வேண்டியது' என்று முற்போக்காளர்களும், 'சாதியை ஒழிக்கும் வழிகளில் இதுவும் ஒன்று' என மாற்றுப் பண்பாட்டுக் கொண்டாட்டக் களங்களைக் கட்டமைக்கிறார்கள் புரட்சியாளர்கள். ஆக, விதவிதமாய்க் காட்சிகள் விரிந்து வருகின்றன காதலர் தினத்தில்.
“ஏம்ப்பா… காதலர் தினம்… காதலர் தினம்ன்னு கூத்தடிக்கிறீர்களே. மொதல்ல காதல்ன்னா என்னப்பா? அதெச் சொல்லுங்கப்பா மொதல்ல?... என்றார் ஒருவர்.
“அட அதெ விடுங்கப்பா. காதல்ன்னா என்னன்னு பள்ளிக்கொடத்துல சொல்லிக் கொடுங்கப்பா மொதல்ல” என்று குரல் எழுப்புகிறார் வேறொருவர்.
“அட. இந்தக் காதல் என்பதே ஆண் மையச் சிந்தனை சார்ந்தது. அதை மாற்றி, இரு பாலருக்கும் பொதுவான உரிமையாய்ப் பார்க்க வேண்டும்” என்றொரு குரல் வெளிக்கிளம்புகிறது.
“இந்தக் காதல்தானப்பா சாதி மதத்தை ஒழிக்கும். எனவே, காதலை வளர்த்து எடுங்கப்பா” என்றொரு குரல்.
“ஏனுங்க. காதல் என்றாலே ஆண் பெண் சார்ந்தது மட்டுந்தானா? திருநங்கை திருநம்பி போன்ற மாற்றுப் பாலினருக்கு இல்லையா?” புதிய உரிமைக் குரல் வெடித்தெழுகிறது. ஆக, வித விதமாய்க் குரல்கள் உரத்து எழுகின்றன காதலர் தினத்தில்.
உண்மையில் யுகாந்திர யுகாந்திரமாய் இந்தப் பூமி இடையறாது சுற்றிச் சுழன்று வருகிறது என்றால், சுழற்சியின் மைய அச்சு காதல். அதிலிருந்துதான் பல்கிக் கிளைத்துப் பெருகி வருகிறது உயிரினம். உண்டு உயிர்த்து புணர்ந்து பெருக்கிக் கொள்வது உயிரின இயல்பு. ஆயின் மாந்த இனம் மட்டும்தான் காதலை, அன்பை, காமமாகச் சுருக்கிக் கொள்கிறது.
இங்கு காதல் என்கிற உணர்வின் சூட்சுமம் அறியாமல் காமமாக உருமாற்றிப் பரப்பி விடுகிறது கலைகளும், இலக்கியங்களும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும். ஆழ்ந்து அவதானித்தால் இதன் அடியில் பெரு வணிக லாப வெறி அமிழ்ந்து கிடக்கும். அது தன் நலனைப் பெருக்கிக்கொள்ள பல்வேறு அவதாரம் எடுக்கும். அந்த அவதாரங்கள் பண்பாட்டுக்குள், கலாச்சாரக் கூறுகளுக்குள் ஊடுருவி, சாதி, மதம் எனக் கிளைத்து இறுதியில் “எவன் செத்தா எனக்கென்ன?” “எத்தனை ஆணவப் படுகொலைகள் நடந்தால் எனக்கென்ன?” எனக்கு என் கல்லாப்பெட்டி நிறைய வேண்டும். லாபம் கொழிக்க வேண்டும். அதுவொன்றே குறி என தமக்குத் தாமே வடிவமைத்துக் கொள்கிறது.
அதனால்தான் இந்த தினக் கொண்டாட்டங்கள். காதலர் தினம், அன்னையர் தினம், அப்பாக்கள் தினம், அம்மாக்கள் தினம், அந்த தினம், இந்த தினம், நொந்த தினம், தினத்துக்காகவே ஒரு தினம் என பரிசுப் பொருள்கள் விற்பனைக் களங்களைக் கட்டமைத்துக்கொண்டு தனது லாபத் தொந்திகளை நிரப்பி வருகின்றன.
உண்மையில் காதல் என்பது இங்கு கட்டமைக்கப்பட்டிருப்பது போல ‘எதிர்ப் பாலின விழைச்சு’ அன்று. வேற்றுப் பாலினக் கவர்ச்சி அன்று. ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே எழுவது அன்று. மாறாக, காதல் என்பது கசிந்துருகும் நுண்ணுணர்வு. பக்தி இதனின் வெளிப்பாடு. தலையில் ‘பட்’ ‘பட்’டென்று குட்டி, உக்கி போட்டு, கன்னத்தில் ‘பட’ ‘பட’ வெனத் தட்டி, கண்ணீர் மல்கி, கசிந்துருகி, பனுவல் பாடி… பக்தி இதனின் வெளிப்பாடு.
நட்பு மற்றொரு வெளிப்பாடு. நட்பிற்கு ஒன்றென்றால் துடி துடித்து பதை பதைத்து இடுக்கண் களைய, உடன் நிற்க, ஓடோடி வரும் நட்பு மற்றொரு வெளிப்பாடு.
சமூக மாற்றம், சமூகப் புரட்சி என கொள்கை, கோட்பாடு சார்ந்து மானுட விடுதலைக்காய் இயங்குவது, போராடுவது, மற்றொரு மகத்தான வெளிப்பாடு. இங்கு மனித குலம் சாதியால், மதத்தால், சாதி வெறியால், மத அடிப்படை வாதத்தால், மனித குல உழைப்பை மட்டுமல்ல. இப்பூமிப்பந்தையே தன் லாப நுகர்வு வெறிக்கு ஒட்டச் சுரண்டும் முதலாளித்துவ, பெரு வணிக முதலைகளிடமிருந்து மனிதகுலத்தை விடுவிக்கப் போராடி, சிறைக் கொட்டடிகளில் அடிபட்டு நொந்து வாடுவது, வெந்து மடிவது, போராட்டக் களத்தில் தம் இன்னுயிரை ஆகுதி ஆக்குவது, இதையெல்லாம் மன மகிழ்ச்சியோடு எதிர் கொள்வது. ஏற்றுக் கொள்வது. எதற்காக? அது சக மனிதத்தின் மீதான காதலின்றி வேறென்ன?
ஆக… காதல் மகத்தானது. ஆதலினால் மானிடரே… காதல் செய்வோம், இம் மண்ணை, மனிதத்தை...