காதலர் தினம்

உலக நாடுகளில் காதலர் தி்னம்

14th Feb 2021 07:30 AM | எஸ்.ரவிவர்மா

ADVERTISEMENT

ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதல் ஜோடிகளும், காதலுக்காகத் தூது அனுப்புபவர்களும், ஒருதலைக் காதலர்களும் விதவிதமான ஆடைகள் அணிந்து காதலின் அடையாளமான ரோஜா, பெரும்பாலான பெண்களுக்கு பிடித்த கரடி பொம்மை, விதவிதமான சாக்லெட்கள் போன்ற பரிசுகளைத்  தங்கள் காதலருக்கு பரிசளிப்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்தியாவை பொருத்தவரை காதலர் தினத்தன்று அலுவலகம், கல்லூரிகளில் ஏதேனும் பொய் கூறி விடுப்பெடுத்து தனது காதலருடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது காலங்காலமாக நடந்து வருவது வழக்கம். இருப்பினும் தற்போது காதலர் தினத்தன்று வெளியே சென்றால் பிரச்சினையை கிளப்புவதற்கென சிலர் புறப்பட்டுள்ளதால், காதலர்களிடையே சிறு தயக்கம் ஏற்பட்டுள்ளது.

இப்படி இருக்கப் பிற நாடுகளின் காதலர் தினக் கொண்டாட்டத்தைப் பற்றி சற்றுக் காண்போம்.

பிரான்ஸ்

ADVERTISEMENT

காதல் நகரமான பாரிஸைத் தலைநகரமாகக் கொண்ட நாடு பிரான்ஸ். பாரிஸ் நகரத்திற்கு ஆண்டுதோறும் 3 கோடிக்கும் அதிகமான காதல் ஜோடிகள் சுற்றுலா வந்துசெல்கின்றனர்.

காதலர் தினத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வாழ்த்து அட்டையானது, 1415 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சார்லஸ் என்பவர் சிறைச்சாலையிலிருந்து தனது மனைவிக்கு காதல் கடிதங்களை அனுப்பியபோதுதான் முதல்முறையாக தோன்றியது என நம்பப்படுகிறது. 

பிரான்ஸ் முழுவதும் பிப்ரவரி 12 முதல் 14 வரை காதலர் தினக் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. அந்த காலகட்டத்தில் வீடுகள் மற்றும் மரங்களில் காதலர் தின அட்டையைக் கொண்டு அலகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நடைமுறை உலகின் மிக பழமையான பாரம்பரியமாக திகழ்கிறது.

டென்மார்க்

பல நாடுகளில் காதலர் தினத்தன்று பலர் பொய் கூறி விடுப்பு எடுக்கிறார்கள். ஆனால் டென்மார்க்கைப் பொருத்தவரை அதற்கு அவசியமில்லை. ஏனெனில் அன்றைய தினம் நாடு முழுவதும் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த நாட்டில் காதலர்கள் காதல் வாழ்த்து அட்டையில் வெள்ளைப் பூக்களை வைத்து, நகைச்சுவைக் கவிதைகள் எழுதிக் கொடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

தென் கொரியா

மற்ற நாடுகளுக்கு சற்றே வேறுபட்டு உள்ளது தென் கொரியா. காதலர் தினமானது பிப்ரவரி 14 முதல் ஏப்ரல் 14 வரை கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி இளம் பெண்கள் தங்களது காதலருக்குப் பரிசுகளை வழங்குவர். அந்தப் பரிசை பெற்றுக் கொள்ளும் ஆண்கள், மார்ச் 14 ஆம் தேதி வெள்ளை தினத்தன்று பெண்களுக்குப் பரிசு வழங்குவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.

காதலர் தினம் மற்றும் வெள்ளை தினத்தைக் கொண்டாடாதவர்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி கருப்பு தினத்தை கொண்டாடுவார்கள்.

பிலிப்பின்ஸ்

வழக்கமாக பிலிப்பின்ஸ் முழுவதும் உள்ள  காதலர்கள் வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடித் திருமணம் செய்து கொள்வதைப் பாரம்பரியமாக கொண்டுள்ளனர். இந்த திருமணங்களுக்கு அரசாங்கம் சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இங்கிலாந்து

காதலர் தினத்தன்று இங்கிலாந்து நாட்டுப் பெண்கள் தங்களது வருங்காலக் கணவருக்கு தலையணைகளில் ஒவ்வொரு மூலையிலும் ஒரு இலை, தலையணையின் நடுப்பகுதியில் ஒரு இலையென 5 இலைகளைக் கொண்டு அலங்கரித்துப் பரிசளிப்பார்கள்.

இத்தாலி

இத்தாலி நாட்டில் காதலர் தினத்தை வசந்த விழாவாகக் கொண்டாடுவார்கள். நாட்டின் ஒரு பகுதியில் காதலர் தினத்தன்று, இளம் வயதுடையோர் அதிகாலையில் எழுந்து பொது இடங்களில் கூடி இசை அமைத்து கவிதைகள் பாடுவதைப் பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.

மற்றொரு பகுதியில், திருமணமாகாத பெண்கள் அதிகாலை எழுந்து வாசலில் நிற்கும்போது யாரை முதலில் பார்க்கிறார்களோ அவர் அல்லது அவரைப் போன்ற தோற்றம் உடையவருடன் ஒரு ஆண்டிற்குள் திருமணம் ஆகும் என்பது நம்பிக்கையாக வைத்துள்ளனர்.

மேலும், இந்நாட்டில் காதலர்களுக்குப் பரிசாக நான்கு மொழிகளால் காதல் வசனம் பொறிக்கப்பட்ட சாக்லெட்களை வழங்குவார்கள். 

பல்கேரியா

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல்கேரியா அதன் சொந்த பாணியில் காதலர் தினத்தை கொண்டாடுகிறது. அன்றைய தினத்தை மதுபான தயாரிப்பாளர்கள் தினமாகவும் கொண்டாடுகின்றனர்.

அந்நாட்டில் உள்ள இளம் காதலர்கள் மதுவிடுதிக்குச் சென்று மது அருந்தியபடியே காதலர் தினத்தைக் கொண்டாடுவார்கள்.

வேல்ஸ்

தென்மேற்கு பிரிட்டன் பகுதியில் உள்ள வேல்ஸில் காதலர் தினம் மிகவும் தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்டில் காதலர் தினத்தை ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடி வருகின்றனர்.

அன்றைய தினத்தில் தங்களது காதல் ஜோடிக்கு, கைவினைப் பொருள்களாலான மரக் கரண்டிகளைப் பரிசாக வழங்குவதைப் பாரம்பரியமாக வைத்துள்ளனர்.

பல்வேறு மொழிகள் பேசக்கூடிய உலக நாடுகளில் வெவ்வேறு பாரம்பரியத்துடன் காதலர் தினத்தைக் கொண்டாடினாலும், காதலின் மொழி சாதி, மதத்தை கடந்த அன்பு மட்டுமே. 

Tags : valentinesday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT