காதலர் தினம்

காதலியின் நினைவாக சத்திரம்

14th Feb 2021 07:45 AM | வி.என். ராகவன்

ADVERTISEMENT

காதல் நினைவுச் சின்னங்களில் புகழ்பெற்றது தாஜ்மகால். இதேபோல, பல மன்னர்களும் தங்களது காதலிக்காக நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளனர். இந்த வரிசையில் தஞ்சாவூர் இரண்டாம் சரபோஜி என்கிற மராட்டிய மன்னரும் ஒருவர்.

கி.பி. 1777 - 1832 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த இவர் 1798 இல் அரசப் பதவியை ஏற்றுக் கொண்டார். கலை, இலக்கியம், மருத்துவம், ஆராய்ச்சி என பல்துறை வித்தகராகப் போற்றப்பட்ட இவருக்கு இரு மனைவிகள் இருந்தனர். இத்திருமணத்துக்கு முன்பாகவே முத்தாம்பாளை மணம் செய்தார்.

மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி

இளம் வயதிலேயே காலமான முத்தாம்பாள், தான் இறப்பதற்கு முன்பு தனது பெயரில் அன்ன சத்திரம் அமைக்க வேண்டும் என மன்னரை வேண்டிக் கொண்டார். இதன்படி, முத்தாம்பாள் நினைவாக ஒரத்தநாட்டில் அன்ன சத்திரத்தை நிறுவினார் மன்னர் இரண்டாம் சரபோஜி. இது முத்தாம்பாள் சத்திரம் என்றும், முக்தாம்பாள் சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.

ராமேசுவரம் செல்லும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட இச்சத்திரம் 1802 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள் திறக்கப்பட்டதாக போன்ஸ்லே வம்ச சரித்திரம் கூறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மராட்டிய மன்னர்களால் எழுப்பப்பட்ட சத்திரங்களில் மிகப் பெரியது இதுவே. அரண்மனை போல கட்டப்பட்டுள்ள இச்சத்திரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கலைநயமிக்க ஊஞ்சல் மேடை, அடித்தளத்திலும், மேல் தளத்திலும் அழகிய வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

முத்தாம்பாள் சத்திரம்

இதில், நாள்தோறும் 3 வேளைகளும் உணவு வழங்கப்பட்டது. இதில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் கட்டணம் இல்லாமல் நடத்த அனுமதிக்கப்பட்டது. இச்சத்திரத்துக்கு உமையாள்புரத்திலிருந்து கி.பி. 1825 ஆம் ஆண்டில் 13,007  கலங்கள் நெல் அனுப்பப்பட்டது. இதன் மூலம் அச்சத்திரத்தின் உணவுச் செலவு எவ்வளவு ஆனது என்பதை அறியலாம்.

இச்சத்திரத்துக்கு ஆங்கிலேயரான ரெசிடென்ட் ஜான் ஃபைஃப் 1825 ஆம் ஆண்டில் சென்றார். அங்கிருந்த 5 கல்வி நிலையங்களைப் பார்த்த அவர் 641 பேர் கல்விப் பயின்று வருவதையும், ஒரு நாளைக்கு மூன்று வேளைகளும் 4,020 பேர் சாப்பிடுவதையும் அறிந்தார். இதற்காக ஓராண்டுக்கு 45,000 கலம் நெல் வருவதும், பணியாள்களுக்கு மாத ஊதியமாக மொத்தம் ரூ. 9,000 செலவானதும் ஆவணத்தின் மூலம் தெரிய வருகிறது.

   அரண்மனை வளாகத்திலுள்ள இரண்டாம் சரபோஜி சிலை  

அக்காலத்தில் இச்சத்திரத்துக்கு தென்னமநாடு, புதூர், கண்ணந்தங்குடி கிழக்கு, வன்னிப்பட்டு ஆகிய கிராமங்கள், பிற நில மானியங்கள் மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூ. 50,000 வருவாய் கிடைத்துள்ளது.   இதேபோல,  இரண்டாம் சரபோஜிக்கு முன்பு ஆட்சி செய்த பிரதாபசிம்மன் தனது மனைவிகளான சக்வாரம்பா பாயி, திரெளபதாம்பாள், மூன்றாவது மனைவி யமுனாம்பாள், இரண்டாம் துளஜாவின் மனைவிகளான இராஜசாம்பாள்,  இராசகுமராம்பா,  மோகனா சாஹேபா, மூன்றாவது மனைவி சுலக்சணாபாயி சாகேப் ஆகியோர் பெயரிலும் அன்ன சத்திரங்கள் இருந்தன.

மராட்டியர்கள் ஆட்சிக் காலத்தில் 1743 - 1837 ஆம் ஆண்டுகளில் 20-க்கும் அதிகமான சத்திரங்கள் இருந்தன. பெரும்பாலான சத்திரங்கள் மராட்டிய மன்னர்களின் மனைவி, காதலிகள், தாய், இஷ்ட தெய்வத்தின் பெயரில் அமைக்கப்பட்டன. ராமேசுவரம் வரை யாத்திரை செல்லும் பொதுமக்களும், பக்தர்களும் தங்கி இளைப்பாறுவதற்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் கட்டப்பட்ட இந்தச் சத்திரங்களில் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் உணவு அளிக்கப்பட்டுள்ளது.

முத்தாம்பாள் சத்திரம்

கோடைக் காலத்தில் சில இடங்களில் தண்ணீர்ப் பந்தல்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சத்திரத்துக்கும் சில கிராமங்கள் மானியமாக அளிக்கப்பட்டன. அக்கிராமங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் இச்சத்திரங்களை நிர்வகிப்பதற்குச் செலவிடப்பட்டது. மானியமாக வழங்கப்பட்ட கிராமங்களிலுள்ள நிலங்களில் விளையும் தானியங்களைக் கொண்டு உணவு தயாரித்து சத்திரங்களில் வழங்கப்பட்டு வந்தது.

மராட்டிய ஆட்சிக்குப் பிறகு வந்த ஆங்கிலேயர் காலத்திலும் இச்சத்திரங்கள் செயல்பட்டு வந்தன. நாடு சுதந்திரமடைந்த பிறகும் இச்சத்திரங்கள் மூலம் மக்கள் பயனடைந்து வந்தனர்.

குறிப்பாக, தஞ்சாவூர், ஒரத்தநாடு, நீடாமங்கலம், ராசாமடம் போன்ற இடங்களில் உள்ள சத்திரங்கள் பள்ளி மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிகளாக முன்பு செயல்பட்டு வந்தன.

இச்சத்திரங்களை நிர்வகிப்பதற்காக மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட சத்திர நிர்வாகம் என்ற தனிப்பிரிவு இருக்கிறது. தஞ்சாவூர் சத்திர நிர்வாகத்துக்குள்பட்ட பல கிராமங்களில் அவற்றுக்கான நிலங்கள் இன்றும் உள்ளன. இதற்கான குத்தகையை மட்டும் சத்திர நிர்வாகம் வசூலித்து வருகிறது. 

ஆனால், பராமரிப்பின்மை காரணமாக இச்சத்திரங்களில் முத்தாம்பாள் சத்திரம், சைதாம்பாள் சத்திரம் உள்பட பல சத்திரங்கள் சிதலமடைந்துவிட்டன. பல சத்திரங்கள் செடி, கொடிகள் ஆக்கிரமித்துவிட்டன. சத்திரங்களின் கட்டுமானங்கள் பலவீனமடைந்து வந்ததால், மாணவர் விடுதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மராட்டியர் காலச் சத்திரங்கள்

இராசா சத்திரம் (மல்லியம்)
அம்மாசத்திரம் (திருபுவனம்)
சக்வாராம்பாள் சத்திரம்
இராசாம்பாள்புரம் சத்திரம் (தாராசுரம்)
வரதப்ப ஐயர் சத்திரம் (திருவையாறு)
நெடார் சத்திரம் (நெடார்)
லட்சுமிராஜபுரம் சத்திரம் (பள்ளியக்ரஹாரம்)
வெண்ணாறு சத்திரம் (வெண்ணாறு)
சிரேஸ்சத்திரம் (தஞ்சாவூர்)
இராசகுமராபாய் சத்திரம் (சூரக்கோட்டை)
சைதம்பாள் சத்திரம் (சைதம்பாள்புரம்)
யமுனாம்பாள் சத்திரம் (நீடாமங்கலம்)
முத்தாம்பாள் சத்திரம் (ஒரத்தநாடு)
சேதுபாவா சத்திரம் (சேதுபாவாசத்திரம்)
மகாதேவப்பட்டினம் சத்திரம் (மகாதேவப்பட்டினம்)
காசாங்குளம் சத்திரம் (பட்டுக்கோட்டை)
மோகனாம்பாள்புரம் சத்திரம் (இராசாமடம்)}
அம்மணி சத்திரம் (வேளங்குளம்)
திரௌபதாம்பாள்புரம் சத்திரம் (மணமேல்குடி)
இராசகுமாராம்பாள்புரம் சத்திரம் (மீமிசல்)
ராமேசுவர சத்திரம் (இராமேசுவரம்)
சேதுக்கரை சத்திரம் (தனுஷ்கோடி) 

அன்று அன்ன சத்திரங்கள் வைத்து ஆயிரமாயிரம் பேரின் பசியாற்றியிருக்கிறார்கள், இன்று நம்மால் அவற்றைப் பராமரிக்கக்கூட முடியவில்லை என்பதுதான் பெரும் பரிதாபம்!

Tags : valentinesday
ADVERTISEMENT
ADVERTISEMENT