காதலர் தினம்

தனித்து நிற்கும் காதல்!

14th Feb 2021 07:15 AM | எஸ். மணிவண்ணன்

ADVERTISEMENT

காதலில் திளைத்தவர்களெல்லாம் நிகழ்கால பூமியில் இருப்பதே இல்லை. காரணம் காதல் ஒரு தனி உலகம்.

காதல் உலகம் சிலருக்கு நிகழ்வுகளால் நிரம்பியது. சிலருக்கு நினைவுகளால் நிரம்பியது. நிகழ்வுகளால் நிரம்பிய காதலை கொண்டவர்கள் பாக்கியசாலிகள்.

நினைவுகளால் வாழ்பவர்கள் கிளை முறிந்த மரத்தினைப் போன்றவர்கள். இதில் வாழ்தல் சாத்தியம். ஆனால் மகிழ்தல் என்பது பிறகு வீசும் வசந்தத்தை ஏற்றுக்கொள்பவர்களாக இருக்க வேண்டியுள்ளது.

காதலின் நினைவுகள் வாழ்வின் கடைசி நாள்கள் வரைக்கும் ஏதோ ஒரு காரணி மூலம் நினைவுத்தூண்டல் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும்.

ADVERTISEMENT

உடலின் ஏதோ ஒரு மூலையில் சில நொடிகள் அனிச்சையாக ஏற்படும் வலியைப் போன்று எப்போது தோன்றுமென்று தெரியாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். அந்த வலிக்காக நாம் அழுவதுமில்லை. அதனை உணராமல் இருப்பதுமில்லை.

நினைவுகளில் இருவகை உண்டு. ஒன்று பரஸ்பரம் காதலித்ததன் விளைவாக விளைந்த நினைவுகள். மற்றொன்று ஒருவர் மட்டுமே காதலித்து அதனால் அனுபவித்த தருணங்களால் நிரம்பிய நினைவுகள்.

நினைவுகளை விரும்பாதவர்கள் நிம்மதியற்றவர்கள் என்ற கூற்றை மெய்யாக்குவது காதல் தான். மறுபுறம் இந்தக் கூற்றை பொய்யாக்கி முழுக்க முழுக்க நினைவுகளால் வாழ்ந்து சளைக்காததும் காதல் தான். எனில் இந்த இரண்டையுமே அதிகம் அனுபவிப்பவர்கள் ஒருதலைக் காதலர்களாகவே இருக்கின்றனர்.

நம் மீது பிறர் வைப்பதை அல்லது பிறர் மீது நாம் வைப்பதை முழுமையாக உணர்ந்த காதல் துறவிகளைப் போன்றது. குறிப்பாக ஒருதலைக் காதலர்கள் அனுபவிக்கும் உணர்ச்சிப் பெருக்குகளும், வலிகளும், மகிழ்ச்சிகளும் புறத்தில் புலப்படாத அளவிற்கு சலனமற்றவை.

அழாத கண்களைப் போன்று வெளிப்படுத்தாத மனதினை உடைய இத்தகையவர்களிடம் ஊமை வெயில் நிழல்போல சோகம் ஒரு புலப்படாத திரையாய் இருந்துகொண்டே இருக்கும்.

வெளிப்படுத்துவதுதானே காதல் எனலாம்.  உண்மையில் உணர்வதுதான் காதலாகிறது. காதலை அங்கீகரிக்கத்தான் வெளிப்படுத்துதல் அவசியமாகிறது. ஒருதலைக் காதல்கள் இந்த அங்கீகாரத்திற்காகத்தான் ஆயுள் முழுவதும் கரைத்துக்கொண்டிருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய விரதம் என்பது மற்ற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் வாழ்வது தான். ஒருவகையில் இதுவும் அன்பையே அடித்தளமாக கொண்டுள்ளது. அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய விரதம், வெளிப்படுத்தாத காதலை சுமந்துகொண்டு நடமாடும் ஒருதலைக் காதல் தான்.

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் தான் வாழ்தல் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய காலம் முழுவதையும் செலவழித்துக்கொண்டிருப்பவர்கள் அவர்கள்.

குடி, போதை போன்ற பழக்கத்திற்கு உள்ளாகும் ஒருதலைக் காதலர்கள் புனிதத்தை இழப்பதாகத் தோன்றலாம். ஆனால் அவர்கள்  ஆயுளைத்தான் இழக்கிறார்களேத் தவிர புனிதத்தை இழப்பதில்லை. விரதத்தின் புனிதம் ஒருபோதும் கலங்கப்படுவதில்லை.

காதலும், காதலர்களும் எப்படி உலகம் முழுவதுமே மாறுபட்டிருப்பதில்லையோ, அதுபோன்று தான் ஒருதலைக் காதலும், ஒருதலைக் காதலர்களும்.  படித்தவர், படிக்காதவர், கிராமவாசி, நகரவாசி என யாருக்கும் வேறுபாடு காட்டுவதில்லை. சமரசமின்றி பூமியை நனைக்கும் மழைநீரைப் போன்று, எல்லோர் மனதிலும் ஈரம் பிடித்து நிற்கும்.

காதலின் அங்கீகாரம் பெற்று கவிதை எழுதுபவர்களை விட காதலித்து அந்த அங்கீகாரத்திற்காக காத்திருப்பவர்களும், அங்கீகாரம் கிடைக்காமல் போனவர்களும் எழுதிய கவிதைகளே மொழிகளில் அதிகம்.

கவிஞர்கள் காதல் கவிதைகளை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றனர். அதனைப் படிப்பவர்கள்தான் காதலிப்பவர்களாக உள்ளனர் என்ற கவிதை அதனை சாத்தியமாக்குகிறது.

காதலில் விழுந்து கவிதை எழுதாத ஆண்களோ பெண்களோ உலகின் இருக்கின்றனவா என்ன?. படிப்பறிவில்லாத பலரையும் படைப்பிலக்கிய பிரியர்களாக்கி அழகு பார்த்தது காதல். 

காதலையும், காதலிப்பவர்களையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு எழுதவைத்து பல காதல் முனைவர்களை உருவாக்கியது. தனது காதலியை நிலவோடு ஒப்பிட்டு கவிஞன் அல்லது காதலன் எழுதிய கவிதைகள் அனைத்தும் காதலை பறைசாற்றுபவை.

காதலைப் பற்றி எழுத அலைகடல் அதிசயங்கள் போல காதலில் மூழ்கித் திளைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மணற்பரப்பை நனைக்கும் மழைத்துளிகள் போல பிறர் மீது வைத்திருக்கும் காதலை உணர்ந்திருந்தாலே போதும்.

அங்கீகாரம் கிடைக்காமலேயே ஒருதலைக் காதல்கள் வாடினாலும், தனது அன்புக்குரியவர் நலமாய் இருப்பதை ஏதோவொரு வாசலில் காண நேர்ந்து, அங்கு மீண்டும் பிறக்க நேர்ந்தால் காதல் பிரம்மனாகிவிடுகிறது.

தனித்து நிற்கும் காதலை தூர நின்று பார்ப்பதில் தன்னிறைவடையும் இன்பத்தை உணர வைப்பதில் ஒருதலைக் காதலுக்கு ஈடு உலகில் வேறு எதுவுமே இல்லை. தாய்ப்பாசம்கூட குழந்தையை அள்ளி அணைப்பதில்தான் தன்னிறைவடைகிறது.

Tags : valentinesday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT