காதலர் தினம்

கடல் கடந்து வந்த காதல்

14th Feb 2021 07:45 AM | அ. பேட்ரிக்

ADVERTISEMENT

காதலில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், இந்தியாவின் மீது கொண்ட பற்றின் காரணமாக பின்லாந்திலிருந்து நீலகிரிக்கு வந்து தனது காதல் திருமணத்தை முடித்துள்ளார் டாக்டர் லோனா.

நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி அருகேயுள்ள மாவனல்லா பகுதியைச் சேர்ந்தவர் நைஜில் ஓட்டர். ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு சிறு வயதிலிருந்தே கால்நடைகள் மீதும், விலங்குகள் மீதும் அலாதி பிரியம். இதன் காரணமாகத் தனது பள்ளிப்பருவத்திலேயே  தனக்கு கிடைக்கும் பாக்கெட் மணியில் கோழிகளையும் நாய்க்குட்டிகளையும் வாங்கி வளர்த்து வந்துள்ளார்.

உதகையில் பள்ளிப் படிப்பையும்,  குன்னூரில் கல்லூரிப் படிப்பையும்  முடித்த பின்னர் பொக்காபுரத்தில் மாட்டுப் பண்ணை ஒன்றையும் தொடங்கியுள்ளார். அப்போதுதான் அமெரிக்காவைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான டாக்டர் மைக்கேல் பாக்ஸ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.  விலங்குகள் நல ஆர்வலரான டாக்டர் பாக்ஸ், முதுமலை  சாலையில் காயமடையும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவராவார். இவருடன் நைஜிலுக்கு ஏற்பட்ட நட்பினால்தான் சிகிச்சையளிக்கும் விலங்குகளை நைஜிலின் மாட்டுப்பண்ணையில் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.


இந்நிலையில் நைஜிலும், டாக்டர் பாக்ஸும் சேர்ந்து  'ஐபான்' என்ற அமைப்பை உருவாக்கினர். விலங்குகள் மற்றும் இயற்கைப் பாதுகாப்பிற்கான இந்தியத் திட்டம் என்ற இந்த அமைப்பு தொடங்கப்பட்ட பின்னர்   அமெரிக்கா உள்ளிட்ட  மேலை நாடுகளிலிருந்து  தன்னார்வத் தொண்டர்களாக சேவை  செய்ய  ஏராளமானோர் வந்து சென்றனர். 

ADVERTISEMENT

அப்படி பின்லாந்திலிருந்து நீலகிரிக்கு கடந்த 2003ஆம் ஆண்டில் வந்தவர்தான்  கால்நடை மருத்துவரான டாக்டர் லோனா. இங்கு  வந்ததும்  இந்தியாவுடன்  நீலகிரியும் அவருக்குப் பிடித்து போய்விட்ட நிலையில் நைஜிலும் அவருக்கு  பிடித்துவிட்டதால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி 2004ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்ட டாக்டர் லோனா விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு    வெளிநாடுகளிலிருந்து  வரும் கால்நடை  மருத்துவர்களுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளில் இவர் சுமார் 3,000 வெளிநாட்டு கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

நைஜில் - லோனா தம்பதியினர் நடத்திவரும் கால்நடை பண்ணையில் விபத்தில் சிக்கி  உறுப்புகளை இழந்த மாடு,  ஆடு, குதிரை,  கழுதை, நாய், பூனை மற்றும் பறவையினங்கள் ஏராளமாக  உள்ளன. இவற்றுக்கு  சிகிச்சையோடு  உணவளித்து பராமரித்து  வரும்  இத்தம்பதியினர்  தமிழக  அரசின்  சார்பில்  தெருநாய்களைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையில்  தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதையும் சவாலாக செய்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான நகரப் பகுதிகளில் நைஜில்-லோனா தம்பதியினர் பரிச்சயமிக்கவர்களாகவே உள்ளனர்.

இந்தியாவின் மீது கொண்ட பற்றால் பின்லாந்திருந்து நீலகிரிக்கு  வந்து  ஓவர்சீஸ் சிட்டிசன்ஷிப் என்ற அடையாளத்தைப் பெற்று சாதனைத் தம்பதிகளாகவே வலம் வருகின்றனர் நைஜில் - லோனா தம்பதியினர்.

Tags : valentinesday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT