காதலர் தினம்

காதலுக்குத் தூது சென்ற தியாகராஜ சுவாமி

சி.ராஜசேகரன்

காதல் எனும் ஒற்றை வார்த்தையை சக்கரமாகக் கொண்டு பரந்து விரிந்த உலகத்தில் அனைத்து உயிர்களும் இயங்கி வருகின்றன. உறவுகள், பணம்,  பதவி, இம்மை, மறுமை என மனிதனின் காதல்கள் அளவிட முடியாதவை. ஆனால், இவை ஒரு சிலருக்கு மட்டுமே நிறைவேறுகின்றன. பலர் இவை நிறைவேறுவதற்கான முயற்சிகளிலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்து விடுகின்றனர்.

எந்த ஒரு கனவும் நிறைவேற கண்டிப்பாக ஊன்றுகோல் தேவைப்படுகிறது. காதலர்களுக்கு மத்தியில் உறவுகளோ, நட்புகளோ பாலமாக இருக்கும்போது, அது வெற்றிகரமான காதலாக மாறுகிறது. இல்லாவிட்டால், அது அவமானப்பட்டு, துன்பப்பட்டு, சில நேரங்களில் மரணிக்கும் நிலையும் ஏற்படுகிறது. காதலுக்கு உறவினர்கள், நண்பர்கள் உதவியை நாடத் தயங்கும் சிலர் இறைவனை நாடுகின்றனர்.

சுந்தரர்
சுந்தரர்

உண்மையான காதல் எனில் கடவுள்கூடத் தூது சென்று, காதல் நிறைவேற உதவி புரிந்த கதைகள் தமிழகத்தில் உண்டு. அதுபோன்றதொரு காதல் நிறைவேற தூது சென்று, திருமணம் நடந்தேற உதவியவர்தான் திருவாரூர் தியாகராஜ சுவாமி. அதாவது, சுந்தரர் - பரவை நாச்சியார் காதல் நிறைவேறவும், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவும் தூதுவராக விளங்கியவர் திருவாரூரில் கோயில் கொண்டுள்ள தியாகராஜ சுவாமி.

சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவருமாக விளங்கியவர் சுந்தரமூர்த்தி நாயனார். விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் பிறந்த இவருக்குப் புத்தூரில் திருமணம் நடைபெற இருந்தபோது, சிவபெருமான் அதைத் தடுத்து, சுந்தரரை ஆட்கொண்டார். இதன் பின்னர், சிவனின் பெருமைகளைப் பாடுவதே தனது பணி என்பதை உணர்ந்த சுந்தரர், பல்வேறு தலங்களுக்குச் சென்று, பாடல்கள் பாடினார்.

பல ஊர்களுக்கு சென்று பதிகங்கள் பாடி, சிவனின் புகழைப் பரப்பியவர், திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூரில் அவர் நுழைந்தபோது, அங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமான், நாம் உமக்கு தோழரானோம் என்று அவருக்கு அசரீரியாக உணர்த்தினார். இதனால், அவர் திருவாரூரில் தம்பிரான் தோழர் எனவும் அழைக்கப்பட்டுப்  பெரிதும் மதிக்கப்பட்டார்.

பரவை நாச்சியார்

அதேபோல், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பரவை நாச்சியார் என்பவர்  தினசரி வந்திருந்து தொண்டு புரிந்துகொண்டிருந்தார். ஒருமுறை சுந்தரர் கோயிலுக்கு வந்தபோது, பரவை நாச்சியாரைக் காண வாய்த்தது. இருவருமே ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, இதயங்கள் மட்டும் இடம் மாறின. தனது நண்பர்கள் மூலம் அந்தப் பெண் யார் என்பதை சுந்தரர் அறிந்துகொண்டார். அதேபோல், தனது தோழிகள் மூலம் சுந்தரர் குறித்த விவரங்களையும் பரவை நாச்சியார் கேட்டறிந்தார். இருவருமே தியாகராஜர் மேல் பக்தி கொண்டவர்கள் என்பதால், இருவருக்குமான நினைவுகள் நெருக்கமாயின.

சுந்தரர் - பரவை நாச்சியார் இடையே எழுந்த காதல் நினைவுகள், தியாகராஜருக்கும் தெரிய வந்தது. அவர்கள் மனதுக்குள் மட்டும் வைத்திருந்த காதலை வெளியுலகுக்குப் புலப்படுத்த எண்ணினார். உடனடியாக, அங்கிருந்த இருவரின் பெற்றோர், அங்கிருந்த சிவபக்தர்களின் கனவுகளில் எழுந்தருளிய தியாகராஜர், இருவருக்கும் திருமணம் செய்விக்கக் கூறினார்.

தியாகராஜர் - கமலாம்பாள்

தங்கள் காதல், திருமணத்தில் முடிய தியாகராஜரே முக்கிய காரணம் என்பதை சுந்தரரும், பரவை நாச்சியாரும் உணர்ந்தனர். சுந்தரர் - பரவை நாச்சியார் திருமணம் சிறப்பான முறையில் நடந்தேற, திருமணத்துக்குப் பிறகு திருவாரூரிலேயே தங்கியிருந்து இருவரும் சிவத்தொண்டு புரிந்துவந்தனர்.

பரவை நாச்சியார் வாழ்ந்து சுந்தரருடன் இணைந்து சிவத் தொண்டாற்றிய இல்லம் தற்போது பரவை நாச்சியார் உடனுறை சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கோயிலாகத் திருவாரூர் திருமஞ்சன வீதியில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் பரவை நாச்சியாருடன் சுந்தரர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்துக்கு முதல் நாள், சுந்தரர் - பரவை நாச்சியார் திருமணமும், அடுத்த நாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கைலாயம் செல்லும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சுந்தரர் - பரவை நாச்சியார் திருமணம் நடைபெற, முக்கியக் காரணியாக, ஆபத்பாந்தவனாக தியாகராஜர் விளங்கியதால், திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குக் காதலர்கள் வந்திருந்து, தங்கள் காதல் திருமணத்தில் முடிய வேண்டிக்கொள்கின்றனர். உண்மைக்காதல் எனில் தியாகராஜர் கண்டிப்பாகச் சேர்த்துவைப்பார் என்ற நம்பிக்கை காதலர்களிடையே இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

SCROLL FOR NEXT