காதலர் தினம்

உடல் குறையை வென்றுவாழும் உண்மையான காதல்!

14th Feb 2021 05:20 AM | நசிகேதன்

ADVERTISEMENT

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். இந்தக் கூற்று காதல் வயப்படுபவர்கள் அழகிற்கோ, கல்விக்கோ, அந்தஸ்துக்கோ இடம் கொடுக்காமல் பார்த்த நேரத்தில் ஈர்க்கப்பட்டு, வசியப்பட்டு, காதல் வயப்பட்டு மனதால் பேசி முடித்து மெளனத்துடன் காதலுக்கு அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்காக இருக்கலாம்.

ஆனால், காதலுக்குக் கண் மட்டுமல்ல, கால்களும் ஒரு பொருட்டல்ல என்பதை உறுதி செய்துள்ளனர் இந்த மாற்றுத் திறனாளிகளான காதல் ஜோடி.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர்கள் மகாலட்சுமி, அம்பிகேஷ். இவர்கள் இருவரும் தங்களது இளம் வயதில் இளம்பிள்ளைவாத (போலியோ)  காய்ச்சல் நோய்த் தாக்குதலுக்குள்பட்டு இரண்டு கால்களின் இயக்கத்தையும் பறிகொடுத்தவர்கள். 90 சதவிகிதம் கால்கள் ஊனமான இவர்கள் கைகளின் உதவியுடன் தரையில் தவழ்ந்தபடி தங்களது தினசரி வாழ்நாள் நடவடிக்கைகளை மகிழ்வுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், நிகழ்ச்சியொன்றில் சந்தித்துக் காதல் வயப்பட்டுக் கடந்த 2002 ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்குச் சென்று  தஞ்சமடைந்தவர்கள்.

சில மாதங்கள் அங்கு தலைமறைவாக வாழ்ந்துவிட்டுப் பிறகு தங்களது சொந்த ஊரான பவானிக்குத் திரும்பி அன்று முதல் இன்று வரை உறவினர்களுக்கும், உற்றோர்களுக்கும் தங்களது காதல் வாழ்க்கைக்கான அர்த்தத்தை வாழ்வதன் காட்டிவருகின்றனர். இவர்களது வாழ்க்கைக்கு வெளிச்சம் சேர்த்திடும் வகையில் எவ்விதக் குறைகளுமில்லாத இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து அவர்களது காதலுக்கு ஒளியூட்டியுள்ளனர்.

இவர்களில் மூத்த பெண் வைஷ்ணவி, அரசு மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பும், இளைய பெண் ஷாலினி, அதே பள்ளியில் 7 ஆம் வகுப்பு ஆங்கிலப் பிரிவில் பயின்று வருகின்றனர். இவர்கள் இருவரும் தாய், தந்தை மாற்றுத் திறனாளிகளாக இருப்பது குறித்து சற்றும் கவலையின்றி ஏனைய பெற்றோர்களைப் போலவே கருதி அவர்களுக்குத் தங்களாலான உதவிகளைப் செய்து வருகின்றனர்.

அம்பிகேஷ், பவானி அருகேயுள்ள தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையலகப் பிரிவில் பணிபுரிகிறார், மகாலட்சுமி பவானி பேருந்து நிலையம் அருகே பெட்டிக் கடையொன்றை நடத்திவருகிறார்.

தங்களது தேவைகளை மிகவும் சுருக்கிக்கொண்டு மகள்களின் நல்ல எதிர்காலத்திற்காகவும், அவர்களது சிறந்த கல்விக்காகவும் தங்களது  நம்பிக்கையை அவர்கள் மீது செலுத்திவருகின்றனர். ஊனமுற்ற இவர்கள் வளர்த்த மகள்கள் அனைவருக்கும் பிடித்தமானவர்களாகவும் பிரியமானவர்களாகவும் இருந்திட வேண்டுமென்று இருவரும் விருப்பப்படுகின்றனர்.

மகள்களில் ஒருவர் வங்கி வேலைக்குச் சென்று தனது பெற்றோரின் கடனை அடைத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இன்னொருவர் ஐ.ஏ.எஸ். படித்து முக்கியப் பிரமுகராக வலம் வந்து பெற்றோரின் கனவையும் நம்பிக்கையையும் பூர்த்தி செய்து அவர்களை காரில் அழைத்துச் சென்று சந்தோஷப்பட வைக்கவுள்ளதாகவும் தங்களது எதிர்கால  விருப்பத்தைத் தெரிவித்துப் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்தினர்.

கடந்த 18 ஆண்டுகளாகக் குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன தவறுகளுக்காக மட்டுமே மகள்கள் இருவரையும் அடிப்பது, கண்டிப்பது போன்றவற்றில் பிரச்சினைகள் எழுவதைத் தவிர இதுவரை வெறெந்த சின்னப் பிரச்சினைகளோ பெரிய பிரச்சினைகளோ தங்களுக்குள் ஏற்பட்டதில்லை என்றும், இருவரும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து காரியங்களை மேற்கொள்வதாகவும் காதல் தம்பதியினர் குறிப்பிட்டனர்.

தங்களது குடும்பத்தினர், உறவினர்கள்  நல்ல நிலையில் இருந்தாலும் அவர்களிடம் எதற்காகவும் எந்த நிலையிலும் உதவிகேட்டு நிற்பதில்லை என்று முடிவெடுத்துள்ளதாகவும், தங்களது நிலையறிந்து தங்களது நண்பர்கள் தங்களுக்கு உதவிபுரிய எப்போதும் தயாராக இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைகள் தங்களைப் போலல்லாமல் குறைகளற்றவர்களாகப் பிறந்ததே தங்களுக்கு ஆச்சரியமான மகிழ்ச்சியாகவும் இன்று வரை பிரமிப்பாகவும் இருப்பதாகத் தெரிவிக்கும் தம்பதியினர், தங்களுக்குள் அடிக்கடி கடந்த காலங்களை மலரும் நினைவுகளாக மகிழ்ச்சியுடனோ சற்றுக் கோபத்துடனோ பகிர்ந்து கொள்கின்றனர்.

மேலும், குழந்தை பிறப்பின்போது தங்களுக்குப் பிறந்த குழந்தைகளை செவிலியர்கள் தங்களிடம்  காட்டியபோது இருவரும் மனதைத் திடப்படுத்திக் கொண்டே குழந்தைகளின் கால்களைத் தடவிப் பார்த்து, குழந்தைகளின் கால்கள் ஊனமற்று நல்ல நிலையிருப்பதைத் தெரிந்து எல்லையில்லா நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருவரும் தனித்தனியே அழுது தீர்த்ததாகவும் கூறினர்.

தங்களது பெற்றோர் ஏனைய பெற்றோரைப் போல இல்லாமல் மாற்றுத் திறனாளிகளாக இருப்பதால் தங்களுக்கு என்றைக்கும் எப்போதும் கவலையாக இருந்ததில்லை என்றும், தங்களது பெற்றோரும் தங்களது இயலாமையையோ, ஆற்றாமையையோ சிறிதளவும்  தங்களிடம் காட்ட முயற்சிக்காமல் கவலையில்லாமல் ஏனைய பெற்றோர்களைப் போல  நடந்து கொள்வதும், தங்களிடம் அன்பு செலுத்தி வருவதும் தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று வளர்ந்த பெண்கள் போல குழந்தைகள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

தங்களைத் தவழ்ந்தபடியே 10 மாதம் சுமந்து பெற்று நாள்தோறும் சிரமப்பட்டு வளர்த்து வரும் பெற்றோரைத் தாங்கள் நன்றாக வந்ததற்குப் பிறகு  மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும், அவர்களைப் புறக்கணிக்காமல், அவர்களை ஓய்வெடுக்க வைப்பதும்தான் தங்களது கடமையும் ஆசையும் என்றும், அதற்காகவே தாங்கள் நன்றாகப் படித்து வருவதாகவும் தங்களது பொறுப்புணர்ந்த காதல் தம்பதியினரின் பெண் குழந்தைகள் கண்ணீர் மல்க பெற்றோர்களின் பாதங்களைத் தடவியபடி நன்றிப் பெருக்குடன் கூறினர்.

இக்குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் தங்களால் முடிந்த வேலைகளைத் தாங்களாகவே செய்து கொள்வதையும், மாற்றுத்திறனாளிகளான தங்களது பெற்றோர்களுக்குக் குழந்தைகள் எவ்வித சலிப்புமின்றித் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருவதையும் அவர்கள் அருகிலுள்ளவர்கள் ஆச்சர்யத்துடன் தினந்தோறும் பார்த்தும் ரசித்தும் வருவது வாடிக்கையாக உள்ளது.

தங்களது உறவினர்கள், அருகிலிருப்போரால் தங்களுக்கு என்றும் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்றும், அவர்கள் தங்களை அருவருப்புடனோ, அச்சப்பட்டோ, ஆறுதல்பட்டோ, கருணையுடனோ பார்க்காமல் இருப்பது தங்களுக்கு ஆறுதலளிப்பதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் தங்களைப் பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் என்று மட்டுமே  பார்த்து வருவது தங்களது நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

எந்த உடல் குறையுமின்றிக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் பலரும் விவாகரத்துக்காகத் தங்களது கைக்குழந்தைகளுடன், பெற்றோர்களுடன், வழக்கறிஞர்களுடன் வழக்குக் கட்டுகளுடன் நீதிமன்ற வாசலில் தீர்ப்புக்காகவும், ஜீவனாம்சத்திற்காகவும் காத்திருக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்று கூற முடியாது.

ஆனாலும், தமிழகத்தில் அடிக்கடி காணப்படும் நிகழ்வுகளாகவும், காதலில் தோல்வியடைந்த மனைவிகளும் கணவர்களும் தற்கொலை செய்துகொள்வதும் கவலையளிக்க கூடிய செய்திகளாகவே கவனத்தை ஈர்த்து வருகின்றன.

காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் பலரும் நல்ல நிலையில் இருப்பதையும், சிலர் மோசமான நிலையில் யாரையாவது எதிர்பார்த்தபடி வாழ்ந்து தீர்க்கிற முரண்பாடுகள் காணப்படுவது இயல்பானதாகவே உள்ளது. ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி, இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று 18 ஆண்டுகளாக வாழ்ந்துகாட்டி வரும் இந்த உண்மைக் காதலர்களை எப்படிப் பாராட்டினாலும் மனது நிறைகிறது.  இதேபோல் தொடர்ந்து நிறைவாழ்வு வாழ்ந்திட பிரார்த்திக்கவும் தோன்றுகிறது.

உலகக் காதலர் தினத்தில் உண்மைக் காதலர்களாகவும் உன்னதக் காதலர்களாகவும் அறிந்துகொள்ள வேண்டியவர்கள் இவர்கள்.

Tags : valentinesday
ADVERTISEMENT
ADVERTISEMENT