பஞ்சாப் மாநிலத்தை அறிந்து கொள்ளலாமா?

 பஞ்சாப் வடமேற்கு இந்தியாவில் அமைந்துள்ளது. வளமான வண்டல் மண் பூமி. விவசாயமே பிரதானத் தொழிலாகக் கொண்ட மாநிலம்.
பஞ்சாப் மாநிலத்தை அறிந்து கொள்ளலாமா?



 பஞ்சாப் வடமேற்கு இந்தியாவில் அமைந்துள்ளது. வளமான வண்டல் மண் பூமி. விவசாயமே பிரதானத் தொழிலாகக் கொண்ட மாநிலம். நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணி கொண்ட மாநிலம். சீக்கியர்களே இங்கு பெருமளவில் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் பிராந்திய மொழி பஞ்சாபி.

 பஞ்சாப் மாநிலத்தைச் சுற்றிலும் ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இந்திய மாநிலங்களும், மேற்கு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணமும் சூழ்ந்துள்ளன.

 சிந்து நதியின் கிளை நதிகளான் ராவி, பியாஸ். சட்லெஜ், ஜீலம், சேனாப் ஆகிய ஐந்து ஆறுகள் பாயும் பகுதி என்பதால் பஞ்சாப் எனப்படுகிறது. பஞ்சாப் என்ற சொல்லுக்கு ஐந்து நதிகள் பாயும் பூமி என்பதே பொருள்.

 இம்மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி.யில் இமயமலையின் அடிவாரத்தில் 2400 கி.மீ. நீளத்திற்கு 180 மீ. முதல் 500 மீ. வரை உயரம் கொண்ட ஏற்ற இறக்கமான சிவாலிக் மலைக் குன்றுகள் உள்ளன. இவை 10 முதல் 50 கி.மீ. வரை அகலம் கொண்டவை.

 பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள "சண்டிகர்' நகரமே (யூனியன் பிரதேசம்) பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாகும். 50,362 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாநிலம் 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலம் இந்தியாவின் மிகச் சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

 சில வரலாற்றுத் தகவல்கள்!

 சிந்து சமவெளி நாகரிகம் பஞ்சாப் பகுதி வரை பரவி இருந்துள்ளது. அவற்றின் தொல்லியல் களங்கள் "ரூப் நகர்' போன்ற இடங்களில் உள்ளன. இங்கு ஒரு சிறிய தொல்லியல் அருங்காட்சியகமும் உள்ளது.

 வேதகால நூல்களில் பஞ்சாப் பற்றிய தகவல்கள் உள்ளன. மகாபாரதத்தில் பஞ்சாப் "திரிகர்த்த நாடு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பண்டைய பஞ்சாப் என்பது இன்றைய பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள், சண்டிகர் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசங்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளும் உள்ளடக்கியது.

 கி.மு. 326 - இல் கிரேக்க மன்னர் அலெக்ஸôண்டர் மேற்கு பாகிஸ்தானில் உள்ள இந்துகுஷ் கணவாய் வழியாக படையெடுத்து வந்து பஞ்சாபைக் கைப்பற்றி தனது சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். கி.மு. 305 - இல் சிறப்புடன் திகழ்ந்த மெüரியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது.

 இந்த பஞ்சாப் வழியாகத்தான் கிரேக்கர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள், மற்றும் மத்திய ஆசிய இனத்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

 இதனால் செழிப்பான பஞ்சாப் சார்ந்த பகுதிகளை காந்தார அரசர்கள், நந்தர்கள், மெüரியர்கள், கங்கர்கள், குஷாணர்கள், குப்தர்கள், பாலர்கள், கூர்ஜரர்கள், காபூல் சாகிப்கள், துருக்கியர்கள், மற்றும் ஆப்கானியர்கள் எனப் பல பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

 காலப்போக்கில், பல மாற்றங்கள் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து வட இந்தியாவை வென்ற பாபரின் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதம் தோன்றி வலுப்பெறத் தொடங்கியது. அவர்கள் பஞ்சாப் பகுதியை தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்தனர்.

 புவியியல் அமைப்பு காரணமாக இப்பகுதியின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் தொடர்ந்து பலரும் தாக்குதல் நடத்தியதால் பல போர்களை பஞ்சாப் பிரதேசம் சந்தித்துள்ளது.

 பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் ஆரம்பத்தில் பஞ்சாபைக் கைப்பற்ற செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன. பின்னர் நடந்த போரில் சீக்கியர்கள் தோல்வியுற்றனர். அதனால் 1849 - இல் லாகூர் உடன்பாட்டின்படி சீக்கிய அரசர் துலீப் சிங்கிற்கு ஓய்வூதியம் தந்து பஞ்சாபை பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் எடுத்துக்கொண்டது. அதன்பின் பஞ்சாப் பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாணமாயிற்று.

 சுதந்திரத்திற்கு முந்தைய பஞ்சாப் மாகாணம் பெரியதாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்றபோது மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த மேற்கு பஞ்சாபின் 52% நிலப்பகுதி பாகிஸ்தானிற்கும், எஞ்சிய இந்துக்கள் அதிகம் வாழ்ந்த கிழக்கு பஞ்சாபின் 48% நிலப்பகுதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலமாகவும் ஆனது.

 ராபி, பியாஸ், சட்லெஜ் ஆறுகள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கும், ஜீலம், செனாப் ஆறுகள் பாகிஸ்தானுக்குமாகப் பிரிக்கப்பட்டது.

 அமிர்தசரஸ் பொற்கோயில்!

சீக்கியர்களின் பழமையான தலம்! அமிர்தசரஸ் நகரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருத்வாரா. சீக்கியர்களின் புனித நூலான "குருகிரந்த சாகிப்' இங்கு வைக்கப்பட்டுள்ளது. மஹாராஜா ரஞ்சித் சிங் குருத்வாராவின் மேல் மாடிகளை தங்கத்தினால் மூடினார். அதனால் "கோல்டன் டெம்பிள்' என்ற பெயரைப் பெற்றது. ஜாதி மத பேதமின்றி இங்கு அனைவரும் வழிபடலாம்!

 ஜாலியன் வாலாபாக் நினைவிடம்!

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் போற்கோயிலுக்கு மிக அருகில் உள்ளது இந்த நினைவிடம். சுதந்திரப் போராட்ட காலத்தில் இவ்விடத்தில் நடந்த "ஜாலியன் வாலாபாக் படுகொலை' நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.

 ஜாலியன் வாலாபாக் என்ற இடம் 6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தோட்டம் ஆகும். சுற்றிலும் மதில் சுவர்களும் ஒரே ஒரு சிறிய வாயிலும் நடுவில் ஒரு பெரிய கிணறும் கொண்டது.

 அத்தோட்டத்தில் 1919 - ஆம் ஆண்டு ஏப்ரல் 13 - ஆம் நாள் வைசாகி திருவிழாவைக் கொண்டாட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடியிருந்தனர். அப்பொழுது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரெஜினால்ட் "டயர்' என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் வந்த பிரிட்டிஷ் ராணுவத்தினர் மக்களை நோக்கி 10 நிமிடங்கள் தொடர்ந்து சுட்டனர்.

 மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இதில் 379 பேர் இறந்து விட்டதாக பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்டவர்களின் கருத்துப்படி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். இது சுதந்திரப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 துப்பாக்கி சூட்டில் இறந்த தியாகிகளின் நினைவாக இத்தோட்டத்தில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது
 வாகா எல்லை!

வாகா என்னும் சிற்றூர் அமரிதசரஸில் இருந்து 32 கி.மீ. தொலைவில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. 1947 - இல் நடந்த பிரிவினையின்போது, பிரிப்பதற்காக போடப்பட்ட "ராட் கிளிஃப் கோடு' இச்சிற்றூரின் குறுக்காகச் செல்கிறது. இதனால் வாகாவின் கிழக்குப்பகுதி இந்தியாவிற்கும், மேற்குப் பகுதி பாகிஸ்தான் வசமும் உள்ளன. அமிர்தசரசில் இருந்து லாகூர் வரையிலான ஒரே ஒரு தேசிய நெடுஞ்சாலை வாகா கிராமத்தின் வழியாகச் செல்கிறது.

 வாகாவில் உள்ள வாயில் பகுதியில் இரண்டு வாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தினம் மாலையில் இரு நாட்டு தேசிய கொடிகளும் இறக்கப்படும்போது அதை ஒரு சடங்காக நடத்துவார்கள். இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் நிகழ்வாக உள்ளது.

 ரஞ்சித் சிங் அருங்காட்சியகம்!

 அமிர்தசரஸ் நகரில் உள்ளது. இங்கு பல்வேறு ஆயுதங்கள், பழமையான நாணயங்கள் மற்றும் எழுத்துப் பிரதிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சாப் பகுதியை ஆட்சி செய்த அரசர்களின் அரண்மனைகள், அரசவைக் காட்சிகள் போன்றவற்றை சித்தரிக்கும் ஓவியங்களும் இங்கு உள்ளன. கோஹினூர் வைரத்தின் மாதிரி ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 மஹாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம்!

 இந்த அருங்காட்சியகம் லூதியானாவில் உள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் 1999 - இல் நிறுவப்பட்டது. பல்வேறு போர்களில் பங்கேற்று உயிர்தியாகம் செய்தவர்கள் தைரியமான வீரர்கள் போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 இங்கு பண்டைய காலத்தில் இருந்து சுதந்திர இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளைக் குறிக்கும் 12 காட்சியகங்கள் உள்ளன. மேலும் போர் டாங்கிகள், வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகள், விமானம் தாங்கி கப்பலின் மாதிரிவடிவம் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசால் பிரித்யேக கவனத்துடன் பாதுகாக்கப்படுகிறது.
 கிலா முபாரக் கோட்டை!

பாட்டிண்டா நகரின் மையத்தில் அமைந்துள்ளது இக்கோட்டை. கி.பி. 90 - 110-இல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிலா முபாரக் எனப்படும் இந்த செங்கற்கோட்டை பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.

 கிலா - முபாரக் - பாட்டியாலா அரண்மனை!

 தென்மேற்குப் பகுதியில் உள்ள பாட்டியாலா நகரத்தின் மையப் பகுதியில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. சீக்கிய அரண்மனைக் கட்டடக் கலைக்கு ஓர்அரிதான மற்றும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இது 1793 - இல் "பாபா ஆலா சிங்' என்பவரால் கட்டப்பட்டது.

 கிலா முபாரக் - பரித்கோட் கோட்டை!

வடமேற்கே உள்ள பரித்கோட் நகரில் இக்கோட்டை உள்ளது! ராஜா மோகல்சி என்பவரால் கட்டப்பட்டது. பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. நன்கு கட்டப்பட்டு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கோட்டை.

 மேலும் சில தகவல்கள்!
 கி.பி. 15 - ஆம் நூற்றாண்டில் "குருநானக்' சீக்கிய மதத்தை தோற்றுவித்தார். அதனால் அவருக்குப் பின் வந்த 9 சீக்கிய குருமார்களும் ஒருவர் பின் ஒருவராக (1469 - 1708 வரை) தலைமையேற்று மதத்தை வளர்த்தனர். பத்தாவது குருவான குரு கோவிந்த சிங். நீதி போதனைகள் அடங்கிய "ஆதி கிரந்த்'தத்தை கடைசி குருவாக அறிவித்தார். அப்போதிலிருந்து புனித நூலான "ஆதி கிரந்த்' சீக்கியர்களின் குருவாக உள்ளது.

 பொற்கோயிலே சீக்கியர்களின் முதல் மற்றும் மிகப் பழமையான குருத்வாரா (கோயில்). பஞ்சாபில் சுமார் 60 சதவீதம் மக்கள் இந்த மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

 சிந்து நதிநீர் ஒப்பந்தம்!
 சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக 1960 - இல் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதில் அப்போதைய பிரதமர் நேருவும், பாகிஸ்தானின் அதிபர் முகம்மது அயூப்கானும் கையெழுத்திட்டனர். உலக வங்கி மூன்றாவது சாட்சியாகக் கையெழுத்திட்டது.

 இதன்படி சிந்து ஆறும், அதன் துணை ஆறுகளும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. சிந்து, ஜீலம், சேனாப் ஆகிய மேற்குப் பகுதி ஆறுகளின் நீர் பாகிஸ்தானிற்கும், பியாஸ், சட்லெஜ், ராவி ஆகிய மூன்று கிழக்குப் பகுதி ஆறுகளின் நீர் இந்தியாவிற்கும் எனப் பிரிக்கப்பட்டன.

 பாங்க்ரா நடனம்!
 இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பஞ்சாப் பகுதியில் ஆடப்படும் ஒரு பிரபலமான நடனம்!
 

 எஃகு நகரம்!
 இந்தியாவில் உள்ள எஃகு உருக்காலைகளில் பெரும்பான்மை பஞ்சாபில் உள்ளன. இங்குள்ள "மண்டி கோபிந்த்கர்' நகரம் எஃகு நகரம் எனப்படுகிறது.
 இந்தியாவின் ரொட்டிக் கூடை!
 

வளமான பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிக அளவில் விளைகிறது. அதனால் இந்தியாவின் "ரொட்டிக் கூடை' எனச் செல்லமாக பஞ்சாபை அழைக்கின்றனர். கோதுமை தவிர, நெல், கரும்பு, காய்கறிகள் மற்றும் பழவகைகளும் ஏராளமாகப் பயிரிடப்படுகின்றன.
 தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com