வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத்தை அலசியதில் கிடைத்த அடாவடித் தகவல்கள்!

மக்களவைத் தேர்தல் நேரம் இது என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நிச்சயம் ஏற்கனவே தெரிந்த தகவல்தான்.
வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத்தை அலசியதில் கிடைத்த அடாவடித் தகவல்கள்!


மக்களவைத் தேர்தல் நேரம் இது என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நிச்சயம் ஏற்கனவே தெரிந்த தகவல்தான்.

எனவே சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறோம்.

இந்தியாவில் 17வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட தேர்தலுக்காக 1279 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 1266 பேரின் பிரமாணப் பத்திரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

இந்த மொத்தமுள்ள 1279 வேட்பாளர்களில் 225 பேர் தேசியக் கட்சியின் வேட்பாளர்கள். 124 பேர் மாநிலக் கட்சியின் வேட்பாளர்கள், 364 பேர் பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர்கள். 553 வேட்பாளர்கள் சுயேச்சைகள்.

இவர்களில் 213 பேர் அதாவது 17 சதவீதத்தினர் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களாவர். அதில் 146 பேர் அதாவது 12 சதவீத வேட்பாளர்கள் மிக மோசமான குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அடேங்கப்பா! 

இவர்களில் 12 பேர் தங்கள் மீதான குற்ற வழக்குகளில்  தண்டனை பெற்றவர்கள். 10 பேர் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள். 25 பேர் கொலை முயற்சி வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள்.  4 பேர் கடத்தி பணம் கேட்டு மிரட்டுதல் போன்ற வழக்குகள் பதியப்பட்டவர்கள். இதுமட்டுமல்ல, கடத்தல், பெண்ணை கட்டாய திருமணம் செய்தல் என பல வழக்குகள் பதியப்பட்ட வேட்பாளர்களும் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர். மக்களே உஷார்.. 

இவர்களில் 16 பேர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள். 12 பேர் மோசமான பேச்சினால் வழக்குகளில் சிக்கியவர்கள்.

சரி இப்படி பொத்தாம் பொதுவாக எத்தனை பேர் என்று சொல்வதை விட, எந்தக் கட்சி வேட்பாளர்கள் அதிகக் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால்..

மொத்தக் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களில் 30 பேர் பாஜகவையும், 35 பேர் காங்கிரஸ் கட்சியையும், 32 பேர் பகுஜன் சமாஜ் கட்சியையும், 13 பேர் ஒய்எஸ்ஆர்சிபியையும், 4 பேர் தெலுங்கு தேசம் கட்சியையும், 5 பேர் டிஆர்எஸ் கட்சியையும் சேர்ந்தவர்கள்.

37 தொகுதிகள் பதற்றமானவையா? போட்டியிடும் வேட்பாளர்கள் அப்படி!

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடும் தொகுதியை பதற்றமான தொகுதியாக தேர்தல் ஆணையம் கணக்கெடுத்துள்ளது. அதன்படி 91 மக்களவைத் தொகுதியில் 37 தொகுதிகள் ரெட் அலர்ட் அதாவது பதற்றமான தொகுதிகளாகக் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது என்றால், வேட்பாளர்களின் பின்னணியை நீங்களே ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.

சரி குற்றப்பின்னணியை மட்டும் சொன்னால் போதுமா, அதிகம் எதிர்பார்க்கப்படும் விஷயம் என்னவென்றால் 401 வேட்பாளர்கள் கோடீஸ்வர வேட்பாளர்களாவர். இவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ.6.63 கோடியாகும்.

கோடீஸ்வர  வேட்பாளர்களும், குற்றப் பின்னணிக் கொண்ட வேட்பாளர்களும் போட்டியிடவிருக்கும் இந்த முதல்கட்ட வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெற உள்ளது. 

மிச்சமெல்லாம் வாக்காளர்கள் கையில்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com