கடந்த ஆண்டைவிட இந்தாண்டு விழாக்கால விற்பனை 15% அதிகமாக இருக்கும் என்று ஆன்லைன் விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
ரெட்சீர் ஸ்ட்ராட்டர்ஜி கன்சல்டன்ட்ஸ் (Redseer Strategy Consultants) என்ற நிறுவனம் விழாக் கால விற்பனைக்கு முன்னதாக, அதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
அதில் சமீபத்தில் ஆன்லைன் தளங்களில் விற்பனை மிதமாக இருந்தபோதிலும் விற்பனையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுளள்து.
நடப்பு காலாண்டில் 10% விற்பனை அதிகரித்துள்ளதாக 40% விற்பனையாளர்கள் மட்டுமே கூறியுள்ளனர். எனினும் விற்பனை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர், வளர்ச்சிப் பாதை இருக்கும் என்ற ஆர்வத்தில் செயல்படுகின்றனர்.
இதையும் படிக்க | ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேமராக்கள்! தடுக்க வேண்டாம்!!
விழாக் காலங்களில் ஆன்லைன் விற்பனை தளங்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக 62% விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு 53% விற்பனையாளர்களே ஆன்லைன் விற்பனை தளங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.
தரவுகளின் பகுப்பாய்வு, முன்கூட்டிய கணிப்புகள், நுகர்வோரின் தேர்வு ஆகியவற்றின் மூலமாக விற்பனையாளர்களுக்கு வலுவான ஆதரவை ஆன்லைன் தளங்கள் வழங்குகின்றன. சிறிய வியாபாரிகள் தங்களின் சவாலான சூழலில் இருந்து வெளியே வருவதற்கு இந்த பண்டிகை காலம் உதவும் என்று கூறுகின்றனர். சிறிய, நடுத்தர வியாபாரிகளிடம் ஆன்லைன் வணிகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் விழாக் காலத்தில் ஆன்லைன் தளங்களில் விளம்பரச் செலவை அதிகரிக்க விற்பனையாளர்கள் தயாராக உள்ளனர். கடந்த விழாக் காலத்துடன் ஒப்பிடுகையில் 22% கூடுதலாக விளம்பரம் செய்ய முன்வருகின்றனர்.
கடந்த ஆண்டு விழாக் காலத்துடன் ஒப்பிடுகையில் 15% அதிகமாகவும் இந்த ஆண்டின் காலகட்டத்தில் ஒப்பிடும்போது 50% அதிகமாகவும் விளம்பரச் செலவு செய்ய எதிர்பார்ப்பதாக அறிக்கை கூறுகிறது.