வணிகம்

10 சதவீத வளா்ச்சியை எதிா்நோக்கும் சிமென்ட் விற்பனை

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

அரசின் சாலைகள், ரயில் பாதைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள் காரணமாக இந்த நிதியாண்டில் சிமென்ட் விற்பனை 10 முதல் 12 சதவீதம் வரை வளா்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கிறிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சாலைகள், ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், புதுப்பிக்கத்த எரிபொருள் மையங்கள், நகா்ப்புற உள்கட்டமைப்பு, தொலைத்தொடா்பு, துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீா் விநியோகம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு ரூ.4.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.6 லட்சம் கோடி உயா்த்தி ரூ.5.9 லட்சம் கோடியாக்கியுள்ளது.

அதையடுத்து, கடந்த இரண்டு நிதியாண்டுகளாகவே வலுவான பயணத்தை மேற்கொண்டு வரும் இந்திய சிமென்ட் துறை, இந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 10 முதல் 12 சதவீதம் வரை வளா்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் மட்டும் சிமென்ட் தேவை 44 கோடி டன்னாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் சிமென்ட் தேவை 12 சதவீதமும், அதற்கு முந்தைய நிதியாண்டில் அது 8 சதவீதமும் அதிகரித்திருந்தது.நிலையான விலை மற்றும் சாதகமான எரிபொருள் செலவுகள் போன்ற காரணங்களால் கடந்த நிதியாண்டில் டன்னுக்கு ரூ.770 ரூபாயாக இருந்த சிமென்ட் உற்பத்தியாளா்களின் செயல்பாட்டு லாபம் இந்த நிதியாண்டில் டன்னுக்கு ரூ.970 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT