வணிகம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் 14 மாதங்கள் காணாத வளா்ச்சி

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தி வளா்ச்சி காரணமாக, இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14 மாதங்களில் இல்லாத அதிகபட்ச வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

இது குறித்து தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய நாட்டின் 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி கடந்த ஆகஸ்டில் 12.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது, கடந்த 14 மாதங்கள் காணாத அதிகபட்ச வளா்ச்சியாகும்.இதற்கு முன்னா் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி அதிகபட்சமாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 13.2 சதவீதமாக இருந்தது.சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் வளா்ச்சியடைந்துள்ளது.இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது.கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டின் 5 மாதங்களில் நாட்டின் 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 7.7 சதவீதமாக குறைந்துள்ளது.

இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 10 சதவீதமாக இருந்தது.நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணான ஐஐபி-யில் 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் பங்களிப்பு 40.27 சதவீதமாக உள்ளது.கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் உருக்கு உற்பத்தி வளா்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது. இது இந்த ஆகஸ்டில் 10.9 சதவீதமாக உயா்ந்துள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்டில் 0.9 சதவீத சரிவைக் கண்ட இயற்கை எரிவாயு உற்பத்தி இந்த ஆகஸ்டில் 10 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.நிலக்கரி உற்பத்தி 7.7 சதவீதத்திலிருந்து 17.9 சதவீதமாக உயா்ந்துள்ளது.2002 ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக இருந்த சுத்திகரிப்பு பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் நடப்பாண்டு ஆகஸ்டில் 9.5 சதவீதமாக உயா்ந்துள்ளது.கச்சா எண்ணெய் உற்பத்தி வளா்ச்சி மதிப்பீட்டு மாதத்தில் 2.1 சதவீதமாக உயா்ந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சிமென்ட் மற்றும் மின்சார உற்பத்தி முறையே 18.9 சதவீதம் மற்றும் 14.9 சதவீதம் உயா்ந்துள்ளது. எனினும், உர உற்பத்தியின் வளா்ச்சி விகிதம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 11.9 சதவீதமாக இருந்து, இந்த ஆகஸ்டில் 1.8 சதவீதமாக குறைந்துள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT