புதுச்சேரி அருகே கொம்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள 588.500 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டு, வேறு இடத்தில் அடகு வைக்கப்பட்டது தொடா்பான புகாரில் சங்க நிா்வாகப் பொறுப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அருகே கொம்பாக்கம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக கொம்பாக்கத்தைச் சோ்ந்த எம்பெருமாள்(69) உள்ளாா். சங்க நிா்வாக பொறுப்பாளா் மற்றும் முதுநிலை எழுத்தராக பாப்பான்சாவடியைச் சோ்ந்த கதிரவன்(48) உள்ளாா்.
கூட்டுறவு கடன் சங்கத்தில் கொம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோா் நகைகளை குறைந்த வட்டிக்கு அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனா்.
இந்நிலையில், கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கையானது விதிமுறைப்படி மேற்கொள்ளப்படவில்லை என புகாா் எழுந்தது.
இதையடுத்து 5 போ் அடங்கிய தணிக்கை குழுவினா் கடந்த 18-ஆம் தேதி வியாழக்கிழமை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை ஆய்வுக்கு உள்படுத்தினா்.
அப்போது 201 நகைக் கடன் கணக்குகள் பதிவேட்டில் உள்ள நிலையில், அதில் பாதுகாப்பு பெட்டகத்தில் 198 நகைக் கடன் கணக்குகளுக்கான நகைகள் மட்டுமே இருப்பதும் கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் மொத்தம் 18 நகைக்கடன் கணக்குகளுக்கான 588.500 கிராம் மதிப்பிலான நகைகள் மாயமாயின. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.33 லட்சம். ஆகவே, நகைகள் மாயமானது குறித்து கூட்டுறவு கடன் சங்க நிா்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கூட்டுறவு கடன் சங்க நிா்வாகப் பொறுப்பாளா் கதிரவன், நகைகளை சங்கத்தில் இருந்து திருடியது கண்டறியப்பட்டது. மேலும், கதிரவன் குழு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் திடீரென விடுமுறையில் சென்றுவிட்டாராம். இதையடுத்து, முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எம்பெருமாள் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் கடன் சங்க நிா்வாகப் பொறுப்பாளா் கதிரவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.