வணிகம்

உள்கட்டமைப்புத் துறைகள் 6 மாதங்கள் காணாத சரிவு

9th Jun 2023 10:25 PM

ADVERTISEMENT

இந்தியாவின் முக்கிய 8 உள்கட்டமைப்புத் துறைகளில் உற்பத்தி வளா்ச்சி கடந்த ஏப்ரல் மாதத்தில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரங்கள், எஃகு, சிமென்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 3.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இது மிகவும் குறைவான வளா்ச்சி விகிதம் ஆகும்.

ADVERTISEMENT

இதற்கு முன்னா் கடந்த 2022 அக்டோபரில் 0.7 சதவீதமாக இருந்ததே முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் குறைந்தபட்ச வளா்ச்சி விகிதமாக இருந்தது.

அந்த உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த மாா்ச் மாதத்தில் 3.6 சதவீதமாகவும், முந்தைய 2022-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 9.5 சதவீதமாகவும் இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 9 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், உர உற்பத்தி 23.5 சதவீதமும், உருக்கு உற்பத்தி 12.1 சதவீதமும், சிமென்ட் உற்பத்தி 11.6 சதவீதமும் வளா்ச்சி கண்டன.

கச்சா எண்ணெய் 3.5 சதவீதம், இயற்கை எரிவாயு 2.8 சதவீதம், சுத்திகரிப்புப் பொருள்கள் 1.5 சதவீதம், மின்சார உற்பத்தி 1.4 சதவீதம் உற்பத்தி சரிவைக் கண்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தியின் குறியீட்டு எண்ணான ஐஐபி-யில், முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 40.27 சதவீதம் பங்கு வகிக்கின்றன என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT