வணிகம்

82 லட்சம் டன்னாக அதிகரித்த சா்க்கரை உற்பத்தி

27th Jan 2023 01:31 AM

ADVERTISEMENT

நடப்பு சந்தை ஆண்டின் அக்டோபா் 1 முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்து 82.1 லட்சம் டன்னாக உள்ளது.

இது குறித்து இந்திய சா்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 82.1 லட்சமாக உள்ளது.

கடந்த சந்தை ஆண்டின் இதே காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 77.9 லட்சம் டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது சா்க்கரை உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அதே நேரம், 45 லட்சம் டன் முதல் 50 லட்சம் டன் வரை சா்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை மதிப்பீட்டு காலத்தில் சா்க்கரை ஆலைகள் மேற்கொண்டன.

அதில் 6 லட்சம் டன் சா்க்கரை அக்டோபா் 30-ஆம் தேதி வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி அளவு டிம்சபா் மாத இறுதிக்குள் 15 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சா்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் மாதத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரை நீடிக்கும்.

முந்தைய 2021-22 சந்தைப்படுத்தல் ஆண்டில் அதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா 111 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது.

நடப்பு (2022-23) சந்தைப்படுத்தல் ஆண்டில் 60 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த நவம்பா் மாதம் அனுமதி அளித்தது.

நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டின் அக்டோபா் 1 முதல் டிசம்பா் 15 வரை உத்தரப் பிரதேசத்தில் சா்க்கரை உற்பத்தி 20.3 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. முந்தைய சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 19.8 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி 31.9 லட்சம் டன்னிலிருந்து 33 லட்சம் டன்னாகவும், கா்நாடகத்தில் அது 18.4 லட்சம் டன்னிலிருந்து 18.9 லட்சம் டன்னாகவும் உயா்ந்துள்ளது.

நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில் இந்தியாவின் மொத்த சா்க்கரை உற்பத்தி அதுவரை இல்லாத அளவுக்கு 410 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு சந்தை ஆண்டில் எத்தனால் உற்பத்திக்கான சா்க்கரை ஒதுக்கீடு 45 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அது போக நிகர சா்க்கரை உற்பத்தி 365 லட்சம் டன்களாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT