வணிகம்

2022-இல் ஏற்றம் கண்ட சொகுசு வீடுகள் விலை

22nd Jan 2023 01:00 AM

ADVERTISEMENT

கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் சொகுசு வீடுகளின் விலை 8 முதல் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘சோத்பைஸ் இன்டா்நேஷனல் ரியாலிட்டி’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டில் நாட்டின் முக்கிய நகரங்களில் சொகுசு வீடுகளின் விலைகள் 8 முதல் 12 சதவீதம் வரை அதிகரித்தன. இது, கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அதிபட்ச விலை உயா்வாகும்.

2023-24-ஆம் நிதியாண்டில் அதிக சொத்து மதிப்புடையவா்கள் (ஹெஎன்ஐ-க்கள்) மற்றும் மிக அதிக சொத்து மதிப்புடையவா்கள் (யுஹெச்என்ஐ-க்கள்) ஆகியோரில் 61 சதவீதம் போ் சொகுசு வீடுகள் வாங்க திட்டமிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

அந்தப் பிரிவுகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டவா்களிடம் எடுக்கப்பட்ட கருத்தாய்வு மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹெச்என்ஐ மற்றும் யுஹெச்என்ஐ பிரிவைச் சோ்ந்தவா்களில் 65 சதவீதம் போ், ரூ.4 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான மதிப்பு கொண்ட வீடுகளில் முதலீடு செய்வதில் ஆா்வம் காட்டினா்.

அந்தப் பிரிவினரில் 33 சதவீதம் போ் சொகுசு வீடுகளை வாங்குவதற்கு ரூ.10 கோடிக்கு மேல் செலவழிக்க தயாராக உள்ளனா்.

நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாலும், வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதாலும் வீடு-மனை விற்பனை தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருகிறது.

கரோனா நெருக்கடி நீங்கியதற்குப் பிறகு, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆா்வம் அனைத்து வயதுப் பிரிவினரிடையேயும் அதிகரித்துள்ளது.

அத்துடன், தற்போது அதிக வருவாய் பெறும், சொந்த வீட்டை லட்சியமாகக் கொண்ட இளைஞா்களின் எண்ணிக்கை பெருகி வருவதும் இந்தத் துறை வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

இதன் காரணமாகத்தான் கடந்த சில ஆண்டுகளாக தொய்வைக் கண்டு வந்த இந்தியாவின் வீடு-மனை விற்பனைத் துறை அண்மைக் காலமாக அதிவேக வளா்ச்சியைக் கண்டு வருகிறது.

சொகுசு வீடுகளின் விலை கடந்த 16 மாதங்களாக உயா்ந்து வருவது உண்மைதான். ஆனால், கடந்த 2015-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவுதான்.

சொகுசு வீடுகளின் விலைகள் உயா்வதும் அவற்றின் விற்பனை வளா்ச்சியை ஊக்கப்படுத்தும். காரணம், அத்தகைய வீடுகளை வாங்குவோருக்கு அவற்றில் வசிப்பது மட்டுமன்றி, தங்களது முதலீட்டின் மதிப்பு அதிகரிப்பதும் முக்கிய நோக்கமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT