சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் அருகே பழமையான வேம்பு மரத்தில் பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் சாலையோரத்தில் 200 ஆண்டு கால வேம்பு மரம் உள்ளது. சத்தியமங்கலம்- கோவை சாலையில் அமைந்துள்ள இந்த மரத்தில் தேனீக்கள் இருப்பதை பாா்த்து சிலா் தீவைத்து அழித்தனா். அப்போது மரத்தின் அடிபாகத்தில் தீப்பற்றி மரத்தின் பிற பகுதிக்கும் பரவியது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் மரம் சேதமடைந்து விழும் நிலையில் இருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மின் வாரிய ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த மின்வாரிய ஊழியா்கள் மரத்தின் வழியாக சென்ற ஒயா்களை அகற்றினா். தீயணைப்பு வீரா்கள் மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.