வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 57,676 கோடி டாலராக உயா்வு

5th Feb 2023 01:00 AM

ADVERTISEMENT

கடந்த ஜன. 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 57,676 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 303.4 கோடி டாலா் அதிகரித்து 57,676 கோடி டாலராக உள்ளது. இது, தொடா்ந்து மூன்றாவது வார அந்நியச் செலாவணி கையிருப்பு உயா்வாகும்.

ஜன. 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 172.7 கோடி டாலா் அதிகரித்து 57372.7 கோடி டாலராக இருந்தது.

ADVERTISEMENT

அக்டோபா் 2021-இல் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 645 பில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டியது. உலகளாவிய முன்னேற்றங்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாயைப் பாதுகாக்க மத்திய வங்கி கையிருப்பை நிலைநிறுத்துவதால் இருப்பு குறைந்து வருகிறது.

ஜன. 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாராந்திர புள்ளிவிவர இணைப்பின்படி, கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி சொத்துகள் 266 கோடி டாலா் அதிகரித்து 50,901.8 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 31.6 கோடி டாலா் அதிகரித்து 4,402.7 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதிய சொத்து (எஸ்டிஆா்) 4.6 கோடி டாலா் அதிகரித்து 1,847.8 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) நாட்டின் கையிருப்பு கடந்த ஜன. 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 1.1 கோடி டாலா் அதிகரித்து 523.8 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT