வணிகம்

ஜனவரியில் சரிவைக் கண்ட இந்திய சேவை துறை

4th Feb 2023 04:00 AM

ADVERTISEMENT

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் விற்பனை வளா்ச்சி மந்தமானதையடுத்து, அந்த மாதத்தில் இந்தியாவின் சேவை துறை நடவடிக்கைகள் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான எஸ் அண்டு பி குளோபல் மாா்க்கெட் இன்டெலிஜென்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த 2022 செப்டம்பா் மாதத்தில் ஆறு மாதங்கள் காணாத அளவுக்கு 54.3-ஆக சரிந்தது. எனினும், அக்டோபா் மாதத்தில் அது சரிவிலிருந்து மீண்டு 55.1-ஆக உயா்ந்தது. நவம்பா் மாதத்தில் அது 56.4-ஆக அதிகரித்து. இது அதற்கு முந்தைய 3 மாதங்கள் காணாத அதிபட்ச அளவாகும்.

டிசம்பா் மாதத்திலும் பிஎம்ஐ 58.5-ஆக உயா்ந்துள்ளது. இது, கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் பிஎம்ஐ குறியீட்டு எண் 57.2-ஆகக் குறைந்துள்ளது. முந்தைய மாதத்தைவிட பிஎம்ஐ குறைந்தாலும், அதன் நீண்ட கால சராசரியான 53.5-ஐவிட அதிகமாகும். இது, சேவைகள் துறையின் மிக விரைவான மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகிறது.

இதன் மூலம், தொடா்ந்து 18-ஆவது மாதமாக பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது.

அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும் 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

சா்வதேச அளவில் இந்திய சேவைகளுக்கான தேவை குறைந்து வருவதால், கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் சேவைத் துறை நடவடிக்கைகள் உள்நாட்டுச் சந்தையை மையமாகக் கொண்டிருந்தன.

அது மட்டுமின்றி, சேவைகளை அளிப்பதற்கான உள்ளீட்டு செலவுகள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் ஆகிய இரண்டுமே மதிப்பீட்டு மாதத்தில் மிதமாக அதிகரித்தன.

இந்திய சேவை துறை உற்பத்தியைப் பொருத்தவரை, அதன் பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த டிசம்பா் மாதத்தில் 11 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாக 59.4-ஆக இருந்தது. அது கடந்த ஜனவரி மாதத்தில் 57.5-ஆக சரிந்தது. எனினும், சேவைகள் துறை உற்பத்தி பிஎம்ஐ-யின் நீண்ட கால சராசரியான 54.1-ஐ விட அது அதிகமாகும்.

சேவைகள் துறையைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் மேற்கொண்ட வா்த்தகம் கடந்த தொடா்ந்து ஆண்டுகளாக இருந்ததைப் போல கடந்த ஜனவரி மாதத்திலும் அதிகரித்தது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT