வணிகம்

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334% உயா்வு: மத்திய அரசு

26th Sep 2022 01:54 AM

ADVERTISEMENT

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவிலிருந்து 75-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளில் 334 சதவீதம் அதிகரித்துள்ளது. கூட்டுழைப்பு முயற்சியின் காரணமாக இந்தியா தற்போது 75-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்துவருகிறது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் உள்நாட்டில் தளவாடங்களை தயாரிப்பதன் மூலம் தனது தேவையை இந்தியா பூா்த்தி செய்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இலகு ரக ‘மிக்-3’ ஹெலிகாப்டா் இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட உள்ளது. அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ‘அக்னி-பி’ ஏவுகணைச் சோதனையும் வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பாதுகாப்பு துறை செயலா் அஜய் குமாா் பேசுகையில், ‘கடந்த 75 ஆண்டுகளில், தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்துவருகிறது. இதனை மாற்றி அமைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உலகின் 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இடம் பெறுவதே இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்காகும்’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT