வணிகம்

வேகமாகக் குறைந்து வரும் வங்கிகளின் வாராக் கடன்

24th Sep 2022 11:38 PM

ADVERTISEMENT

 நடப்பு நிதியாண்டின் முடிவில் வங்கிகளின் வாராக் கடன் விகிதம் 0.90 சதவீதம் குறையும் என்று சந்தை ஆய்வு அமைப்பான கிரிசில் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போது வங்கிகளின் வாராக் கடன் சுமாா் 6 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முடிவில் 0.9 சதவீதம் குறைந்து, அது 5 சதவீதமாகும்.

அடுத்த நிதியாண்டில் வாராக் கடன் மேலும் சரிந்து 4 சதவீதமாகும்.

ADVERTISEMENT

இருந்தாலும், சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பிரிவுக்கு (எம்எஸ்எம்இ) வழங்கப்பட்ட கடன்களில் வாராக் கடன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கரோனா நெருக்கடியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த தொழில் பிரிவில் மொத்த வாராக் கடன் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி இருந்த 9.3 சதவீதத்திலிருந்து, அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியில் 10-லிருந்து 11 சதவீதமாக உயரக்கூடும்.

எனினும், பெரு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களில் வாராக் கடன் விகிதம் சரிவைச் சந்தித்துக்கும்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் 31-இல் வங்கிகளின் வாராக் கடன் 16 சதவீதமாக இருந்தது. அது, வாராக் கடனின் அதிகபட்ச விகிதமாகும். நடப்பு நிதியாண்டில் அது 2 சதவீதமாகக் சரியும்.

வங்களின் கடனளிப்பில் பெரு நிறுவனங்கள் பிரிவுக்கு பாதிக்கும் மேற்பட்ட பங்குள்ளது. வாராக்கடன் விகிதம் குறைவதற்கு இது உதவும்.

மேலும், மொத்தம் வழங்கப்பட்டுள்ள கடன்களில் பாதுகாப்பான கடனளிப்புப் பிரிவு கடந்த 2017-ஆம் ஆண்டு 59 சதவீதம் மட்டுமே இருந்தது. அது, தற்போது 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஆனால் அதே நேரம், பாதுகாப்பு குறைவான கடனளிப்புப் பிரிவு 17 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதன் காரணமாக, வங்கிகளின் வாராக் கடன் விதிகம் வெகுவாகச் சரியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT