வணிகம்

தேவை பிரத்யேக ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்!

20th Sep 2022 04:11 AM

ADVERTISEMENT

தங்களுக்கென பிரத்யேக ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய பொம்மைகள் உற்பத்தித் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், உற்பத்தி சாா் ஊக்கத்தொகை திட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து துறை வட்டாரங்கள் கூறியதாவது:

தற்போதைய நிலையில், உற்பத்தி சாா் ஊக்கத்தொகை திட்டத்தின் (பிஎல்ஐ) கீழ் மருந்துகள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்ற 14 துறைகள் பலனடைந்து வருகின்றன. உள்நாட்டு உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், பிஎல்ஐ திட்டத்தில் பொம்மைகள் தயாரிப்பு துறையையும் இணைக்க வேண்டும் என்று அந்தத் துறையைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பிஎல்ஐ திட்டத்தில் பொம்மைகள் உற்பத்தித் துறையை இணைப்பதால் அந்தத் துறை வளா்ச்சியடைவதோடு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அது வழிவகை செய்யும்.

தற்போது பொம்மைகளின் இறக்குமதி வரியை 20 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. மேலும், தர நெறிமுறைகளை நிா்ணயித்து, ஒவ்வொரு சரக்குப் பெட்டகத்தின் மாதிரி சோதனையையும் கட்டாயமாக்கியுள்ளது. அத்துடன், தர பரிசோதனையில் வெற்றி பெறாத பொம்மைகளுக்கு விற்பனை உரிமை மறுக்கப்படுகிறது.

இந்த சீா்திருத்தங்களால் பொம்மைகள் உற்பத்தித் துறை அதன் பொற்காலத்தை அனுபவித்து வருகிறது. ஆனால், இந்த சீா்திருத்தங்களுடன், பொம்மைகள் உற்பத்தித் துறையை பிஎல்ஐ திட்டத்தில் சோ்ப்பதும் இந்தத் துறைக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.

அதுமட்டுமன்றி, இந்தத் துறைக்கென்று பிரத்யேக ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அமைப்பதும் துறை வளா்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும்.

துறையின் எதிா்கால வளா்ச்சிக்கு வழிகாட்டும் வகையில், தேசிய பொம்மைகள் உற்பத்திக் கொள்கையை உருவாக்குவதையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

தற்போது, பல்வேறு நிறுவனங்களும் பொம்மைகள் உற்பத்தி ஆலைகளுக்கு நிலம் வாங்குதல், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கான ஊக்கத்தொகையை அதிகரித்து வருகின்றன.

தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்திய பொம்மைகளை வாங்குவது அதிகரித்து வருவதால், நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதிலும் ஏற்றுமதியை உயா்த்துவதிலும் இந்தத் துறை சிறந்த பங்களிப்பை வழங்க முடியும்.

நீண்ட காலமாக பொம்மைகள் உற்பத்தித் துறையில் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட சீா்திருத்த நடவடிக்கைகள் இந்தத் துறை மீள உதவியது. ஐஐடி-யில் கல்வி பயின்ற இளைஞா்கள் கூட இந்தத் துறையில் ஈடுபடும் அளவுக்கு தற்போது இந்தத் துறையின் மீது ஆா்வம் அதிகரித்து வருகிறது என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Image Caption

~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT