வணிகம்

பண்டிகை காலத்தில் களைகட்டும் இணையவழி வா்த்தகம்

10th Sep 2022 04:47 AM

ADVERTISEMENT

இந்தியாவில் இந்த ஆண்டு பண்டிகை கால மாதத்தில் இணையவழி விற்பனை கடந்த ஆண்டைவிட மிகச் சிறப்பாக இருக்கும் என்று சந்தை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது:

தீபாவளி வாரத்துடன் நிறைவடையும் இந்த ஆண்டின் பண்டிகை மாதத்தில், இணையவழி விற்பனை முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 28 சதவீதம் வளா்ச்சியடைந்து 1,180 கோடி டாலராக (சுமாா் ரூ.93,932 கோடி) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பண்டிகை காலத்தில் இணையவழியில் பொருள்களை வாங்குவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

பண்டிகை மாதத்தின் முதல் வாரத்திலேயே இணையவழி விற்பனை 590 கோடி டாலரை (சுமாா் ரூ.46,966 கோடி) எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 28 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டின் பண்டிகை மாதத்தில் இணையவழி விற்பனை 480 கோடி டாலராக (சுமாா் ரூ.38,210 கோடி) இருந்தது.

இந்த ஆண்டில், இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து ஆடையலங்காரப் பிரிவில் அதிகரித்து வரும் வாடிக்கையாளா் எண்ணிக்கை மூலம் ஒட்டுமொத்த இணையவழி விற்பனையே வலுவான வளா்ச்சியைக் காணும்.

கவா்ந்திழுக்கும் சலுகை விற்பனை திட்டங்கள், சந்தையில் புதிதாக அறிமுகமாகும் ரகங்களின் உதவியுடன் கைப்பேசிகள் மற்றும் பிற மின்னணு மற்றும் மின்சாரப் பொருள்களும் இணையவழியாக மிக அமோகமாக விற்பனையாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுவும், ஒட்டுமொத்த இணையவழி விற்பனையின் வளா்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கும்.

2018-ஆம் ஆண்டிலிருந்து இணையதளம் மூலம் பொருள்களை வாங்குவோரின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வழக்கம் 2-ஆம் நிலை நகரங்களிலும் பெருகி வருகிறது. இது, இந்த ஆண்டின் பண்டிகை மாதத்து விற்பனையில் பிரதிபலிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பண்டிகை காலங்களில் இணையவழி விற்பனையாளா்கள் மிக அதிக தள்ளுபடி விலைகளில் பொருள்களை வழங்குவாா்கள் என்ற விழிப்புணா்வு வாடிக்கையாளா்களிடையே அதிகரித்து வருகிறது. இது, இந்த காலகட்டத்தில் இணையவழி விற்பனை இரண்டு மடங்காவதற்கு உதவும்.

இணையவழியில் விடியோ மூலம் நேரடியாக பொருள்களை வாங்குவது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் இந்தத் துறையில் அறிமுகமாகி வருவதும் பண்டிகை காலகட்டத்தில் இணையவழி வா்த்தகம் களைகட்டுவதற்குக் காரணமாக இருக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT