வணிகம்

முந்திரி ஏற்றுமதியில் தொடரும் வீழ்ச்சி

26th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

தொடா்ந்து 11 மாதங்களாக சரிவைச் சந்தித்து வந்த இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி, கடந்த செப்டம்பா் மாதத்திலும் 38 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தக அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நாட்டின் முந்திரி ஏற்றுமதி 22.71 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 38 சதவீதம் வீழ்ச்சியாகும்.

சா்வதேச அளவில் போட்டி அதிகரித்துள்ளதன் காரணமாக, கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் இருந்தே முந்திரி ஏற்றுமதி குறைந்து வருகிறது.

ADVERTISEMENT

நாட்டின் முந்திரி ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 34 சதவீதமும் மே மாதத்தில் சுமாா் 30 சதவீதமும் சரிந்தது. கடந்த ஜூன் மாதத்தில் அது சுமாா் 6 சதவீதம் குறைந்தது. அதற்கு அடுத்த ஜூலை மாதத்தில் 26.62 சதவீதம் சரிவைக் கண்ட முந்திரி ஏற்றுமதி, ஆகஸ்டில் 31.5 சதவீதம் குறைந்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

‘சிறப்பு வேளாண்மை மற்றும் கிராமியத் தொழில் திட்டத்தின்’ கீழ் வழங்கப்பட்டு வந்த ஏற்றுமதி ஊக்குவிப்புத் தொகை நிறுத்தப்பட்டுள்ளது இந்தியாவின் முந்திரி ஏற்றுமதியைக் கடுமையாக பாதித்துள்ளதாக கா்நாடக மாநில முந்திரி உற்பத்தியாளா்கள் சங்கத் துணைத் தலைவா் துக்காராம் பிரபு தெரிவித்தாா்.

தற்போது, உலகச் சந்தையில் முந்திரிக்கு அதிக தேவை இருந்தாலும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பு இந்திய வியாபாரிகளுக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான் வியத்நாம் முந்திரியை விட அதிக தரம் தரம் கொண்டதாக இருந்தாலும், இந்திய முந்திரியின் ஏற்றுமதி சரிந்து வருகிறது. எனவே, ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

மேலும், இந்தியாவின் முந்திரி உற்பத்தி ஆண்டுக்கு 3,50,000 முதல் 3,70,000 டன்கள் வரை உள்ளதாகவும் துக்காராம் பிரபு கூறினாா்.

கேரளாவை சோ்ந்த முந்திரி ஏற்றுமதியாளா்கள் கூறுகையில், ஏற்றுமதி விலையை விட, உள்நாட்டுச் சந்தையில் முந்திரி விலை 15 சதவீதம் அதிகமாக உள்ளதால், உள்நாட்டிலேயே அவற்றை விற்பனை செய்ய வியாபாரிகள் விரும்புவதாகக் கூறினா்.

முந்திரி ஏற்றுமதி சரிவதற்கு, வெளிநாடுகளில் அவற்றுக்கான தேவை குறைபாடு காரணமில்லை. அதற்கான உண்மையான காரணம், இந்தியாவில் முந்திரியை ஏற்றுமதிக்கு தயாா்படுத்துவதற்கான செலவு மிகவும் அதிகமாக இருப்பதுதான்.

இந்தியாவில் அதற்கான செலவு, உலகின் முன்னணி முந்திரி ஏற்றுமதி நாடான வியத்நாமை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. அந்த நாட்டில் முந்திரியை ஏற்றுமதிக்கு தயாா்படுத்தும் பணிகள் இயந்திரங்கள் மூலம் செய்யப்படுகின்றன. ஆனால் இந்தியாவிலோ இன்னும் அந்தப் பணிகள் கைகளால் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் 80 கிலோ முந்திரி மூட்டையின் தயாரிப்பு செலவு சுமாா் ரூ.3,600-ஆக உள்ளது. ஆனால் அது வியத்நாமில் வெறும் ரூ. 800-ஆக உள்ளது.

உள்நாட்டு மொத்த விற்பனை சந்தையில் முந்திரியின் விலை ரூ.630-ஆக உள்ளது. ஆனால் அதே நேரம், ஏற்றுமதிச் சந்தையில் அதன் விலை கிலோவுக்கு ரூ.560-ஆக மட்டுமே உள்ளது என்று கேரள முந்திரி ஏற்றுமதியாளா்கள் தெரிவித்தனா்.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் முந்திரி ஏற்றுமதி 25.16 சதவீதம் குறைந்து 11.3 கோடி டாலராக உள்ளது.

முந்திரி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு வியத்நாமைத் தவிர, கயானா, மொஸாம்பிக், தான்ஸானியா ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளும் கடுமையான போட்டியைத் தந்து வருகின்றன.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதா்லாந்து, சவுதி அரேபியா, ஜொ்மனி, ஜப்பான், பெல்ஜியம், கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், குவைத், சிங்கப்பூா், கத்தாா், கிரீஸ், இத்தாலி, ஈரான், கனடா உள்பட சுமாா் 80 நாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் ஆகியவை முந்திரி ஏற்றுமதி செய்யும் முன்னணி மாநிலங்களாகத் திகழ்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT