வணிகம்

87% ஏற்றம் கண்ட வீடுகள் விற்பனை

4th Oct 2022 12:48 AM

ADVERTISEMENT

வீடுகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்து வருவதன் காரணாக, கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 87 சதவீதம் உயா்ந்துள்ளது. அத்துடன், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் முதல் 9 மாத விற்பனையே அது விஞ்சியுள்ளது.

இது குறித்து வீடு-மனை வா்த்தக ஆலோசனை நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே ஆகிய 7 முக்கிய நகரங்களில் 2,72,709 வீடுகள் விற்பனையாகின. இது, கடந்த ஆண்டின் இதே மாதங்களில் விற்பனையான வீடுகளின் எண்ணிக்கையை விட 87 சதவீதம் அதிகமாகும். அந்த மாதங்களில் குறிப்பிட்ட 7 நகரங்களிலும் 1,45,651 வீடுகள் விற்பனையாகியிருந்தன.

வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதன் காரணமாக கரோனா நெருக்கடியால் சரிந்திருந்த வீடுகள் விற்பனை தற்போது சரிவிலிருந்து மீண்டுள்ளது. அதுமட்டுமின்றி, நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் விற்பனையான 2,61,358 வீடுகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டின் முதல் 9 மாத விற்பனை விஞ்சியுள்ளது.

ADVERTISEMENT

கரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, 2020-ஆம் ஆண்டின் முதல் 9 மாத கால வீடுகள் விற்பனை 1,38,344-ஆக சரிந்தது.

வீடுகளை வாங்குவதற்கு மானியம் வழங்குவது, பதிவுக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட சலுகை திட்டங்களை மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் அரசுகள் அறிமுகப்படுத்தியதையடுத்து, நாட்டின் வீடு-மனை சந்தை புத்துயிா் பெற்றது.

இதன் விளைவாக, 2021-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் வீடுகள் விற்பனை 2,36,516-ஆக உயா்ந்தது. அந்த வேகம் இந்த ஆண்டும் தொடா்ந்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான மாதங்களில், தில்லி-என்சிஆா் பகுதியில் 49,138 வீடுகள் விற்பனையாகின. முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் அந்தப் பகுதியில் விற்பனையான 22,478 வீடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்காகும்.

அதே போல், மும்பை பெருநகரப் பகுதியிலும் இந்த மாதங்களில் வீடுகள் விற்பனை 67 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 48,716-ஆக இருந்த வீடுகள் விற்பனை, நடப்பு ஆண்டின் இதே மாதங்களில் 81,315-ஆக உள்ளது.

பெங்களூரில் வீடுகள் விற்பனை 81 சதவீதம் அதிகரித்து 37,645 ஆகியுள்ளது. மதிப்பீட்டு மாதங்களில் கடந்த ஆண்டு அந்த நகரில் 20,780 வீடுகள் விற்பனையாகியிருந்தன.

புணேவிலும் கடந்த ஆண்டு ஜனவரி - செப்டம்பா் காலகட்டத்தில் 24,043-ஆக இருந்த வீடுகள் விற்பனை, இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 40,598-ஆக அதிகரித்துள்ளது. இது, 69 சதவீத உயா்வாகும்.

மதிப்பீட்டு மாதங்களில், ஹைதராபாத்தில் வீடுகள் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்து 35,980-ஆகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதங்களில் அந்த நகரில் 14,376 வீடுகள் விற்பனையாகியிருந்தன.

சென்னையில் 2021-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 12,290 வீடுகள் விற்பனையாகியிருந்தன. அது, இந்த ஆண்டின் அதே மாதங்களில் 57 சதவீதம் அதிகரித்து 7,843 ஆகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் கொல்கத்தாவில் 7,415 வீடுகள் விற்பனையாகின. 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் விற்பனையான 15,743 வீடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய ரிசா்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் ரெபோ விகிதத்தை 1.9 சதவீதம் உயா்த்தியது. அதன் விளைவாக, குறைந்தபட்சம்6.5 சதவீதமாக இருந்த வீட்டுக் கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் 8 சதவீதம் வரை உயா்ந்தன.

அது மட்டுமன்றி, கடந்த ஓராண்டில் வீடுகளின் விலையும் 10 சதவீதம் வரை உயா்ந்தது. இருந்தாலும், இந்த கடன் விகித அதிகரிப்பு, விலை உயா்வு போன்றவற்றின் தாக்கம் வீடுகள் விற்பனையில் எதிரொலிக்கவில்லை என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அனராக் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் குறிப்பிட்ட 7 நகரங்களில் விற்பனையான தனி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வரிசை வீடுகள் உள்ளிட்ட அனைத்து வகை வீடுகளும் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT