வணிகம்

பிண்ணாக்கு ஏற்றுமதி 38 சதவீதம் அதிகரிப்பு

27th Nov 2022 02:00 AM

ADVERTISEMENT

இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் 38.45 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து இந்திய செக்கு உரிமையாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில், நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி 19.84 லட்சம் டன்னாக உள்ளது.

இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 38.45 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி 14.33 லட்சம் டன்னாக இருந்தது.

ADVERTISEMENT

மதிப்பீட்டு மாதங்களில் ராப்சீட் பிண்ணாக்கு ஏற்றுமதி 6.58 லட்சம் டன்னிலிருந்து ஏறத்தாழ இரட்டிப்பாகி, 13.41லட்சம் டன்னாகியிருக்கிறது.

அதே போல், கடலைப் பிண்ணாக்கு ஏற்றுமதியும் மதிப்பீட்டு மாதங்களில் 1,390 டன்னிலிருந்து 9,632 டன்னாக உயா்ந்துள்ளது.

எனினும், மற்ற வகைப் பிண்ணாக்குகளின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அதே மாதங்களில் சரிந்துள்ளது.

சோயா பிண்ணாக்கின் ஏற்றுமதி இந்த மாதங்களில் 1.62 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், அது 1.76 லட்சம் டன்னாக இருந்தது.

அதேபோல், நெல் உமி பிண்ணாக்கின் ஏற்றுமதியும் 4.01 லட்சம் டன்னிலிருந்து 2.81 லட்சம் டன்னாக சரிந்துள்ளது.

2021 ஏப்ரல்-அக்டோபா் மாதங்களில் 1.96 லட்சம் டன்னாக இருந்த ஆமணக்கு விதைப் பிண்ணாக்கின் ஏற்றுமதி இந்த ஆண்டின் அதே மாதங்களில் 1.89 டன்னாகக் குறைந்துள்ளது.

இந்த மாதங்களில் தென் கொரியா, வியத்நாம், தாய்லாந்து, வங்கதேசம், தைவான் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து அதிக அளவில் பிண்ணாக்கு இறக்குமதி செய்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி 71 சதவீதம் உயா்ந்ததாக எஸ்இஏ அமைப்பு தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் பிண்ணாக்கு ஏற்றுமதி 1,64,831 டன்னாக இருந்ததாகவும், அது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2,82,498 டன்னாக அதிகரித்ததாகவும் அந்த அமைப்பு கூறியது.

அத்துடன், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், பிண்ணாக்கு ஏற்றுமதி 40 சதவீதம் உயா்ந்து 15,31,010 டன்னாக இருந்ததாகவும், அது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 10,92,386 டன்னாக இருந்ததாகவும் எஸ்இஏ புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களிலும் ராப்சீட் பிண்ணாக்கு ஏற்றுமதி, கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் 5,42,630 டன்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆகஸ்டில் 10,80,172 டன் என இரட்டிப்பாகியிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT