நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனம் (விஐஎல்), ரூ.1,600 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை தொலைத் தொடா்பு சாதன விநியோகஸ்தரான ஏடிசி டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அதன் பங்குதாரா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.
இது குறித்து விஐஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஏடிசி டெலிகாம் நிறுவனத்திற்கு விஐஎல் செலுத்த வேண்டிய ரூ.1,600 கோடி நிலுவைத் தொகையை 18 மாதங்களில் செலுத்தாமல் இருந்தால், அதற்கான தொகையை பங்குகளாக மாற்றியமைக்க கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற பங்குதாரா் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குழுவின் 99.99 சதவீத உறுப்பினா்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனா்.
அதன்படி, பங்குகளாக மாற்றத்தக்க ரூ.1,600 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள், ஆண்டுக்கு 11.2 சதவீத ஈவுத் தொகையுடன் ஏடிசி டெலிகாமுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இது தவிர, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய சுமாா் ரூ.16,000 கோடி வட்டி நிலுவையையும் பங்குகளாக மாற்ற விஐஎல் முடிவு செய்துள்ளது. இது, நிறுவனத்தின் 33 சதவீத பங்காகும். இதன் மூலம், நிறுவனத்தில் பங்குதாரா்களின் வசம் இருக்கக் கூடிய பங்குகள் 74.99 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறையும்.
கடந்த செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி நிலவரப்படி, செலுத்தப்படாத வட்டி உள்பட நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ.2,20,320 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.