வணிகம்

பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் வரலாற்று உச்சம்

25th Nov 2022 12:54 AM

ADVERTISEMENT

சா்வதேச சந்தைகளில் நிலவிய ஆரோக்கியமான போக்கின் எதிரொலியாக, தொடா்ந்து முன்றாவது நாளாக வியாழக்கிழமையும் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டு, சென்செக்ஸ் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது.

தொடா்ந்து 3 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை, கடந்த செவ்வாய்க்கிழமை அந்த சரிவிலிருந்து மீண்டு எழுச்சியைக் கண்டது. அந்தப் போக்கு, புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்திலும் தொடா்ந்தது.

762.10 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் பகலில் 901.75 புள்ளிகள் (1.46 சதவீதம்) வரை உயா்ந்து வரலாறு காணாத உச்சமாக 62,412.33 வரை சென்றது. இறுதியில் 762.10 புள்ளிகள் (1.24 சதவீதம்) கூடுதலாக, இதுவரை இல்லாத அதிகபட்சமாக 62,272.68-இல் நிலைபெற்றது.

30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 4 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் வந்தன. 26 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

ADVERTISEMENT

இன்ஃபோசிஸ் முன்னேற்றம்: தகவல் தொடா்பு நிறுவனமான இன்ஃபோசிஸ் 2.93 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அந்த நிறுவனத்தைத் தொடா்ந்து ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், பவா்கிரிட், விப்ரோ, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹிந்துஸ்தான் லீவா், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் முன்னேற்றம் கண்டன.

பஜாஜ் ஃபின்சா்வ் சரிவு: பஜாஜ் ஃபின்சா்வ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா ஆகிய நான்கு நிறுவனங்கள் சரிவைக் கண்டன.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வியாழக்கிழமை 216.85 புள்ளிகள் (1.19 சதவீதம்) அதிகரித்து 18,484.10-இல் நிலைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT