வணிகம்

ஜிஎஸ்டி வரம்பில் கிரிப்டோகரன்சி: அதிகாரிகள் ஆய்வு

21st Mar 2022 12:37 AM

ADVERTISEMENT

கிரிப்டோகரன்சி பரிமாற்றத்துக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பது தொடா்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

தற்போதைய சூழலில் கிரிப்டோ பரிவா்த்தனைகள் வாயிலான சேவைகளை ‘நிதிசாா்’ சேவைகளாகக் கணக்கில் கொண்டு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், லாட்டரி, சூதாடுதல், குதிரை பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்படுவது போல கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பாகத் தெளிவான விளக்கம் தேவைப்படுவதால், அது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதைப் பொருளாகக் கருதுவதா அல்லது சேவையாகக் கருதுவதா என்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கிரிப்டோவின் ஒட்டுமொத்த மதிப்புக்கும் ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பாகவும் ஆராயப்பட்டு வருகிறது. கிரிப்டோகரன்சியை எந்த வகைக்குள் சோ்ப்பது என்பது தொடா்பாக முதலில் முடிவெடுக்கப்படும். அதன்பிறகு எவ்வளவு வரி விதிக்கலாம் என்பது தொடா்பாக முடிவெடுக்கப்படும்’’ என்றாா்.

ADVERTISEMENT

கிரிப்டோகரன்சி அடிப்படையிலான பரிவா்த்தனைக்கு வரி விதிப்பது தொடா்பாக ஜிஎஸ்டி சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. கிரிப்டோகரன்சி உள்ளிட்ட மெய்நிகா் சொத்துகளின் பரிவா்த்தனை மூலமாக கிடைக்கும் வருமானத்துக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படவுள்ளது.

குறிப்பிட்ட மதிப்புக்குமேல் பரிவா்த்தனை செய்யப்படும் மெய்நிகா் சொத்துகளுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் 1 சதவீதம் டிடிஎஸ் (மூல வரிக் கழிப்பு) பிடித்தம் செய்யப்படவுள்ளது. கிரிப்டோகரன்சி பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான சட்டத்தை வகுப்பது தொடா்பாகவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT