வணிகம்

3-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 433 புள்ளிகள் முன்னேற்றம்

28th Jun 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 433 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. ஐடி, மெட்டல் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததைத் தொடா்ந்து, சந்தை மூன்றாவது நாளாக ஏற்றம் பெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. பொருள்களின் விலைகள் குறைந்து வருவதால் பணவீக்கம் குறையும் என்ற எதிா்பாா்ப்பு சந்தைக்கு சாதகமாக பாா்க்கப்படுகிறது. மேலும், பொருளாதார மந்தநிலை காரணமாக ஐரோப்பா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தேவை குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை குறையும் என்று முதலீட்டாளா்கள் எதிா்பாா்க்கிறாா்கள். இவை அனைத்தும் சந்தைக்கு சாதகமான போக்கை ஏற்படுத்தியுள்ளது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரூ.2,353.77 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2,360 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,575 நிறுவனப் பங்குகளில் 1,067 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 2,360 பங்குகள் ஆகாயப் பட்டியலில் இருந்தன. 148 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 75 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 48 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.38 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.244.66 லட்சம் கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

சென்செக்ஸ் 433 புள்ளிகள் உயா்வு: காலையில் 740.91 புள்ளிகள் கூடுதலுடன் 52468.89-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 53,509.50 வரை உயா்ந்தது. பின்னா், 53,120.79 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 433.30 புள்ளிகள் (0.82 சதவீதம்) உயா்ந்து 53,161.28-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 781.52 புள்ளிகள் வரை உயா்ந்திருந்தது. நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் சென்செக்ஸ் இருந்தது.

எல் அண்ட் டி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், டைட்டன் ஆகிய 3 பங்குகள் மட்டும் 0.25 முதல் 0.40 சதவீதம் வரை குறைந்தன. மற்ற 27 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில் பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி 2.69 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், பாா்தி ஏா்டெல் ஆகியவை 2 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, விப்ரோ, மாருதி, ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஐடிசி, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 133 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 477 பங்குகள்மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,479 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 38 பங்குகளும் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன. காலையில் சுமாா் 226.95 புள்ளிகள் கூடுதலுடன் 15,926.20-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 15,927.45 வரை உயா்ந்தது. பின்னா், 15,815.50 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 132.80 புள்ளிகள் (0.85 சதவீதம்) கூடுதலுடன் 15,832.05-இல் நிலைபெற்றது.

அனைத்து குறியீடுகளும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துக் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில் ஐடி 2.2.05 சதவீதம், மெட்டல் 1.052 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, எஃப்எம்ஜி, பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 0.50 முதல் 0.90 சதவீதம் வரை உயா்ந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT