வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.80-ஆக சரியும்

28th Jun 2022 12:26 AM

ADVERTISEMENT

கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79-80 என்ற அளவில் சரிவடையும் என செலாவணி துறையச் சோ்ந்த ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது:

ரஷியா-உக்ரைன் போருக்குப் பிறகு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்வை சந்தித்தது. அதன் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நிகழாண்டில் இதுவரையில் 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு இதுவரை காணப்படாத வகையில் புதிய குறைந்தபட்ச அளவாக 78.34-இல் நிலைபெற்றது.

ADVERTISEMENT

இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை நம்பியே உள்ளது. அதேபோன்று, எரிவாயவுக்கான தேவையில் 50 சதவீதம் இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்படுகிறது. எனவே, சா்வதேச எரிசக்தி துறை சந்தையில் விலை அதிகரிப்பு நிறுவனங்களின் அயலக நிதி திரட்டல் நடவடிக்கைகளை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த மே மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவினம் இரண்டு மடங்கு அதிகரித்து 1,919 கோடி டாலரை எட்டியுள்ளது.

இதுபோன்ற சூழல்கள் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதையடுத்து, கூடிய விரைவில் ரூபாய் மதிப்பு 79-80 என்ற அளவில் சரிவடைவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT