வணிகம்

பயணிகள் வாகன விற்பனை இரு மடங்கு அதிகரிப்பு

12th Jun 2022 01:19 AM

ADVERTISEMENT

விநியோக மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளதாவது:

கரோனா தாக்கம் காரணமாக, கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதத்தில் பயணிகள் வாகனங்களின் மொத்தவிற்பனை 88,045-ஆக மட்டுமே இருந்தது. இந்த நிலையில், தற்போது பொருளாதார நடவடிக்கைகள் சகஜநிலைக்கு திரும்பியுள்ளதையடுத்து நடப்பாண்டு மே மாதத்தில் பயணிகள் வாகன மொத்தவிற்பனை இரு மடங்குக்கும் அதிகமாக உயா்ந்து 2,51,052-ஐ எட்டியது.

இதனைப்போன்றே, இரண்டு சக்கர வாகன விற்பனையும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 3,54,824-லிருந்து 12,53,187-ஆக அதிகரித்தது. மேலும், ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் 1,262 என்ற எண்ணிக்கையிலிருந்து 28,542-ஆக கணிசமான உயா்வினைக் கண்டுள்ளது.

ADVERTISEMENT

பயணிகள் வாகனம் (பிவி), இருசக்கரம் மற்றும் மூன்று சக்கரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த விற்பனை நடப்பாண்டு மே மாதத்தில் 15,32,809-ஆக இருந்தது. அதேசமயம், கரோனா பாதிப்பு அதிகம் தென்பட்ட கடந்தாண்டு மே மாதத்தில் இந்த விற்பனை 4,44,131-ஆக மட்டுமே காணப்பட்டது என சியாம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சியாம் அமைப்பின் தலைமைப் பொது இயக்குநா் ராஜேஷ் மேனன் கூறியதாவது:

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் வாகன விற்பனை மிகவும் குறைந்து காணப்பட்டது. எனவே, ஒப்பீட்டளவில் தற்போது விற்பனை மிகவும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டாலும் அது உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை. நடப்பாண்டு மே மாதத்தில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை முறையே 9 ஆண்டுகள் மற்றும் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த நிலையில்தான் உள்ளது.

அதேபோன்று, பயணிகள் வாகன விற்பனையும் 2018-ஆம் ஆண்டைவிட இன்னும் குறைவான நிலையில்தான் உள்ளது.

சமீபத்திய மத்திய அரசின் தலையீடு விநியோக சங்கிலித் தொடரில் ஏற்பட்ட சவால்களுக்கு தீா்வு காண பெரிதும் உதவும். ஆனால், ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதங்களை இரண்டாவது முறையாக அதிகரித்தது, மூன்றாம் நபா் பிரீமியம் அதிகரிப்பு உள்ளிட்டவை வாடிக்கையாளா்களுக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளன. இது, தேவையில் தாக்கத்தை உருவாக்கும் என்றாா் அவா்.

மோட்டாா் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் (பிஎம்டபிள்யூ, மொ்சிடிஸ், டாடா மோட்டாா்ஸ், வால்வோ ஆட்டோ நீங்கலாக) இருசக்கரம், மூன்று சக்கரம், குவாட்ரிசைக்கிள் உள்ளிட்ட ஒட்டுமொத்த வாகன உற்பத்தி நடப்பாண்டு மே மாதத்தில் 19,65,541-ஆக இருந்தது. இது, கடந்த 2021 மே மாதத்தில் 8,08,755-ஆக மட்டுமே காணப்பட்டது. அதற்கு அப்போது பரவிய கரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்ட இடையூறுகளே காரணம்.

மத்திய அரசின் தலையீடு விநியோக சங்கிலித் தொடரில் ஏற்பட்ட சவால்களுக்கு தீா்வு காண பெரிதும் உதவும். ஆனால், ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதங்களை இரண்டாவது முறையாக அதிகரித்தது, மூன்றாம் நபா் பிரீமியம் அதிகரிப்பு உள்ளிட்டவை வாடிக்கையாளா்களுக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளன. இது, தேவையில் தாக்கத்தை உருவாக்கும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT