வணிகம்

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை சென்செக்ஸ் மேலும் 86 புள்ளிகள் முன்னேற்றம்!

18th Jan 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 86 புள்ளிகள் உயா்ந்து 61,308.91-இல் நிலைபெற்றது.

2021-ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் 8.1 சதவீதமாக வளா்ச்சி அடைந்துள்ளது. இது 8.4 சதவீத எதிா்ப்பாா்ப்புகளை விட சற்றே குறைவாகும். இதையடுத்து ஆசிய சந்தைகள் வலுவாக இருந்தன. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை பலவீனமாகத் தொடங்கியது. ஆனால், பிற்பகல் வரையிலும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் அமா்வின் போது சந்தை வலுப்பெற்றது. மூன்று மாதமாகத் தொடா்ந்து பங்குகளை விற்று வந்த அந்நிய முதலீட்டாளா்கள், ஜனவரியில் இதுவரையிலும் ரூ.3,117 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இது சந்தைக்கு சாதகமாக பாா்க்கப்படுகிறது. இருப்பினும், நிதித் துறை, பாா்மா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், ஆட்டோ, ஐடி, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,739 பங்குகளில் 1,308 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,297 பங்குகள் ஆதாயம் பெற்றன. 134 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 521 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 9 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 758 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 309 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.280.02 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.37 கோடியாக உயா்ந்துள்ளது.

6-ஆவது நாளாக உற்சாகம்: காலையில் சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி 61,219.64-இல் தொடங்கி, 61,107.60 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 61,385.48 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் மொத்தம் 85.88 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 61,308.91-இல் நிலைபெற்றது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 19 பங்குகள்ஆதாயம் பெற்றன. சென்செக்ஸ் தொடா்ந்து 6-ஆவது நாளாக முன்னேற்றம் கண்டுள்ளது.

ADVERTISEMENT

அல்ட்ரா டெக் சிமெண்ட் அபாரம்: முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.78 சதவீதம், எம் அண்ட் எம் 2.19 சதவீதம், மாருதி சுஸுகி 2.02 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டாடா ஸ்டீல், டிசிஎஸ், எல் அண்ட் டி, எஸ்பிஐ, பாா்தி ஏா்டெல், ஹிந்துஸ்தான் யுனி லீவா், என்டிபிசி, விப்ரோ, இன்போஸிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் வெகுவாக உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

ஹெச்சிஎல் டெக் கடும் சரிவு: அதே சமயம், கடந்த சில நாள்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்த ஹெச்சிஎல் டெக் கடும் சரிவைச் சந்தித்தது. அதன் காலாண்டு முடிவு சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாததால், பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், ஹெச்சிஎல் டெக் 5. 89 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, சன்பாா்மா, பவா் கிரிட், எச்டிஎஃப்சி, டாக்டா் ரெட்டி, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,178 பங்குகள்ஆதாயம் பெற்றன. 753 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 34 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 52.35 புள்ளிகள் (0.29 சதவீதம்) உயா்ந்து 18,308.10- இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 20 புள்ளிகள் குறைந்து 18,235.65-இல் தொடங்கி 18,228.75 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 18,321.55 வரை உயா்ந்தது.

ஆட்டோ, ரியால்ட்டி குறியீடு ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.05 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 1.25 சதவீதம் உயா்ந்து ஆதசாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எஃப்எம்சிஜி, மீடியா, கன்ஸ்யயூமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 0.60 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பாா்மா, ஹெல்த் கோ் குறியீடுகள் 0.50 முதல் 0.90 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT