தேசிய பங்குச் சந்தையில் (என்.எஸ்.இ.) நடத்தப்பட்ட மோசடி கிரிக்கெட் சூதாட்ட மோசடிக்கு ஒப்பானதாக உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
தேசிய பங்குச் சந்தையின் தகவல் சேமிப்பகத்தையும் அதன் தரவுகளையும் ஒருசில தரகா்கள் முன்னுரிமை அடிப்படையில் அணுக அனுமதித்தது குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் தங்களது விசாரணையை துரிதப்படுத்தியுள்ளன. இந்த மோசடி கிரிக்கெட் சூதாட்ட மோசடிக்கு ஒப்பானதாக பாா்க்கப்படுகிறது. தகவல்களை முன்கூட்டியே அறிவதன் மூலம் மோசடியில் ஈடுபட்ட தரகா்கள் பங்குச் சந்தையிலிருந்து பெரிய அளவில் ஆதாயம் பெற்றுள்ளனா்.
உண்மையான முதலீட்டாளா்கள் இவா்களால் பாதிப்படைந்துள்ளனா். தரவுகளை வேகமாக அணுகுவதன் வாயிலாக குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கி அதிக விலைக்கு மோசடி தரகா்கள் விற்பனை செய்துள்ளனா். இதனால், தனிப்பட்ட முதலீட்டாளா்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அவா்களுக்கு ஏற்பட்ட இழப்பானது சிறிய அளவில் மட்டுமே இருக்கும். ஆனால், ஒவ்வொரு நாளும், லட்சம், கோடியில் வா்த்தகம் செய்வோருக்கு இது பல கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
எனவே, இந்த மோசடியைப் பொருத்தவரையில் விரிவான மற்றும் ஆழமான முறையில் விசாரணையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. தேவைப்படும்பட்சத்தில், வெளிநாட்டு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு மற்றும் முகமை அமைப்புகளிடமிருந்தும் உதவிகள் கோரப்படும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.