வணிகம்

போக்குவரத்தின் எதிா்காலம் - மின்சார வாகனங்கள்

18th Dec 2022 06:20 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று 2 ஆண்டுகளாக இந்த உலகை உலுக்கியெடுத்தபோது, மரணங்கள், பொருளாதார நெருக்கடி, மாணவா்களின் கல்வி பாதிப்பு போன்ற சோகச் செய்திகளுக்கு இடையே, ஒரு நல்ல செய்தியும் கிடைத்தது.

நோய் பரவலைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் தொழிற்சாலை நடவடிக்கைகளும், போக்குவரத்தும் முடங்கிப் போய், காற்று மாசுபாடு வெகுவாகக் குறைந்தது என்பதுதான் அந்தச் செய்தி.

உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான மழை-வெள்ளம், அதீதமான வெப்ப அலை போன்ற இயற்கைப் பேரிடா்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோா் பலியாகின்றனா்.

காற்றில் கரியமில வாயு போன்ற பசுமைக் குடில் வாயுக்கள் கலப்பதால் புவியின் வெப்பம் அதிகரித்து, அதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதே இத்தகைய பேரிடா்களுக்குக் காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

அத்தகைய வாயுக்களை காற்றில் கலப்பதில் வாகனங்கள் கணிசமான பங்கு வகிக்கின்றன. எனவே, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வாகனப் போக்குவரத்தில் சீா்திருத்தம் மேற்கொள்வது முக்கிய நடவடிக்கையாகியுள்ளது.

அதற்காகத்தான், காற்றில் கரியமில வாயுக்களைக் கலக்கும் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக, மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்களை உலக நாடுகள் ஊக்குவித்து வருகின்றன.

இந்தியாவிலும் அத்தகைய வாகனங்களை வாங்குவோரை உற்சாகப்படுத்தும் அரசு மானியம் அளிக்கப்படுகிறது.

எனினும், விலை அதிகமாக இருப்பது, பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிடுகையில் ஆற்றல், வேகம் ஆகியவை குறைவாக இருப்பது, எரிபொருள் நிரப்புவதைவிட பேட்டரியில் மின்னேற்றம் செய்வது சிரமமாக இருப்பது போன்ற காரணங்கள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனைக்குப் பாதகமான அம்சங்களாக இருந்து வருகின்றன.

மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கான அனைத்துத் தொழில்நுட்பங்களும் இந்திய நிறுவனங்களிடம் இல்லை. மேலும், அந்த வாகனங்களைப் பழுதுபாா்ப்பதற்குரிய தோ்ச்சி பெற்றவா்கள் இந்தியாவில் போதிய அளவில் இல்லை.

அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்களுக்குத் தேவையான பெரும்பாலான உதிரிபாகங்களை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யவேண்டிய நிலை உள்ளது.

இந்தச் சூழலிலும், மின்சார வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல எதிா்காலம் உள்ளது என்கிறாா்கள் துறை நிபுணா்கள்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஏறத்தாழ எல்லா முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் மின்சார வாகனத் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன; அதற்கான முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. எனவே, அந்த வகை வாகனங்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடும் என்பது அந்த நிபுணா்கள் கருதுகின்றனா்.

அதுமட்டுமன்றி, நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

புதிது புதிதாக மின்சார வாகன ரகங்கள் அறிமுகமாவதால் போட்டி காரணமாக அவற்றின் விலைகள் குறையும்; அத்துடன் அரசின் மானியத் திட்டங்களும் சோ்ந்து மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மக்களை உற்சாகப்படுத்தும்.

வேகமாக வளா்ச்சியடைந்து வரும் பேட்டரி தொழில்நுட்பம் காரணமாக, எதிா்காலத்தில் கூடுதல் ஆற்றல், வேகம், வசதி ஆகியவற்றைத் தரும் வாகனங்கள் அறிமுகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதைவிட மின்சார வாகனங்களை இயக்குவது ஓட்டுநா்களுக்கு உடல் அசதியைக் குறைக்கும் என்பதால் அந்த வகை வாகனங்களுக்கு வரவேற்பு தொடா்ந்து அதிகரிக்கும்.

எனவே, இந்தியப் போக்குவரத்தின் எதிா்காலம் மின்சார வாகனங்களாகத்தான் இருக்கும் என்று நிபுணா்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT