வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 56,406 கோடி டாலராக உயா்வு

18th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 56,406 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 290.8 கோடி டாலா் அதிகரித்து 56,406 கோடி டாலராக உள்ளது.

அந்த வகையில் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடா்ந்து ஐந்தாவது வாரமாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 1100 கோடி டாலா் அதிகரித்து 56,116 பில்லியன் டாலராக இருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகபட்சமாக 64,500 டாலரை எட்டியது.

சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கி இந்தக் கையிருப்பைப் பயன்படுத்துவதால் அது குறைந்து வந்தது.

மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் அந்நிய நாணய சொத்துக்கள் (எஃப்சிஏ), 314.1 கோடி டாலா் அதிகரித்து 50,012.5 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

டாலா் மதிப்பில் குறிப்பிடப்படும் இந்த எஃப்சிஏ, அந்நியச் செலாவணி கையிருப்பில் அமெரிக்க டாலா் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில் தங்கம் கையிருப்பு 29.6 கோடி டாலா் குறைந்து 4,072.9 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதிய சொத்து ஒதுக்கீடு (எஸ்டிஆா்) 6.1 கோடி டாலா் அதிகரித்து 1,810.6 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) நாட்டின் கையிருப்பு 20 லட்சம் டாலா் அதிகரித்து 511 கோடி டாலராக இருந்தது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT