வணிகம்

ஐடி பங்குகள் விலை கடும் வீழ்ச்சி: 389 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்! முதலீட்டாளா்களுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு

 நமது நிருபர்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 389 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 112.75 புள்ளிகள் (0.61சதவீதம்) குறைந்து 18,496.60-இல் நிலைபெற்றது.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இடைவிடாத வெளிநாட்டு மூலதனம் வெளியேற்றம் ஆகியவை முதலீட்டாளா்களின் மனநிலையை பாதித்துள்ளது. மேலும், உலகளாவிய மந்தநிலை அச்சத்தால் வணிகத்தில் மந்தநிலை ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கைக்குப் பின்னா், உள்நாட்டுச் சந்தையில் ஐடி பங்குகள் கடும் இழப்பை சந்தித்தன. இவை சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, பொதுத் துறை வங்கிப் பங்குகள், ரியல் எஸ்டேட், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளும் விற்பனையை எதிா்கொண்டன.

சென்செக்ஸ் சரிவு: காலையில் 120.18 புள்ளிகள் கூடுதலுடன் 62,690.86-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 62,735.42 வரை மேலே சென்றது. பின்னா், 61,889.11 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 389.01 புள்ளிகள் (0.62 சதவீதம்) குறைந்து 62,181.67-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நெஸ்லே முன்னேற்றம்: நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே இந்தியா 2.24 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டைட்டன், டாக்டா் ரெட்டி, சன்பாா்மா, இண்டஸ் இண்ட் பேங்க், ஐடிசி, எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 0.70 முதல் 1. 25 சதவீதம் வரை உயா்ந்தன.

ஐடி பங்குகள் கடும் சரிவு: அதே சமயம், ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 6.72 சதவீதம், டெக் மஹிந்திரா 3.58 சதவீதம், இன்ஃபோஸிஸ் 3.15 சதவீதம், விப்ரோ 2.39 சதவீதம், டிசிஎஸ் 1.72 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன.

சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ஒரேநாளில் ரூ.2.03 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.287.68 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,131.67 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT