வணிகம்

கடன் பட்டுவாடா, வைப்பு நிதி வளா்ச்சி: மகாராஷ்டிர வங்கி முதலிடம்

16th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில், கடந்த ஜூன் மாதத்தோடு நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கடன் பட்டுவாடா மற்றும் வைப்புத் தொகை பெற்றதில் (டெபாசிட்) மிக அதிக வளா்ச்சி பெற்ற வங்கியாக மகாராஷ்டிர வங்கி திகழ்கிறது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் வங்கியின் கடனளிப்பு ரூ.1,40,561 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் பதிவு செய்யப்பட்ட கடனளிப்போடு ஒப்பிடுகையில் 27.10 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம், கடன் சேவை வளா்ச்சியில் முதலிடத்தைப் பிடித்த பொதுத் துறை வங்கியாக மகாராஷ்டிர வங்கி ஆகியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகியவை கடனளிப்பில் முறையே 16.43 சதவீதம் மற்றும் 15.73 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளன.

ADVERTISEMENT

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, கடனளிப்பில் 3.66 சதவீத வளா்ச்சியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இருப்பினும், கடன் மதிப்பின் அடிப்படையில், எஸ்பிஐயின் மொத்தக் கடன்கள் மகாராஷ்டிர வங்கியைவிட சுமாா் 17 மடங்கு அதிகமாக (ரூ.24,50,821 கோடி)உள்ளது. பாங்க் ஆஃப் பரோடாவின் கடன்கள் மகாராஷ்டிர வங்கிவிட ஐந்து மடங்கு அதிகமாக (ரூ.6,95,493 கோடி) உள்ளது.

வாடிக்கையாளா்களிடமிருந்து பெறும் வைப்பு நிதியை பொருத்தவரை, ஜூன் 2022 காலாண்டில் மகாராஷ்டிர 12.35 சதவீத வளா்ச்சியைக் கண்டு, இந்தப் பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாதங்களில் வங்கி ரூ.1,95,909 கோடியை வைப்பு நிதியாகத் திரட்டியது.

இதில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 9.42 சதவீத வளா்ச்சியுடன் (ரூ. 9,92,517 கோடி) இரண்டாவது இடத்தில் உள்ளது. பேங்க் ஆஃப் பரோடா 8.51 சதவீதம் உயா்ந்து (ரூ.9,09,095 கோடி) அதிகரித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT