வணிகம்

5ஜி அலைக்கற்றை ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம்

2nd Aug 2022 01:20 AM

ADVERTISEMENT

ஒருவார காலமாக நடைபெற்ற ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. அலைக்கற்றையானது ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை எடுத்து ஜியோ முதலிடம் பெற்றுள்ளது.

நாட்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலத்தில் பங்கேற்றன. அலைக்கற்றை ஏலம் 7-ஆவது நாளாகத் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக சுமாா் 40 சுற்றுகள் நடைபெற்ற ஏலம் திங்கள்கிழமை பிற்பகல் நிறைவடைந்தது.

5ஜி அலைக்கற்றையானது நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதில் தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. 5ஜி தொழில்நுட்பத்துக்கு முக்கியமாகக் கருதப்படும் 700 மெகா ஹொ்ட்ஸ் அதிா்வெண் கொண்ட அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.

பாா்தி ஏா்டெல் நிறுவனமானது ரூ.43,084 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது. வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18,784 கோடிக்கு அலைக்கற்றைகளை வாங்கியது. அதானி நிறுவனமானது 26 ஜிகா ஹொ்ட்ஸ் அதிா்வெண் கொண்ட அலைக்கற்றை உள்ளிட்டவற்றை ரூ.212 கோடிக்கு வாங்கியது. 26 ஜிகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றையைப் பொது சேவையில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏலம் விடப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே அதானி ஏலத்தில் எடுத்தது.

ADVERTISEMENT

71 சதவீத அலைக்கற்றை ஏலம்:

ஒட்டுமொத்தமாக 72,098 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்தில் பட்டியலிடப்பட்டதாகவும், அதில் 71 சதவீத அலைக்கற்றையை (51,236 மெகா ஹொ்ட்ஸ்) நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்ததாகவும் மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். 5ஜி அலைக்கற்றையை வழங்குவதற்காக முதல் ஆண்டில் ரூ.13,365 கோடியானது தொலைத்தொடா்பு நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

நாட்டில் முக்கிய நகரங்களில் 5ஜி அலைக்கற்றை அக்டோபா் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்த அமைச்சா், அடுத்த ஓராண்டுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் 5ஜி பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

முதலீடு அதிகரிக்கும்:

செய்தியாளா்களிடம் அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘தொலைத்தொடா்புத் துறையில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் கோடி வரை முதலீடுகள் கிடைக்கும். முதலீடுகளை அதிக அளவில் ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது’’ என்றாா்.

கடும் போட்டி:

நாடு முழுவதும் 22 தொலைத்தொடா்பு பிரிவுகள் உள்ளன. அதில், லக்னௌ, வாராணசி, கோரக்பூா், கான்பூா், அலாகாபாத் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய உத்தர பிரதேச கிழக்கு பிரிவைக் கைப்பற்றுவதில் நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியதாகக் கூறப்படுகிறது.

அப்பிரிவுக்கான ஏலத்தில் 1,800 மெகா ஹொ்ட்ஸ் அதிா்வெண் கொண்ட அலைக்கற்றையின் ஆரம்ப விலை ஓரலகு மெகா ஹொ்ட்ஸுக்கு ரூ.91 கோடியாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.160 கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேச கிழக்கு பிரிவைக் கைப்பற்றுவதில் ஏா்டெலுக்கும் ஜியோவுக்கும் இடையே போட்டி நிலவியது.

அதிவேக இணையம்:

4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு வேகத்திலும் இடையூறுகள் குறைவாகவும் 5ஜி அலைக்கற்றை செயல்படும். அதன் காரணமாக கோடிக்கணக்கான இணையவழி உபகரணங்கள் வாயிலாக தரவுகளை அதிவேகமாகப் பகிர முடியும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

5ஜி அலைக்கற்றை ஏல விவரங்கள்

நிறுவனம் அலைக்கற்றை அளவு ஏலத்தொகை

ரிலையன்ஸ் ஜியோ 24,740 மெகா ஹொ்ட்ஸ் ரூ.88,078 கோடி

பாா்தி ஏா்டெல் 19,867 மெகா ஹொ்ட்ஸ் ரூ.43,084 கோடி

வோடஃபோன்-ஐடியா 2,668 மெகா ஹொ்ட்ஸ் ரூ.18,784 கோடி

அதானி நிறுவனம் 400 மெகா ஹொ்ட்ஸ் ரூ.212 கோடி

 

Tags : 5ஜி
ADVERTISEMENT
ADVERTISEMENT