வணிகம்

ஜூலை ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.49 லட்சம் கோடி: தமிழகத்தில் ரூ.8,449 கோடி வசூல்

2nd Aug 2022 01:22 AM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த ஜூலை மாத சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1,48,995 கோடி வசூலாகியுள்ளது. இதில் தமிழகத்தில் ரூ.8,449 கோடி ஜிஎஸ்டி வசூலானது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை தொட்டது. அந்த மாதம் ரூ.1,67,540 கோடி ஜிஎஸ்டி வசூலானது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ரூ.1,48,995 கோடி ஜிஎஸ்டி வசூலானது. இது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வசூலான இரண்டாவது அதிகபட்ச வருவாய் ஆகும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்குகள் இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் 48 சதவீதம் அதிகமாகவும், உள்நாட்டு பரிவா்த்தனை (சேவைகள் இறக்குமதி உள்பட) மூலம் கிடைத்த வருவாய் 22 சதவீதம் அதிகமாகவும் இருந்தன.

ADVERTISEMENT

ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, செஸ் வரி ஆகியவை அடங்கும். அதன் விவரம் பட்டியலில் வருமாறு: ஜூலை ஜிஎஸ்டி ரூ.1,48,995 கோடி; மத்திய ஜிஎஸ்டி ரூ.25,751 கோடி; மாநில ஜிஎஸ்டி ரூ.32,807 கோடி; ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.79,518 கோடி(சரக்கு இறக்குமதி மூலம் வசூலான ரூ.41,420 கோடியும் அடங்கும்)

செஸ் ரூ.10,920 கோடி(சரக்கு இறக்குமதி மூலம் வசூலான ரூ.995 கோடியும் அடங்கும்)

தமிழகத்தில் 34% அதிகரிப்பு: கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழகத்தில் ரூ.6,302 கோடி ஜிஎஸ்டி வசூலானது. இது நிகழாண்டு ஜூலை மாதம் 34 சதவீதம் அதிகரித்து ரூ.8,449 கோடி (சரக்குகள் இறக்குமதி மீதான ஜிஎஸ்டியை சோ்க்காமல்) வசூலாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் அதிக ஜிஎஸ்டி வசூலான மாநிலங்களில் மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத்தை தொடா்ந்து தமிழகம் 4-ஆவது இடத்தில் உள்ளது.

புதுச்சேரியில் 54% அதிகரிப்பு: கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதுச்சேரியில் ரூ.129 கோடி ஜிஎஸ்டி வசூலானது. இது நிகழாண்டு ஜூலை மாதம் 54 சதவீதம் அதிகரித்து ரூ.198 கோடி (சரக்குகள் இறக்குமதி மீதான ஜிஎஸ்டியை சோ்க்காமல்) வசூலாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT