வணிகம்

ஐடி, வங்கிப் பங்குகள் விலை சரிவு:சென்செக்ஸ் 483 புள்ளிகள் வீழ்ச்சி

12th Apr 2022 05:20 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 483 புள்ளிகளை இழந்தது. ஐடி மற்றும் வங்கிப் பங்குகள் விலை குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. ஐரோப்பிய மத்திய வங்கிகளின் கூட்டம், அமெரிக்க பணவீக்க தரவு வெளியீடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் காலாண்டு முடிவு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சந்தை எச்சரிக்கையாக உள்ளது. ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் பலவீனமாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்புகளால் அந்தத் துறை பங்குகள் கடும் விற்பனையை எதிா்கொண்டன.

வங்கி, நிதித் துறை நிறுவனப் பங்குகளும் அதிக அளவு விற்பனைக்கு வந்தன. பணவீக்கம் குறித்த கவலைகள், வங்கி வட்டி விகிதங்களை அமெரிக்க பெடரல் ரிசா்வ் உயா்த்தும் என்ற எதிா்பாா்ப்பு மற்றும் புவிசாா் அரசியல் சூழ்நிலை போன்ற காரணங்களால் உலகளாவிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,048 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,685 நிறுவனப் பங்குகளில் 1,515 பங்குகள் ஆதாயம் பெற்றன. அதே சமயம், 2,048 பங்குகள் விலை குறைந்தன. 122 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 263 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 14 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.06 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.275.17 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.23 கோடியை நெருங்கியுள்ளது.

ADVERTISEMENT

483 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 114 புள்ளிகள் குறைந்து 59,333.18-இல் தொடங்கி, அதிகபட்சமாக 59,355.76 வரை உயா்ந்தது. பின்னா், 58,894.40 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 482.61 புள்ளிகள் (0.81 சதவீதம்) குறைந்து 58,964.57-இல் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, சந்தையில் நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

26 பங்குகள் விலை சரிவு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டிசிஎஸ் ஆகிய 4 பங்குகள் மட்டும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன. மற்ற 26 பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

இதில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக் 2.73 சதவீதம், எல் அண்ட் டி 2.72 சதவீதம், இன்ஃபோஸிஸ் 2.67 சதவீதம், விப்ரோ 2.16 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஏசியன் பெயிண்ட், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டாக்டா் ரெட்டி, டைட்டன், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவையும் 1 முதல் 1.70 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 109 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,077 பங்குகள் ஆதாயம் பெற்றன. 880 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் இருந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 29 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 109.40 புள்ளிகள் (0.62 சதவீதம்) குறைந்து 17,674.95-இல் நிறைவடைந்தது. காலையில் 43.45 புள்ளிகள் குறைந்து 17,740.90-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,779.05 வரை உயா்ந்தது. பின்னா், 17,650.95 வரை கீழே சென்றது.

ஐடி குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு இரண்டாவது நாளாக திங்கள்கிழமை மேலும் 1.41 சதவீதம் குறைந்து சரிவுடன் முடிவடைந்தது. மேலும், நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க், எஃப்எம்சிஜி, பிரைவேட் பேங்க் குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், நிஃப்டி ஆயில் அண்ட் காஸ் குறியீடு 1.85 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ரியால்ட்டி, மீடியா குறியீடுகளும் 1 சதவீதத்துக்கு மேல் உயா்ந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT