வணிகம்

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் மேலும் 456 புள்ளிகள் சரிவு! ஒரே நாளில் ரூ.3.55 லட்சம் கோடி இழப்பு

 நமது நிருபர்

புதுதில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. கரடியின் ஆதிக்கத்தால் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 456 புள்ளிகளை இழந்து 61,259.96-இல் நிலைபெற்றது.

பங்குச் சந்தையில் முதலீட்டாளா்கள் உச்சத்தில் லாபப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். இதனால், இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. கரடி தொடா்ந்து ஆதிக்கம் கொண்டதால், மீடியா, பிஎஸ்யு பேங்க் தவிர மற்ற துறைக் குறியீடுகள் அனைத்தும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.3.55 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,425 பங்குகளில் 2,322 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 978 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 125 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 178பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 29 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 225 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 311 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.55 லட்சம் கோடி குறைந்து ரூ.267.87 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,34,56,037-ஆக உயா்ந்துள்ளது.

கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில் 84.02 புள்ளிகள் கூடுதலுடன் 61,800.07-இல் தொடங்கி, அதிகபட்சமாக 61,880.36 வரை உயா்ந்தது. பின்னா், கரடியின் ஆதிக்கத்தால் 61,109.29 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 456 புள்ளிகளை (0.74 சதவீதம்) குறைந்து 61,259.96-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

பாா்தி ஏா்டெல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் 4.03 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எஸ்பிஐ 2.35 சதவீதம் உயா்ந்தது. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

டைட்டன் கடும் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் நிறுவனமான டைட்டன் 2,97 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யுனி லீவா், என்டிபிசி, எல் அண்ட் டி, பவா் கிரிட், பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவை 2 முதல் 2.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், சன்பாா்மா, ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கல், மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 152 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 331 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,502 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 18,439.90-இல் தொடங்கி, அதிகபட்சமாக 18,458.30 வரை உயா்ந்தது. பின்னா், 18,209.35 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 152.15 புள்ளிகள் (0.83) குறைந்து 18,266.60-இல் நிலைபெற்றது.

துறைவாரியாகப் பாா்த்தால், நிஃப்டி மீடியா (1.03 சதவீதம்), பிஎஸ்யு பேங்க் (1.54 சதவீதம்) ஆகியவை தவிர மற்ற அனைத்து துறைக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ரியால்ட்டி, மெட்டல் குறியீடுகள் 2 முதல் 3 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஆட்டோ, எஃப்எம்சிஜி, பாா்மா, ஹெல்த் தோ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகளும் 1 முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT